நாளை என்னவாகும் — எம் தாய்மொழி

0
vm362

எனது பார்வையில்……..
நிரஞ்சனா செல்வராஜா – யேர்மனி

தமிழர்கள் இலங்கைக்கு குடியேறியதாக இதுவரை எந்த உறுதியான ஆவணமும் இல்லை. எம் தாய்மொழியான தமிழ், ஈழத்தின் வரலாறு, கலாசாரம், போராட்டம், நினைவுகள் ஆகியவற்றை தாங்கி நிற்கும் உயிர் மரபாகும். நம் வாழ்வின் நேர் சாட்சி ஆனால் இன்றைய ஈழத்தமிழர் சமூகத்தில் கவலைக்குரிய மாற்றம் உருவாகியுள்ளது. இளைய தலைமுறையின் பேச்சு மொழி மெதுவாக தாய்மொழியிலிருந்து விலகிக்கொண்டிருக்கிறது. உலகின் பல பகுதிகளில் பிறமொழியினர் ஆர்வத்துடன் தமிழைக் கற்றுக்கொண்டிருக்க, தமிழ் மொழியைக் காப்பாற்ற வேண்டிய நாமே அதைப் புறக்கணிக்கும் நிலை மாறிவிட்டது.

ஈழத்தமிழர்களுக்கு தமிழ் ஒரு சாதாரண மொழியல்ல. அது அடக்குமுறைக்கு எதிரான அடையாளமும், ஒற்றுமையின் அடித்தளமும், எமது அரசியல்—சமூகப் போராட்டங்களின் சுவடுகளும் ஆகும். ஆனால் இன்று இளம் தலைமுறைக்கு தமிழ் “இரண்டாம் மொழி” போல் மாறிவருவது வருத்தத்தைத் தருகிறது. எழுத்துக்களை அறிந்திருந்தாலும், ஆழமான வரலாறு சிலருக்கு தொட்டுசெல்லாமல் போகிறது.

யுத்தத்தால் ஏற்பட்ட சிதறலும், புலம்பெயர்ந்த வாழ்க்கையும், கல்வி வேலைவாய்ப்பு தேவைகளும் குழந்தைகளை ஆங்கிலத்திற்கும் பிற மொழிகளிற்கும் அதிகமாக இட்டுச் செல்கின்றன. வீடுகளுக்குள்ளும் தமிழ் பேசப்படும் நேரம் குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது. பெற்றோர்கள் தமிழ் அறிந்திருந்தும், அவர்கள் வாழும் நாட்டின் மொழியே குழந்தைகளுடன் தொடர்பு கொள்ளும் முதன்மையான மொழியாக மாறுகிறது. இதனால் தாய்மொழியுடனான உணர்ச்சி பிணைப்பு படிப்படியாகச் சிதைகிறது.

புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்தாலும், பிள்ளைகளுக்குப் பிடித்த கலைகள் மற்றும் விளையாட்டுகளைத் தமிழில் கற்றுக்கொடுத்தால், அவர்கள் தாய்மொழியை இயல்பாகவும் விருப்பத்துடனும் கற்றுக்கொள்ளலாம். பாடல், நடனம் போன்ற பிள்ளைகள் ரசிக்கும் செயல்களில் தமிழ் வழிமுறைகளை சேர்த்தால், தமிழ் ஒரு விளையாட்டைப் போலவே எளிதாகிவிடும்.

அதுபோல, கதை சொல்லுதல், தமிழ் ரைம்கள், பழமொழிகள் ஆகியவற்றையும் அறிமுகப்படுத்தினால், பிள்ளைகளின் கவனமும் கற்பனையும் வளர்ந்து, தமிழின் இனிமையும் அழகும் அவர்களுக்கு புரியும்.

மேலும், விளையாட்டுகள், தாவர பராமரிப்பு, சமையல் போன்ற அனுபவச் செயல்களை தமிழில் சொல்லித் தந்தால், பிள்ளைகள் அன்றாட வாழ்வில் தமிழ்ச் சொற்களை இயல்பாகப் பயன்படுத்தத் தொடங்குவார்கள். இவ்வாறு அவர்கள் விரும்பும் செயல்களுடன் தமிழையும் இணைத்துக் கொடுத்தால், வெளிநாட்டில் இருந்தாலும் தமிழ் மீது பாசமும் நம்பிக்கையும் வளர்ந்து கொண்டே இருக்கும்.

தமிழை கற்பிப்பது ஒரு பாடம் அல்ல, அது ஒரு அனுபவம். அந்த அனுபவம் மகிழ்ச்சியானதாய் இருந்தால், பிள்ளைகளின் மனதில் தமிழ் என்றும் மலர்ந்து கொண்டே இருக்கும்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *