கைலாயம் கொண்ட கைலாசநாதர் திருக்கோயில்..!
கட்டுரை-படங்கள் மதுரை ஆர்.கணேசன்
தமிழகத்தில் “..கோயில் நகரம் என்றால் காஞ்சிபுரம் எனச்சொல்லுவார்கள், காஞ்சிபட்டாக ஜொலிக்கும் இந்நகரம் பக்தியாலும் புகழ் சேர்க்கிறது..” என்றால் மிகையல்ல..!
பல்லவ மன்னர்கள் வடபகுதிகளை ஆண்ட பலதிருக்கோயில்களைக் கட்டியிருந்தாலும் மரம், செங்கல், சுண்ணாம்பு, உலோகம் பயன்படுத்தாமல் முழுவதும் கற்றளியாகவே ஓர் ஆலயம் அமைக்க வேண்டும் என்ற தீராத ஆசை அம்மன்னர்களுக்கு இருந்தது. அதன் வெளிப்பாடாக எழுப்பப்பட்டதே காஞ்சிபுரம் “..அருள்மிகு ஸ்ரீகைலாச நாதர் திருக்கோயில் ஆகும், மிகவும் பழமை வாய்ந்த இக்கோயில் தென் திசை கைலாயம்..” என்றும் அழைக்கப்படுகிறது..!
காஞ்சிபுரம் மேற்கு எல்லையில் ஓடும் வேகவதி ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஸ்ரீகைலாசநாதர் திருக்கோயில் இக்கோயில் கி.பி.,7ஆம் நூற்றாண்டின் இறுதியில் கட்டத் தொடங்கி 8 ஆம் நூற்றாண்டில் கட்டிமு டிக்கப் பட்டிருக்கிறது.
முதலாம் மகேந்திர வர்ம பல்லவ மன்னனின் மகன் முதலாம் நரசிம்ம பல்லவ மன்னன் (மாமல்லன்) இவனுடைய கொள்ளு பேரன் இரண்டாம் நரசிம்ம பல்லவ மன்னன் என்கிற “..இராஜசிம்ம பல்லவமன்னன்..” ஆட்சி க் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டது. ஆன்மிகப் பெரியோர்கள் ஸ்ரீகைலாசநாதர் கோயிலை “ கோயில்களுக்கெல்லாம் கோயில்..” என்று அழைக்கின்றனர், அத்துடன் ஆகமவிதிகள் ஏற்படுவதற்கு முன்பே கட்டப்பட்ட கோயில் என்பதால் இங்கு கொடிமரம், பலி பீடம் ஆகியவை கிடையாது. எம்பெருமான் கைலாசநாதரின் லிங்கத்திருமேனி கருவறையில் கிழக்கு நோக்கி அமையப் பெற்றுருக்கிறது, ஆஜானுபாகுவான எட்டடி உயரத்தில் ஒரே கல்லினால் உருவாக் கப்பட்டிருக்கிறலிங்கத்தில் பதினாறு பட்டைகள் உள்ளதால் “ ஷோடசலிங்கம் ” எனக்கூறப்படுகிறது. அத்துடன் கருவறையின் பின்புறச் சுவரில் சிவபெருமான், ஏலவார்குழலி, முருகனுடன் “ சோமாஸ்கந்தர் ” வடிவில் புடைப்புச் சிற்பமாகக் காட்சி தருகின்றனர்.
இக்கருவறையைச் சுற்றி ஒரு நபர் தரையில் படுத்து ஊர்ந்து செல்லக்கூடிய அளவில் சதுர வடிவிலான பாதை உள்ளது கருவறையை வலம் வர விரும்பும் பக்தர்கள் இவ்வழியாகச் சென்று மீண்டும் தரையில் படுத்து ஊர்ந்து கொண்டே வெளியே வரவேண்டும் இதற்கு “ சாந்தார நாழிகை ” என்று பெயர் இதனுள்ளே சென்று வந்தால் மறுபிறவி கிடையாது எனச்சொல்லப்படுகிறது. கருவறை கைலாயம் போன்ற அமைப்புடன் உள்ளதால் இக்கோயிலை “..பூலோக கைலாயம்..” என்கிறார்கள், கருவறை விமானம் ராஜகோபுரத்தை விட பெரியதாக அமைக்கப்பட்டிருக்கிறது, மூலவர் சன்னதியைச் சுற்றி வரும் போது பூதக்கணங்களின் சிலைகள் புன்னகை, கோபம், சேட்டைகள் எனப் பல்வேறு முகபாவங்களை வெளிப்படுத்துகின்றன.
சிற்பங்களின் சாம்ராஜ்ஜியத்திற்குள் சென்றது போல உள்ளே பிரகார பகுதிகள் மற்றும் வெளிச் சுற்றுச்சுவர்களில் ஏராளமான சிற்பங்கள் இவைகள் “..பிண்டி..” எனும் மணற் கல்லினால் உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சிவபெருமான், பார்வதி மற்றும் மகாவிஷ்ணுவின் பல்வேறு திருக்கோலங்கள் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளன, மிருதங்கம் வாசிக்கும் தட்சிணாமூர்த்தியை நாள் முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்..!
மகிஷனை அழித்த வெற்றிக்களிப்புடன் விளங்கும் மகிஷாசுரமர்த்தினி, இரண்யனை வதம் செய்யும் காட்சியில் நரசிம்ம மூர்த்தியை தரிசனம் செய்யும் பொழுது “ எங்கே அவர் பாறையைப் பிளந்து கொண்டு வெளியே வந்து விடுவாரோ ? என்கிற பயத்தை உண்டாக்குகிறது..!
ஏகாதசருத்திரர், விநாயகர்,பிட்சாடனர்,கங்காளர்,திரிபுராந்தகர்,கொற்றவை, துர்க்கை, ஜேஷ்டாதேவி, கஜசம்ஹாரமூர்த்தி, சப்தகன்னியர், பன்னிரு ஆதித்தியர்கள், பெண் தெய்வங்கள், நடன மங்கைகள், சிவபெருமானின் ஆடல் திருக் கோலங்கள், பழங்கால மூலிகை ஓவியங்கள் உள்பட அனைத்தும் நமக்குள் மீளாத பிரமிப்பை ஏற்படுத்துகிறது. இந்திய தொல்லியல் துறை பராமரிப்பில் உள்ள இக்கோயிலின் நுழைவு வாயில் முன்பகுதியில் வரிசையாக தேவ குளிகைகள் எனும் எட்டு ஆலயங்கள் உள்ளன. தேவகுளம் எனும் பெரிய கோயில்கள் சதுரவடிவில் நான்கு திசையெங்கும் பார்க்கும் விதமாக அத்துடன் சிவபெருமான் அனுக்கிரஹ மூர்த்தங்களாகவும், சம்ஹாரமூர்த்தங்களா கவும் “..ஐம்பத்தெட்டு சிற்றாலயங்களில்..” அமைந்திருப்பது கூடுதல் சிறப்பாகும்..!
இராஜ சிம்ம பல்லவ மன்னன் இக்கோயிலை நிர்மாணித்ததால் அவனது குணாதிசயத்தை வெளிப்படுத்தும் நோக்கில் இக்கோயிலெங்கும் சிம்மயா ளிகள் தூண்களில் வரிசையாகச் செதுக்கப்பட்டிருப்பது நம்மை கைநீட்டி அழைப்பது போன்றிருக்கும்..!மகாசிவராத்திரி வெகுவிமர்சையாகக் கொண்டாடப்படுவதுடன் பிரதோஷ நாட்களில் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன.
எங்கே இருக்கு..? காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் இத்திருக்கோயில் அமைந் துள்ளது.காலை 9மணி முதல் 12.30 மணி, மாலை மணி முதல் 4.௦௦ மணி முதல் 6.30 மணி வரை மட்டுமே இக்கோயில் நடை திறந்திருக்கும்.
![]()
