“ஏகலைவன்கள் இறப்பதில்லை”

0
vm365

யேர்மனியில் அண்மையில் மறைந்த வில்லிசைக் கலைஞர் நாச்சிமார் கோவிலடி ராஜன் அவர்களை நினைத்து!!!

பொன்.புத்திசிகாமணி,யேர்மனி.

நாச்சிமார்கோவிலடி வில்லிசைக் கலைஞர் ராஜன் இறந்து விட்டார் என்ற செய்தி என் நண்பர் மூலம் கிடைத்தது.
ஆ ! வென அப்படியே இருந்து விட்டேன். முதலில் எனது மனம் நம்ப மறுத்தது. உடன் முகநூலைத் திறந்து பார்த்தேன்.செய்தி உண்மைதான் என்பதை முகநூல் உறுதிப்படுத்தியது. கொஞ்ச நேரம் என்னால் பேசமுடியவில்லை. அவரது முகம் அதில் இருந்து வெளிவரும் அந்தச் சிரிப்பு கண்முன்னே வந்து போனது.கலைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட சிறந்த ஒரு கலைஞன்.

நாட்டிலும் சரி,புலம்பெயர்ந்து யேர்மனிக்கு வந்த போதும் சரி.கலையால் தன்னை தொடர்ந்து நிலைநிறுத்திக் கொண்டு வந்தவர்.வில்லிசையால் இலங்கையில் புகழ்பரப்பி வந்த இந்த கலைஞன் புலம்பெயர்ந்து யேர்மனி வந்த போதும்,அதனை அழிய விடக்கூடாது என நினைத்து ஐரோப்பிய மேடைகளில் வில்லிசைக் கலைஞர் “நாச்சிமார் கோயிலடி” ராஜன் என தன்னை அடையாளப்படுத்தி வந்தார்.

அது மாத்திரமன்றி இந்தக் கலைக்குள் பலரை இணைத்துக் கொண்டு வந்தவர். என்னையும் இதற்குள் இழுத்து பல மேடைகளில் தன்னுடன் பயணிக்கச் செய்தவர்.யேர்மனி கம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் நீலகண்டர் வரலாறு வில்லுப்பாட்டு,நானும் கலந்து கொண்ட நிகழ்வை நினைத்துப் பார்க்கிறேன். அதுவேதான் அவருடன் கலந்து கொண்ட இறுதி நிகழ்ச்சி.அதுமாத்திரமன்றி பட்டிமன்றங்கள் பலவற்றில் எங்களுடன் கலந்து கொண்டு நல்ல கருத்துகளை வழங்கி,பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றவர்.

கவிபாடத் தெரிந்தவர்.இவ்வாறு பன்முகத்திறமை கொண்ட நல்ல கலைஞர் நாடகத்துறையில் சிறப்பான பங்களிப்பை நல்கியவர்.போட்டி நாடகங்களில் கலந்து கொண்டு பல தங்கப்பதக்கங்களை வென்றவர்.பல நாடகக்கலைஞர்களை உருவாக்கி புகழடையச் செய்தவர்.குறும் படங்கள் பல வற்றில் நடித்தது மாத்திரமன்றி வெள்ளித் திரையிலும் தோன்றி ரசிகர்களின் ஆதரவைப் பெற்றவர்.நாடகங்களை எழுதி நடித்து ,இயக்கி பார்வையாளர்களின் கவனத்தைப் பெற்றவர்.தான் எழுதிய நாடகங்களைத் தொகுத்து நூலாக வெளிக் கொணர்ந்தவர்.இவரைப் பற்றி தொடர்ந்து சொல்லிக் கொண்டே போகலாம்.

பல திறமைகள் நிறைந்த நல்ல மனிதர் என்று பொதுவாகவே சொல்லலாம்.

ஒருமுறை பக்கத்து நகரத்தில் ஒரு பட்டிமன்றம்.திரு.குமரன் தலைமையில் நடைபெற்றது.நானும் காலம் சென்றவர்களான ராஜனும்,ராஜன் முருகவேளும் பேச்சாளர்கள்.ஆசிரியர் செந்தமிழ் கோடையிடி குமரன் தலைமையில் நடைபெற்றது.எங்கள் வீட்டிற்கு வந்து றால் உடைச்சு குழம்பு வைச்சு அதிகாலை விடிய மூன்று மணிக்கு சாப்பிட்ட அந்த கலகலப்பான நிகழ்வுகளை இப்போதும் நினைச்சுப் பார்க்கிறேன்.கண்ணீர்தான் வருகிறது.இன்று ராஜனும்,இல்லை ராஜன் முருகவேளும் எங்களுடன் இல்லை அவர்கள் நினைவுகள் மட்டும் என்றும் அழியப் போவதில்லை.

“ஏகலைவன்கள் இறப்பதில்லை.பாரதக்கதையில் துரோணாச்சாரியாரை மானசீகக்குருவாக ஏற்றுக்கொண்டு ஏகலைவன் வில்வித்தையில் புகழ்பெற்றது போல. கலையால் ஈர்க்கப்பட்டு பதினான்கு வயதில் மேடையில் தோன்றிய இவரும் ஒருஏகலைவனே!

இவர் வாழ்ந்த காலத்தில் நாச்சிமார் கோவிலடியில் சின்னமணி என்கிற இன்னுமொரு புகழ்பெற்ற வில்லிசைக் கலைஞர் வாழ்ந்து வந்தார்.அவர்தான் இவரது குருவா என்று சிலர் கேட்கிறார்கள். அவர்தான் மானசீகக்குருவா ? என்ற கேள்வியும் பிறக்கிறது.இருக்கலாம் அப்படிஎன்றும் கடந்து விடலாம். இருந்தாலும் அவர் வாழ்ந்த காலத்திலேயே இவருக்கும் மேடைகள் கிடைத்தன. இவரும் புகழ் பெற்று விளங்கினார் என்பதே உண்மை.

இந்த மனிதர் தமிழிற்கும்,இலக்கியத்திற்கும்,முத்தமிழுக்கும் ஆற்றிய பங்களிப்புகள் மிக அதிகம்.யேர்மனியில் பிறேமன் (டீசநஅநn) என்கிற நகரத்தில் குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்தார்.அங்கே தமிழ்மன்றம் உருவாகுவதற்கு முக்கிய பங்களிப்பை நல்கியதுடன் , தலைவராகவும் இருந்து செயலாற்றியவர்.புலம்பெயர் தமிழ் சிறார்களின் தமிழ் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றியவர்.அவரால் தமிழ் படித்த மாணவி ஒருவர் இவர் இறந்த செய்தி அறிந்து முகநூலில் ஒரு கவிதை எழுதியிருந்தார். உங்களால் நான் இன்று தமிழ் படித்து உயர்ந்து நிற்கிறேன் என்ற பொருள் அடங்கிய கவிதை அது.

இவ்வாறு பல மாணவர்களின் தமிழ் வளர்ச்சிக்கு உதவி இருக்கிறார்.முத்ததமிழ் கலை மன்றத்தினால் ஆண்டுதோறும் விழாக்களைக் கொண்டாடி கலைஞர்களை அழைத்து கௌரவித்து பெருமைப் படுத்தி இருக்கிறார். ;யேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஆரம்பித்த போது தலைவராக இவரே ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.
சில வருடங்களுக்கு முன்யேர்மனியில் நடந்த கார் விபத்தொன்றில் இவர் மயிரிழையில் உயிர் தப்பியிருந்தார். இவரோடு பயணித்த சிறுவர் அமுதம் சஞ்சிகை ஆசிரியர் அமரர் சின்னராஜேஸ்வரன் அந்த இடத்திலேயே மரணித்தார்.உடன் சென்ற அறுவை லோகநாதன்,திருமதி விஜி லோகநாதன் பலத்த காயங்களுடன் உயிர் தப்பியிருந்தார்கள்.இவர்கள் அனைவரும் பட்டிமன்றம் ஒன்றை செய்து விட்டு திரும்பி வந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது. இது நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டது.

18.11.25 ல் இவர், இன்று மரணித்தார்.இயற்கையை நேசிக்கும் அற்புத மனிதர் இவர்.இயற்கையுடன் கலந்து விட்டார்.
அவர் மேடையில் இசைத்த வில்லும்,அவர்கைகளில் பற்றியிருந்த அந்தக் கோல்களும் வீட்டின் மூலையில் கிடந்து அழுகின்றன. இவரை மானசீக குருவாக்கி வில்லிசைக்க இன்னுமொரு ஏகலைவன் வருவான் அதற்காக அந்த கருவிகளுடன் நாமும் காத்திருப்போம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *