சேலத்தில் ஈழத்து இசைக்கலைஞர்கள் எம்.பி.பரமேஸ் – பிரபாலினி
தந்தைக்கும் மகளுக்கும் “இசை மாமணி” விருது வழங்கிக் கௌரவம்.
“உனக்கு தெரியுமா, நான் உன்னை நினைப்பது”– என்ற பாடல் வழியாக அவரை இன்றளவும் ரசிகர்கள் மனதில் நன்கு அறிந்தவராக வைத்துள்ளவர், ஈழத்து மெல்லிசை மன்னர் எம். பி. பரமேஸ்.
இசையை மூச்சாகக் கொண்ட அவர், இன்றுவரை அதனுடனே உயிர்வாழ்கிறார்.
அவரது இனிய இசைப் பயணத்தைத் தொடரும் மற்றொரு இசைக்குயில் அவரது செல்ல மகள் பிரபாலினி பிரபாகரன்.
தந்தையின் பாதையில் தன்னை இசையில் நிலே நாட்டி, பல மெல்லிசை ஆல்பங்களை வெளியிட்டதோடு, ஜெர்மனியில் சிபோ சிவகுமாரன் இயக்கிய “நாளைய நாம்” திரைப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். இசை வழியாக தமிழகத்திலும் பரவலாக அறிமுகமாகியுள்ளார்.
கடந்த மாதம், சேலத்தில் நடைபெற்ற “மனம் மாமன்றம்” அமைப்பின் சிறப்பு விழாவில் தந்தையும் மகளும் சேர்ந்து “இசை மாமணி” விருதைப் பெற்ற பெருமை பெற்றனர்.
இவ்விருதுகளை தென்னிந்திய திரைப்படத் துறையின் பிரபல பாடலாசிரியர் சிநேகன் அவர்கள் வழங்கினார். விழாவில் கவிஞர் அறிவுமதி, ‘நந்தவனம்’ ஆசிரியர் சந்திரசேகர், மேலும் பல படைப்பாளிகள் கலந்து சிறப்பித்தனர்.
ஈழத்து மெல்லிசை மன்னர் எம். பி. பரமேஸ் அவர்களுக்கு, 2019 ஆம் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற வெற்றிமணி பத்திரிகையின் வெள்ளி விழாவில் “வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கியதும் எங்களுக்கு பெருமையாகும்.
இவர்களின் இசைப் பயணம் இனிமையுடன் தொடர வெற்றிமணி பத்திரிகையின் மனமார்ந்த வாழ்த்து.
![]()
