பழகிய தினம், அழகிய மனம்
- சேவியர் தமிழ்நாடு.
கிறிஸ்து பிறந்து இரண்டாயிரம் ஆண்டுகள கடந்து விட்டன, இன்று நமக்கு கிறிஸ்மஸ் என்ன சொல்கிறது ? ஒரு யூத சமூகத்தில் நடந்த நிகழ்வு, இன்றைய மனுக்குலத்துக்கு என்ன சொல்கிறது. பின் தங்கிய சூழலில் நடந்த ஒரு பிறப்பு நவீன தொழில்நுட்ப யுகத்தில் என்ன சொல்கிறது ? காலம் தோறும் செய்திகள் உருமாற்றம் அடைவது வாழ்க்கை நியதி தானே ? எனில் கிறிஸ்மஸ் இன்றைக்கு எதைத் தான் போதிக்கிறது !
உண்மையில் கிறிஸ்மஸ் சொல்லும் செய்தி சற்றும் மாறவே இல்லை. ஆனால் செய்தியைக் கேட்கும் நாம் தான் மாறிப் போயிருக்கிறோம்!
கிறிஸ்மஸ் இன்னும் அன்பின் முரசாகவே ஒலித்துக் கொண்டிருக்கிறது, நாம் தான் தன்னலச் சுழலில் சிக்கித் திளைக்கிறோம். கிறிஸ்மஸ் என்பது நம் வீட்டைச் சுற்றி போடப்பட்டிருக்கும் விளக்குகள் எத்தனை வெளிச்சமாய் இருக்கின்றன என்பதில் வெளிப்படுவதில்லை. நமது வாழ்க்கை எத்தனை வெளிச்சமாய் இருக்கிறது என்பதில் தான் அது வெளிப்படும். வாழ்த்துகளை எப்படிப் பரிமாறிகிறோம் என்பதில் அல்ல, அன்பை எப்படிப் பரிமாறுகிறோம் என்பதில் தான் கிறிஸ்மஸ் ஒளிரும். கிறிஸ்மஸ{க்குத் தேவை நவீனமயம் அல்ல, புதிய மனம்.
இன்றும் அந்த பெத்லேகேம் பாலகன் சிறு பாலனாய்த் தான் கொண்டாடப்படுகிறான். அந்தப் பெத்லேகேமிலிருந்து மெல்லிய குரல் நம் காதுகளில் ஒலிக்கிறது. ‘அமைதியாய் இரு, நான் உன்னோடு இருக்கிறேன் !’
மின்னலடிக்கும் நட்சத்திரங்கள், வானுயர்ந்த டிஜிடல் கம்பங்கள், வெளிச்சத்தைக் கட்டி வைத்த கிறிஸ்மஸ் மரங்கள், பனித் தாடியில் அசைந்து நடக்கும் கிறிஸ்மஸ் தாத்தாக்கள் – இவற்றில் கிறிஸ்மஸ் வாழவில்லை. ‘வார்த்தை மனு உருவானார், நம்மிடையே குடிகொண்டார்’ எனும் வார்த்தையில் வாழ்கிறது.
கிறிஸ்மஸ் சொல்லும் செய்தி இன்றும் அதே செய்தி தான். இயேசு நம்மைத் தேடி வருகிறார். வைஃபை வலைகளில் சிக்குண்டு கிடக்கும் டிஜிடல் நோயாளிகளுக்கான மனித நேய மருத்துவராய் அவர் வருகிறார். கடவுள் தொலைவில் இல்லை, இதோ நம்மிடையே இருக்கிறார். அழைக்கும் தூரத்தில் இருக்கிறார். அதுவே கிறிஸ்மஸ் சொல்லும் முதல் செய்தி! ‘உலகிற்கு அமைதி உண்டாகுக’ என்பதே கிறிஸ்து பிறந்ததும் சொல்லப்பட்ட முதல் செய்தி. இன்றைய யுத்தங்களும், வன்முறைகளும், அதிகார அழுத்தங்களும் நம்மிடம் சொல்லும் செய்தி, ‘அமைதியை உருவாக்குங்கள்’ என்பதே. அன்றைய சூழலில் உரைக்கப்பட்ட செய்தி உண்மையில் அன்றைய தினத்தை விட இன்றைக்கே அதிகமாய்த் தேவைப்படுகிறது !
எளிமையே வலிமை ! எனும் உயரிய செய்தி, தொழுவம் கொடுத்த இன்னொரு செய்தி. இயேசுவைச் சுமந்ததும் எளிமை, இயேசு சுமந்ததும் எளிமை! நமது வாழ்க்கையின் பக்கங்களெங்கும் எளிமை நிரம்பியிருக்கையில் அங்கே கிறிஸ்மஸின் வாசமடிக்கும்.
ஆனந்தம் விற்பனைக்கல்ல! உண்மையான ஆனந்தம் ஷாப்பிங் பைகளில் இல்லை, புல்லணையின் கந்தைத் துணியில் தான் இருந்தது. இடையர்கள் இயேசுவைக் காண வந்தபோது பரிசுகளை அள்ளிக் கொண்டு ஓடவில்லை. தங்களையே பரிசுகளாய் சுமந்து கொண்டு ஓடினார்கள். அவரின் பாதத்தில் விழுந்தார்கள். நற்செய்தி அறிவித்தபடி திரும்பினார்கள்! கடவுள் சாதாரண மனிதர்களைக் கொண்டே அசாதாரண செயல்களைச் செய்கிறார். ஒரு சாதாரண கிராமத்துப் பெண்ணான மரியா, ஒரு எளிய தச்சுத் தொழிலாளியான யோசேப்பு இவர்களைக் கொண்டே மனுக்குலத்தின் அதிக பட்ச மகிமைச் செயலைச் செய்கிறார். நாம் வசதியாய் இருக்கிறோமா என்பதல்ல, தயாராய் இருக்கிறோமா என்பதே முக்கியம் ஏனெனில் விண்ணகம் ஹீரோக்களைத் தேடுவதில்லை, எளிய இதயங்களையே ஹீரோக்களாக மாற்றுகிறது.
ஒளி இருளை வெல்லும் ! எனும் உயரிய செய்தி இன்றும் நமக்கான செய்தியாய் ஒளிர்கிறது.
தீமையை நன்மை வெல்லும்,
பாவத்தை தூய்மை வெல்லும்,
பகையை அன்பு வெல்லும்,
வன்மத்தை மனிதம் வெல்லும் !
அதையே கிறிஸ்மஸ் சொல்லும்.
கிறிஸ்மஸ் வெறுமனே வெளிப்பக்கத்தை வெள்ளையடிக்கும் வெளிச்சமல்ல, இதயத்தைச் சலவை செய்யும் வெளிச்சம். கிறிஸ்மஸ் எப்போதும் காலாவதியாவதில்லை. காரணம், அன்புக்கு காலாவதி என்று ஒன்று இல்லை. ஆதி முதல் இன்று வரை அன்பின் இழை நெகிழ்வாகவும், நிறைவாகவும், மகிழ்வாகவுமே பயணித்துக் கொண்டிருக்கிறது. அந்த அன்பே அமைதியை விதைக்கும் விவசாயியாக மாறி செயலாற்றுகிறது.கிறிஸ்து நம்மிடையே பிறந்தது அன்றைய கிறிஸ்மஸ், அவர் நமக்குள் பிறப்பது இன்றைய கிறிஸ்மஸ். அன்பை விதைக்கும், மனிதம் சுமக்கும் மனிதர்களாய் உருமாறுவோம். அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு நல்வாழ்த்துகள்
![]()
