எங்கட பனையடி,பனங்கொட்டை காவோலைகாரைக்கவியின் மூன்று புத்தகங்களின் வெளியீடு

0
vm379

காரைக்கவியின் மூன்று புத்தகங்களின் வெளியீடு கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் தினகரன் ஆசிரியர் செந்தில்வேலவர் தலைமையில் நடைபெற்றது. பொதுவாக இத்தைகைய புத்தக வெளியீடுகள் கணிசமான பார்வையாளர்களை எதிர்பார்த்து வார இறுதிகளிலேயே ஏற்பாடு செய்யப்படும். ஆனால் காரைக்கவியின் இந்த நிகழ்வு திங்கட்கிழமை நடைபெற்ற போதும் மண்டபம் நிறைந்த பேராசிரியர்கள், கல்வியலாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், இலக்கியர்கள் , ஊடகவியலாளர்கள், நண்பர்கள் , உறவினர்கள் மத்தியில் நடைபெற்றது.

எங்கட பனையடி என்ற இனவரையியல் நூலும், காரைக்கவியின் பனங்கொட்டை என்ற கவிதைத் தொகுப்பும், காரைக்கவியின் காவோலை என்ற சிறுகதைத் தொகுப்பும் இந்த நிகழ்வில் வெளியிடப்பட்டன. தமிழ் வாழ்த்தினை செல்விகள் அற்புதையும் சுவேதாவும் இசைத்தார்கள். வரவேற்றுத் தலைமை உரையை தே.செந்தில்வேலவரும் ஆசியுரையை சிவஸ்ரீ வைத்தீஸ்வரக்குருக்களும், வாழ்த்துரையை கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவி சுகந்தி ராஜகுலேந்திராவும், அறிமுக உரையை பேராசிரியர் அ.சர்வேஸ்வரனும் தொடக்கவுரையைபேராசிரியர் ஆ.சி. கந்தராஜாவும் வழங்கினார்கள். நூல்களை நூலாசிரியரின் வீட்டம்மாவும் பிள்ளைகளும் வெளியிட பனங்கொட்டையை திருமதி சர்வேஸ்வரி விய யரத்னமும், காவோலையை திருமதி புஸ்பவதி செல்வரட்ணமும், பனையடியை திருமதி சுகந்தி ராஜகுலேந்திராவும் பெற்றுக் கொண்டனர். பனங்கொட்டை பற்றிய பார்வை உரையை திருமதி பாலரஞ்சனி காண்டீபனும், காவோலை பற்றிய பார்வை உரையை திருமதி பவானி. சிவகுமாரனும் பனையடி பற்றிய பார்வை உரையை பேராசிரியர் வ. மகேஸ் வரனும் ஆற்றி இருந்தார்கள். நோக்கு உரைகளை பேராசிரியர்கள் தை.தனராஜ்,எஸ்.ஜே.யோகராசாவும் வழங்கி இருந்தார்கள். நிகழ்வினை காரை இரா.தனுஷா தொகுத்து வழங்கி இருந்தார். ஈற்றில் காரைக்கவி ஏற்று நன்றி உரையை ஆற்றி இருந்தார்.

புத்தக வெளியீட்டில், பல இடங்களிலும் வருபவர்கள் சைவப்பழங்கள் உட்பட செருப்போடு திருநீறு பூசுவார்கள் என்பதால் நிறைகுடம் வைக்கவில்லை. பலரும் திருமுறை ஓதும் போது செருப்பைக் கழட்ட மாட்டார்கள் என்பதால் திருமுறை ஓதப்படவில்லை. பலரும் போட்ட உடனேயே முகத்தில் அறைவது போலக் கழற்றிவிடுவார்கள் என்பதனால் பொன்னாடைகள் மாலைகள் யாருக்கும் போடப்படவில்லை. ஒருவரை அழைத்து ஒருவரை அழைக்காவிட்டால் கோபிப்பார்கள் என்பதானல் சிறப்புப் பிரதிகள் வழங்கவில்லை.

மங்கல விளக்கினைப் பெண்கள் மட்டுமே ஏற்றினார்கள். புத்தகங்களை பெண்கள் (நூலாசிரியரின் வீட்டம்மாவும் பெண் பிள்ளைகளும்) வெளியிடப் பெண்களே பெற்றுக் கொண்டார்கள். நயவுரை நிகழ்த்திய இருவர் பெண்கள். பெண்பிள்ளையே நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். பெண் பிள்ளைகளே தமிழ்வாழ்த்துப் பாடினர். ஓலைப் பெட்டியில் வைத்துப் புத்தகங்களை வெளியிடப்பட்டது. விருந்தினர்களுக்கு பனங்காய்ப் பணியாரம், பினாட்டும் தேங்காய்ச் சொட்டும்,பனங்கட்டிக் குட்டானுடன் தேநீரும் பரிமாறப்பட்டது. விழாவிற்குக் கொண்டு வரப்பட்ட புத்தகங்கள் யாவும் தீர்ந்து போயின. நூலாசிரியரின் குடும்பத்தினர் கறுத்த ஆடைகளுடன் பங்கு பற்றினர். அதற்குள் ஒரு காரணம் ஒளிந்திருக்கிறது எனச் சிலர் பேசிக்கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *