இனம், மதம் கடந்து மலர்ந்த கலைகள்-நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர் – அவுஸ்திரேலியா
கண்டியன் நடனக் கலைஞர் – சித்திரசேனா
இலங்கையில், கண்டியன் நடனத்திற்கு புதிய பரிணாமத்தை அளித்தவர் சித்திரசேனா. மனைவி வஜிராவுடன் இணைந்து அழகிய அரங்கக் கலை ஆக்கங்களை வழங்கியுள்ளார். இவர்களின் படைப்புகளில் மிகப் பிரபலமானது “கறடியா” என்ற மீனவ சமூகத்தை மையமாகக் கொண்ட படைப்பு. இதில் சித்திரசேனா மீனவனாக முக்கிய பாத்திரம் ஏற்றிருப்பார். மீனவனுக்கு பொருத்தமான உடல்வாகு கொண்டவர். தடித்த, கரிய நிற ரோமங்கள் கொண்ட தேகம்; ஒரு முறட்டு மீனவனாகவே தோற்றம் அளிப்பார். ஆடற்கலைஞர்களில் காணப்படும் உடல்கட்டு, நிறம் எதுவும் கிடையாது. மேடையில் தோன்றினால் அத்தனை பார்வையாளரையும் தன்வயமாகக் கவரும் ஆடல். உணர்வுகளை அள்ளி, தெளித்து ஆடி எம்மை எல்லாம் தன் ஆடலால் கட்டிப்போட்டுவிடுவார். இவர் தனக்கென ஒரு பாணியை வகுத்து ஆடினார்.இலங்கையில் மட்டுமல்ல, பிற நாடுகளிலும் இவரது ஆடல் குழு சென்று ஆடி புகழ் பெற்றது.
சித்திரசேனா, பாலைவனத்தில் தனித்து விடப்பட்டவனாக ஒரு ஆங்கில நாடகத்தில் நடித்தார். இவர் ஒருவரே ஒரு மணி நேரமும் தனித்தே நடித்தார். தன் நடிப்பால், தான் படும் கஷ்டங்களை பார்வையாளரான நாமே அனுபவிப்பதாக உணர வைத்தார். அவர் உணவில்லாது தவித்த தவிப்பு, தாகம் தாங்காது நீரைத் தேடி கானல் நீரை கண்டு ஓடி, நீரைக் காணாது தவித்தல் எனப் பலவாக நடித்தார். ரசிகர்களின் மனதை உருக வைத்தார். இவ்வாறான உன்னத கலைஞன் இலங்கையிலே எம்மில் ஒருவராக வாழ்ந்தார். இன்று அவரது ஞாபகங்களை மீட்டுப் பார்க்கக் கிடைத்த சந்தர்ப்பமாகவே இதை கருதுகிறேன்.
சித்திரசேனா கலையைப் போஷிக்கும் குடும்பத்தில் பிறந்தவர். தந்தையார் லூயமன்சேனா நாடகங்களில் நடிப்பவர். அன்றைய உயர் வர்க்கம் தேசிய ஆடல்களை நாகரிகம் அற்றது எனக் கருதிய காலத்தில், இவரது தந்தையார் கண்டியன் நடனத்தை முறையாக சித்திரசேனாவிற்கு கற்பித்தார். அதன் பின் சித்திரசேனா தாகூரின் ஷாந்தினி கேதனிலும், கதகளி இலும், நடனத்தை கேரளத்திலும் கற்றார். இலங்கையின் கலைத் தூதராக பல நாடுகளுக்குச் சென்று வந்தார். அதன் மூலம் இலங்கை தேசிய ஆடலின் மதிப்பை உலக அரங்கில் உயர்த்தினார்.
ஹெய்க் கருணரத்தினா
எமது ஆங்கில அரங்கக் கலை நண்பர் ஹெய்க் கருணரத்தினா. இவர் இலங்கையில் மிகப் பிரபலமான கலைஞராக யாவராலும் மதிக்கப்பட்டவர். சில Shakespeare கதைகளை, அன்றைய இலங்கையில் நடைபெறும் அரசியல் நிகழ்வுகளை Shakespeare நாடகங்கள் போலவே பாத்திரங்களை எமது அரசியல்வாதிகளாக உருவகப்படுத்தி நாடகமாக்கும் விற்பன்னர். சிறந்த ழூழூழுpநசயழூழூ எனப்படும் இசை நாடகம், அவற்றுடன் கிராமிய நடனம் மற்றும் உரையாடல் என அத்தனையையும் பயன்படுத்தி சிறந்த கருத்துள்ள நாடகங்களை தயாரிப்பார்.
எனது நாட்டிய நாடகங்களை பார்த்து வந்தவர், தனது தயாரிப்புக்கு எனது உதவியை நாடினார். நானும் என் மாணவியருடன் “Rainbow man” இவர் தயாரித்த நாட்டியத்தில் பங்குபற்றினோம். எனது ஆக்கங்களை பார்த்தவர், அதில் நான் உருவகப்படுத்திய பகுதிகளை சில மாற்றங்களுடன் தனது ஆக்கங்களுடன் இணைத்தார். நாம் பங்குகொண்ட நாட்டியம் “Rainbow man”. இயேசுநாதரின் வாழ்க்கை அவரது 14 வயதிலிருந்து 32 வயது வரை கூறப்படவில்லை. அந்த காலகட்டத்தை இவர் கற்பனையாக வடித்திருந்தார். இயேசுநாதர் எகிப்து தேசம் சென்றதாகவும், அந்த காலகட்டத்தில் அவரது போதனையால் கவரப்பட்ட மன்னர் (Faro) மகள் இயேசுநாதருக்கு பிரமிட் கட்டுவதாகவும் கதை. இதில் எனது மாணவியர் பல பாத்திரங்களாக குழு நடனங்களில் பங்கேற்றனர். அங்கு 7 வயது தொடக்கம் 75 வயது வரை உள்ள 75க்கும் மேற்பட்ட பிரமாண்ட தயாரிப்பு, 10 நாட்கள், அரங்கம் நிறைந்த கூட்டமாக நடந்தேறியது.
இவ்வாறான தயாரிப்புகளின் காரணகர்த்தா ஹெய்க். அரங்கக் கலை தயாரிப்பாளர். தொழிலாக பிரபல கல்லூரி ஒன்றில் ஆங்கிலம் கற்பித்தார். எமது வீட்டிற்கு வந்து எம்முடன் மகிழ்வாகப் பேசி போகும் நண்பருமானார். இவர் வாழ்வில் எந்தப் பொறுப்பையும் ஏற்க விரும்பாத Free floating dreamer ஆயின். ஆனால் உலகில் பொறுப்பற்றவர் என்றால் குடிபோதை, புகைத்தல் பழக்கம் உள்ளவர் என நினைப்பார்கள். எமது நண்பர் அவற்றில் ஈடுபடாதவர். ஆனால் கற்பனை உலகில் மிதப்பவர் – யார் அறிவார்? பிரபல ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு எழுதுபவர். என்னைப் பற்றியும் எழுதியுள்ளார். வானொலியில் ஆங்கில நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்; மிகப் பிரபலமானவர். ஆனால் இத்தனையும் செய்யும் இவருக்கு தனது வருமானத்தை வைத்து சரியாக பராமரிக்கத் தெரியவில்லை. இத்தனைக்கும் ஒரு வளமான குடும்பத்தில் பிறந்து, கொழும்பில் வசதியான வீட்டில் தாயுடன் வாழ்பவர். மாத இறுதியில் கைச்செலவிற்கும் பணமில்லாது எனது கணவரிடம் 50 ரூபா கடன் பெறுவார். சம்பளம் கிடைத்ததும் அதைத் திருப்பிக் கொடுத்துவிடுவார்.
இவருடன் கல்லூரியில் கற்பிக்கும் ஒருவர் தொழிலதிபரானார். பெரிய சொகுசு ஹோட்டல் கட்டினார். இவ்வாறாக அவர் வாழ்க்கை வளர்ந்தது. ஆனால் எமது நண்பர் 50 ரூபா வாங்குவதும் மாறவில்லை. ஒருநாள் என் கணவர் உரிமையுடன் அவரை கோபமாகப் பேசினார்:“உம்மைப் போன்ற ஆசிரியரைப் பார்; அவர் எவ்வாறு முன்னேறுகிறார். நீரோ 50 ரூபா பணம் கேட்கும் நிலையிலுள்ளீர். கொஞ்சமாவது யோசித்துப் பார்த்தீரா?” என்றார். ஹெய்க் எவ்வித சலனமும் இன்றி என் கணவரிடம் கூறினார்: “அவரது கனவுகள் கற்பனைகள் எல்லாம் கான்கிரீட்டாக மாறி கட்டடமாகின்றன. எனது கனவுகள் கற்பனைகள் எல்லாமே அரங்கக் கலையாக மாறி மக்களின் உள்ளங்களில் வாழ்கின்றன,” என்றார். என் கணவர் சலித்துக் கொண்டு, “உன்னைத் திருத்த முடியாது,” என்றார்.
அன்று அரசன் பொன்னும் மணியும் பல்லக்கும் அனுப்பி தியாகராஜரை தன் அரண்மனைக்கு வந்து தன்னைப் பற்றி பாட அழைத்தபோது, “அத்தனையும் வேண்டாம்; அந்த இராமனை மட்டுமே பாடுவேன். நீ அனுப்பிய பொன்னும் மணியும் அதற்கு நிகராகுமா?” என மறுத்து அவற்றைத் திருப்பி அனுப்பி, “நிதி சால சுகமா?” – நீ அனுப்பிய நிதி எனக்கு எல்லாச் சுகத்தையும் தராது என்றார். எமது நண்பரும் அப்படியான ஒருவரே. அந்தத் தியாகப் பிரம்மத்தைப் போற்று உயர்ந்து நின்றார். “இவர் கேட்டதும் அதே ‘நிதி சால சுகமா’.”என்பதே.
![]()
