உணர்வலைகள் 2உள்ளுவதெல்லாம் உயர்வு:நூலகம் ஏறி, இறங்கி விரும்பிய நூல்களைக் காவி வந்துவாசித்த காலம் மலையேறி விட்டது.
கடந்து வந்த பாதையின் தவிப்பும், ஏக்கமும் மனத்துக்குள்ளே இருந்து அரித்துக் கொண்டேயிருக்கும். ஆனால், ஒரு கட்டத்தில் அந்தத் தவிப்பு அசுரவேகத்தில் துடிப்போடு எழும். கண்ணுக்குள்ளே கண்ட காட்சிகள், தூக்கத்தில் மண்டைக்குள் வந்து தட்டி எழுப்பும். கொண்ட கொள்கைகளும், வாழ்ந்த வாழ்க்கையும், பிரிந்த உறவுகளும் தருகின்ற ஏக்கங்களே புலம்பெயர்ந்த மக்களுக்குப் பேனாவைத் திறக்கச் செய்கிறது. தாய்நாட்டில் அமர்ந்திருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தி எழுதத் தொடங்குகின்றார்கள்.
உலகப்பரப்பிலே புலம்பெயர்ந்த மக்களின் படைப்புக்களின் தொகைப் புள்ளிவிபரம் மேலோக்கிச் செல்கிறது. தாயகமண்ணிலும் புலம்பெயர் எழுத்தாளர்கள் அச்சுறுத்தலைத் தருகின்றார்கள். மெச்சத்தக்க இந்த இலக்கியப் பயணத்தில் தமிழ்மொழி எவ்வாறு படைப்புக்களில் நர்த்தனமாடுகின்றது என்பதையே சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.
தாயகத்திலே வாழ்ந்த போது பத்திரிகைகளில் எழுதியவர்கள், செய்தியாளர்கள், சஞ்சிகை வெளியிட்டவர்கள், பத்திரிகை வெளியிட்டவர்கள், தாய்நாட்டில் எழுத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்டவர்கள், இசை கற்றவர்கள், நடனம் கற்றவர்கள், தையல் வேலை செய்தவர்கள், வியாபாரிகள், அறிவிப்பாளர்கள், ஆசிரியர்கள் எனப் பலரும் தவிர்க்கமுடியாத காரணங்களால் புலம்பெயர்ந்தார். இவர்களைத் தவிர பாடசாலைக் கல்வியைப் பூர்த்தி செய்துவிட்டுக் குடும்பப் பெண்களாக இருந்தவர்களும், கல்வியைத் தொடர முடியாதவர்களும் எனப் பல தரப்பினரும் புலம்பெயர்ந்தார்கள்.
புகுந்த நாடு வளம் பொருந்திய நாடுகளாக இருக்கத் தாம் விட்டகுறை தொட்ட குறைகளைத் தொடர வாய்ப்புக்கள் கிடைத்தன. பத்திரிகையாளர்கள், வானொலிகள், எழுத்தாளர்கள் உருவாகத் தளம் அமைத்துக் கொடுத்தார்கள். தமிழில் எழுத்துக்கள்தான் கொட்டிக் கிடக்கின்றனவே. அதனால் மொழி தெரிந்தால், எப்படியும் எழுதலாம் என எழுதத் தொடங்கினார்கள்.
இலக்கணங்கள் தேவையில்லை, எம்முடைய எழுத்துக்களுக்கு அங்கீகாரம் கிடைக்கிறதோ! இல்லையோ! பணம் இருக்கின்றது. எழுதிக் கொட்டுவோம். நூல்களை வெளிக் கொண்டு வருவோம். இவ்வாறாக எழுதும் போது தமிழ் மலினப்படுத்தப்படுகின்றது. பாறைகள் சீராக வெட்டப்படும் போதே அழகான சிற்பம் உருவாகும். அச்சகங்களில் எழுத்துச் சீர்திருத்தம் செய்வார் இல்லை. கணினியில் அச்சடித்து அனுப்பப்படுபவை. அப்படியே அச்சுக்கு வந்து நூலாகி விடுகின்றன.
அதன் தரம் பற்றிய சிந்தனை யாருக்கும் இருப்பதில்லை. நூலுக்குரிய விமர்சனம் செய்பவர்களும் பிழைகளைச் சுட்டிக்காட்டுவதில்லை. சுட்டிக்காட்டினால், எங்கே சுட்டிக்காட்டியவர்களின் படைப்புக்களில் பிழை இருக்கின்றது என்று தேடிப் பிடிப்பர். கண் வெட்டாமல் அதை எடுத்து அலசி ஆராய்வர். விமர்சனம் செய்தவர்களே ஏன் இந்தப் பிழையைச் சுட்டிக்காட்டினோம். என்று தலைமேல் கைவைத்து இருக்கும் படியாகிவிடும்.
கனி இருக்கும் போது காய்களைச் சுவைப்பது போல அழகான சொற்பூங்காவே தமிழில் இருக்கச் சாதாரண பேச்சு வழக்குச் சொற்களைக் கையாளும் போது இரசனையுணர்வு வாசனைக்குச் சுவைப்பதில்லை. புனைகதை இலக்கியங்களில் கதாபாத்திரங்கள் பேச்சுவழக்கில் எழுதப்படல் சிறப்பு. அதில் மண்வாசனை பின்னிக்கிடக்கும். ஆனால் கதாசிரியர் பேசும்போது அழகுதமிழும் தத்துவங்களும் கதைக்கு மெருகேற்றுவதுடன் அறிவை மேல்நோக்கி உயர்த்தும்.
நூலகம் ஏறி, இறங்கி விரும்பிய நூல்களைக் கிலோக்கணக்கில காவி வந்து வாசித்த காலம் மலையேறி விட்டது. புலம்பெயர்ந்த நாட்டில் நல்லதோ கெட்டதோ கையில் தருபவற்றை வாசித்தேயாக வேண்டிய சூழ் நிலைக்குத் தள்ளப்டுகின்றோம். வாசிப்பு என்பதும் ஒரு கற்றல் நடவடிக்கையே. ‘’கண்டது கற்கப் பண்டிதனாவான்’’ என்னும் முதுமொழி உண்டு. கற்பவை காத்திரமாக இருக்கும் பட்சத்தில் பண்டிதனாகலாம். அதனால் வாசிப்பவை காத்திரமாக இருக்க வேண்டும்.
தாம் வாசிப்பதை மட்டுமே வைத்துக் கொண்டு தீர்ப்பு வழங்குகின்ற மேடைப்பேச்சாளரும் இருக்கின்றார்கள். முன்னே முளைத்த காளான்களை விஞ்சி மேலெழுந்து பலன் தருகின்ற நேற்று முளைத்த காளான்களும் இருக்கின்றன. எதுவுமே வாசிக்காமல் யாரோ செய்த விமர்சனத்தை வைத்துக் கொண்டு இலக்கிய உலகிலேயே இவரே ஜாம்பவான் என்று யாரையும் சான்று காட்ட முடியாது. அவரை விஞ்சி வேறொருவர் எழுதலாம். அவரைச் சிலருக்குப் பிடிக்கும். முன்னவர் எழுதிய காலத்தில் இப்போது எழுதுபவர் பிறந்திருக்க வாய்ப்பில்லை. அவர் பிறந்து வளர்ந்து வந்து அல்லது பின்னே பிறந்து சிறந்து எழுதலாம்.
முற்காலத்தே திருக்குறளுக்கு உரை எழுதியவர் பதின்மராவர்,
தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர்
பரிதி பரிமேலழகர் திருமலையர் – மல்லர்
பரிப்பெருமாள் காலிங்கர் வள்ளுவர் நூற்கு
எல்லையுரை செய்தார் இவர்”
என அறியப்படுகின்றது. இவர்களில்
பாலெல்லாம் நல்லாவின் பாலாமோ பாரிலுள்ள
நூலெல்லாம் வள்ளுவர்செய் நூலாமோ – நூலிற்
பரித்தஉரை எல்லாம் பரிமே லழகர்
தெரிதத்உரை யாமோ தெளி”
எனப் பரிமேலழகர் உரையே மிகச் சிறந்தது என நச்சினார்க்கினியார் சான்று பகிர்ந்தார். அதற்காக இப்போது அவர் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியுமா? தற்போது அது ஏற்புடையதல்ல. பல உரைகள் புதிதாக வெளிவந்து விட்டன. எனக்கு மு.வரதராசன் உரையே பிடிக்கும்.
இவ்வாறே தற்கால இலக்கியங்களை எடுத்து நோக்கும் போது எல்லாருக்கும் எல்லாருடைய எழுத்தாற்றலையும் பிடிக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஒருவருக்குப் பிடித்தது வேறு ஒருவருக்குப் பிடிக்காமல் போகலாம்.
புலம்பெயர் இலக்கியங்களிலே தனியொருவரைச் சுட்டிக்காட்டி இவரே புலம்பெயர் இலக்கியங்களில் அறியப்படுகின்றார் என்பது தப்பாகும். தாமரைப் பூவோடு தண்ணீரிலே உடன்பிறந்து, அருகிலேயே வாழ்ந்து கொண்டு, தாமரைப்பூவிலே உள்ள தேனின் சிறப்பை அறியாது, அதனை உண்ணாத தவளைகளாக எத்தனை யோ மக்கள் இருக்கிறார்கள்.
தற்காலத்தில் விளம்பரங்களும், பட்டங்களும், எழுத்தாற்றலுக்கு அரிதாரமாகின்றன. பணமிருந்தால் பட்டங்களைக் கூடையில் சுமக்கலாம், எழுத்துக்கே முடிசூட்டலாம் என்று இருபத்தியோராம் நூற்றாண்டு இலக்கியப் பரப்பு மலிந்துவிட்டது. எல்லாரும் முன்னேற்றம் காண்பது மனத்துக்கு மகிழ்ச்சியே. ஆனால், எல்லாரும் தமிழ்மொழியைப் பிழையின்றி கற்று, அழகுற எழுதிச் சிறப்படைவது அதைவிட மகிழ்ச்சி.
![]()
