இருண்ட கண்டம்

0
vm343

– ஆபிரிக்காவின் புதிய கலங்கரை விளக்கு இப்ராகிம் ராறோ
ஏலையா க. முருகதாசன் – யேர்மனி

ஒருகாலத்தில் “இருண்ட கண்டம்” என அவமதிக்கப்பட்ட ஆபிரிக்கா இன்று புதிய ஒளியில் திகழ்கிறது. அந்த ஒளியின் நாயகன் புஸ்கினோ பஸோ நாட்டின் இளம் ஜனாதிபதி இப்ராகிம் ராறோ. 37 வயதில் அவர் தம் நாட்டை மட்டுமல்ல, முழு ஆபிரிக்காவையும் தன்னம்பிக்கை பாதையில் வழிநடத்தி வருகிறார்.

பள்ளிக் காலங்களில் பாடநூல்கள் ஆபிரிக்காவை “இருண்ட கண்டம்” என குறிப்பிடின. குழந்தைகளாக இருந்த நாம், அங்கு செல்ல முடியாத பயங்கரமான நிலம் என்று நினைத்தோம். உண்மையில் “இருள்” என்பது கருப்பு நிற மக்களை அவமதிக்கும் வெள்ளை இனப் பாரபட்சத்தின் வெளிப்பாடு. ஆசிரியர்களும் இதனை சுட்டிக்காட்டாமல், நிறம் சார்ந்த ஏற்றத்தாழ்வை அறியாமலே கற்பித்தனர். இதனால் மனித சமூகம் மாசடைந்தது.

ஆபிரிக்கா மண்ணே பொன் விளையும் பூமி. அங்கு விளையாத பயிரோ, கனிமமோ இல்லை. அட்லாண்டிக், இந்து, தென் சமுத்திரம் ஆகிய மூன்று கடல்களால் சூழப்பட்ட இக்கண்டம் 54 நாடுகளைக் கொண்டது. பொன், வைரம், யுரேனியம், நிலக்கரி, பிளாட்டினம் போன்ற கனிமங்கள் ஆபிரிக்காவை செழிப்பின் அடையாளமாக்கின. ஆனாலும், இந்த செல்வத்தை சுரண்டவே ஐரோப்பிய வல்லாதிக்க நாடுகள் கருப்பின மக்களை அறியாமை, வறுமை, நாகரீகமின்மை ஆகியவைகளில் சிக்கவைத்தன.

உணவுப் பஞ்சம் இயற்கையின் விளைவு அல்ல, செயற்கையாக உருவாக்கப்பட்டது. ஐரோப்பியர்கள் ஆபிரிக்க நாடுகளை தொழில்நுட்ப வளர்ச்சியில் பின்தங்கவைத்து, அவர்களின் வளங்களை சுரண்டினர். இதனை மறைக்க சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் பல அமைப்புகள் செயல்பட்டன. வெளியில் உதவியாளர்கள் போல தோன்றிய இவர்கள் உளவுத்துறைகளின் பிரதிநிதிகள். மக்கள் அரசியல் சிந்தனைகளை அறிந்து, அதன்படி உள்நாட்டு கிளர்ச்சிகளை ஏற்படுத்தி, நாடுகளின் நிலைப்பாட்டை தளர்த்தினர்.

ஆபிரிக்க மக்களிடையேயான மொழி, மத, இன வேறுபாடுகளைக் கையிலெடுத்து, “சிறுபான்மையினர் ஒடுக்கப்படுகின்றனர்” என்ற பெயரில் மோதல்களை தூண்டினர். இதன் நோக்கம் ஆபிரிக்காவின் செல்வ வளங்களை சுரண்டுவது. ஆனால் இப்போது ஆபிரிக்கா விழித்தெழுகிறது. “உதவி” என்ற பெயரில் வந்த சுரண்டலின் முகமூடி கிழிக்கப்பட்டுள்ளது.

இந்த விழிப்புணர்வுக்கு வழிகாட்டி இப்ராகிம் ராறோ. இராணுவக் கப்டனாக இருந்து புரட்சியின் வழியாக ஜனாதிபதியாக உயர்ந்த அவர், மக்களுடன் கலந்த தலைவன். “நான் உங்கள் ஜனாதிபதி அல்ல, உங்கள் சகோதரன்” என்று கூறும் அவர், மக்கள் இதயத்தை வென்றுள்ளார். புஸ்கினோ பஸோவின் மக்கள் அவரை ஒரு அரசியல்வாதியாக அல்ல, தங்கள் குடும்பத்தினராகக் காண்கிறார்கள். இதுவே அவரது வலிமை.

காலனித்துவ நாடான பிரான்ஸ், இந்நாட்டின் தற்சார்பு எழுச்சியை எதிர்பார்க்கவே இல்லை. ஆனால் இப்ராகிம் ராறோவின் தலைமையில் புஸ்கினோ பஸோ தன்னிறைவு பெற்றுள்ளது. தங்கள் பணத்தைத் தாமே அச்சிடும் நாடாக மாறியுள்ளது; விமான உற்பத்தி, மின்சாரக் கார்கள், கைப்பேசிகள், மருத்துவமனைகள், கல்விக் கூடங்கள், நவீன வீதிகள், ரயில் பாதைகள், விவசாய அபிவிருத்தி என பல துறைகளில் முன்னேற்றம் கண்டுள்ளது.

புஸ்கினோ பஸோவின் அமைச்சரவை ஒரே நோக்குடன் செயல்படுகிறது. மக்களுடன் நேரடியாக உரையாடும் இப்ராகிம், அரசியலில் புதிய ஒழுக்கத்தை உருவாக்கியுள்ளார். இதனால் அவர் ஒரு தலைவர் மட்டுமல்ல, ஆபிரிக்காவின் கலங்கரை விளக்கு எனப் போற்றப்படுகிறார்.

ஒருகாலத்தில் “கருப்பு நிறம்” நாகரீகமின்மையின் அடையாளம் என கருதப்பட்டது. ஆனால் இன்று அது பெருமையின் நிறம். ஆபிரிக்காவின் இளம் தலைமுறை தங்களது செல்வத்தையும், மரியாதையையும் மீட்டெடுத்து வருகிறது. உலக நாடுகள் இதை கண்டு ஆச்சரியப்படுகின்றன. “இருண்ட கண்டம்” என அழைக்கப்பட்ட ஆபிரிக்கா இன்று ஒளி வீசும் கண்டமாக மாறியுள்ளது.

இப்ராகிம் ராறோவின் எழுச்சி, தன்னம்பிக்கை, மக்களுடன் கலக்கும் ஆட்சி முறை மற்ற ஆபிரிக்க நாடுகளுக்கும் முன்மாதிரி. அவர் நிரூபித்துள்ளார் ஒரு நாடு தன்னுடைய செல்வத்தை உணர்ந்து, மக்களின் ஒற்றுமையால் எழுந்தால், எந்த வல்லாதிக்கத்தையும் வெல்ல முடியும்.

ஆபிரிக்காவின் ஒளியை அணைத்துவிட முடியாது. அந்த ஒளியைப் பரப்பும் கலங்கரை விளக்காக நின்று கொண்டிருக்கிறார் இப்ராகிம் ராறோ புதிய ஆபிரிக்காவின் முகம், நம்பிக்கையின் சின்னம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *