தோற்றப்பிழை

0
goodgirl

  • மாதவி யேர்மனி

கேளின் பொண் (Köln Bonn) விமான நிலையம் பரபரப்பாகவும் அழகாகவும் இருந்தது. இன்றும் அது ஜேர்மனியின் தலைநகரம் என்ற பழைய நினைப்பில் ஒருவித பூரிப்போடு காணப்பட்டது. எமது வயதை ஒத்த பலருக்குக்கூட இத்தகைய பழைய நினைவுகள்தான் பூரிப்பைத் தருகின்றன. இன்று பேர்லின் (Berlin) தலைநகராக மாறிவிட்ட போதும், அவர்களுக்கு ‘பொண்’ (Bonn) தான் இப்போதும் ‘பொன்’ போன்றது.

விமான நிலையத்திலிருந்து நேரே கீழே இறங்கினால் புகையிரத நிலையம் வரும். நான் லூடின்சைட் (Lüdenscheid) நகரத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. பயணச்சீட்டு எடுத்துக்கொண்டு புகையிரதம் வரவும் அதில் ஏறினேன்.
சரியாக ஐந்து நிமிடங்களில் கேளின் பிராங்பேட் வீதியை (Köln Frankfurt Street) புகையிரதம் வந்தடைந்தது.
பௌர்ணமியிலிருந்து அமாவாசைக்கு ஐந்து நிமிடத்தில் வந்தது போல ஒரு உணர்வு. மக்கள் ஆரவாரமின்றி, ஏதோ ‘மௌன விரதம்’ போல ஒரு நிசப்தம் நிலவியது. அங்கிருந்து நேராக லூடின்சைட் செல்லும் புகையிரதம் இன்னும் பத்து நிமிடங்களில் வரும் என்று மின்னியல் திரையில் (Digital Screen) ஓடிக்கொண்டிருந்தது.

ஒருமுறை இதே பாதையில் நான் பயணம் செய்தபோது, நான் இருந்த ரெயில் பெட்டி மட்டும் லூடின்சைட் போகவில்லை. சுற்றுமுற்றும் சத்தமே இல்லை என்று எட்டிப் பார்த்தால், எனது பெட்டியோடு இணைக்கப்பட்டிருந்த எஞ்சினைக் காணவில்லை. கீழே இறங்கி விசாரித்தபோது, “முன்னால் இருக்கும் இரண்டு பெட்டிகள் மட்டும்தான் லூடின்சைட் செல்லும், நீங்கள் இருந்த பெட்டி வந்த இடத்திற்கே திரும்பிச் செல்லும்” என்றார்கள்.

அடுத்த புகையிரதம் வரும்வரை இரண்டு மணித்தியாலங்கள் காத்திருந்துதான் அன்று சென்றேன். அந்த நினைவு வரவே, எதிரில் நின்ற பயணிகளிடம் ஒருமுறை கேட்டு உறுதிப்படுத்துவோம் என எண்ணி அவர்களை நோக்கி நடந்தேன். அங்கு ஒரு இளவட்டப் பெண், உதட்டிலும் மூக்கிலும் எனப் பல இடங்களில் வளையங்கள் குத்தியிருந்தாள். பார்ப்பதற்கு ரெகுலா திரைப்படங்களில் வரும் வில்லி (ஏயஅp) போலவே இருந்தாள். அவளுக்கு அருகே மென்மையான தோற்றமுடைய ஒரு பெண், அடக்கமான உடையுடன் காணப்பட்டாள்.

தூய தமிழில் சொல்வதானால் பார்ப்பதற்கு ‘லட்சுமிகரமாக’ இருந்தாள். ஏதோ வரம் கேட்கக் கடவுளை நாடுவது போல அவளிடம் சென்று, “இந்த புகையிரதம் நேரே லூடின்சைட் நகருக்குச் செல்லுமா? அல்லது இடையில் பெட்டி மாறி ஏற வேண்டுமா?” எனக் கேட்டேன்.

அவளிடமிருந்து பதில் வரவில்லை. அவள் கடவுளாய் நின்றாள். ஏதும் பேசவில்லை. அருகில் நின்ற அந்த பங்க் ஸ்டைல் பெண்ணுக்கு (Pரமெ ளுவலடந புசைட) நான் பேசியது கேட்டிருக்காது என்றுதான் நினைக்கிறேன்.

“சரி, பிள்ளை நல்ல பிள்ளை போலக் கிடக்கிறது, பொதுவெளியில் அறிமுகமில்லாதவர்களுடன் பேசக் கூடாது என்று பெரியவர்கள் சொல்வதை இந்த லட்சுமி கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள் போலும்” என்று எண்ணியவாறு புகையிரதம் வந்ததும் அதில் ஏறினேன். அவர்களும் ஏறினார்கள்.

அந்த லட்சுமி மட்டும் புகையிரதம் ஏறுமுன், அருகில் நின்ற ஒருவனுக்கு ஓர் இறுகிய முத்தம் கொடுத்துவிட்டு ஏறினாள். அவர்கள் இருவரும் ஊடலிலிருந்து கூடலுக்குச் சட்டெனத் திரும்பியதால் வந்த முத்தமாக இருக்கலாம் என எனக்குள் நினைத்துக் கொண்டேன். சுமார் ஒரு மணித்தியாலப் பயணத்தின் பின் அந்தப் பெண் இறங்கினாள். இறங்கிய கையோடு அவளுக்காகக் காத்திருந்த மற்றொருவன் ஓடிவந்து அவளைக் கட்டியணைத்து முத்தமிட்டான்.
புகையிரதம் ஏறும்போதும் இறங்கும்போதும் அவள் முத்தங்களைப் பெற்றாள். ஆனால், அவளுக்கு முத்தம் கொடுத்த ஆண்கள் வேறு வேறு. நான் அவர்களை பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால், அந்த வில்லிபோல் இருந்த பங்க் ஸ்டைல் பெண் என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

முன்பொருமுறை நான் புகையிரதத்தை விட்ட அதே இடம் வரவும், யன்னலால் எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு மூச்சுக்காற்று என்மீது படவே சட்டெனத் திரும்பினேன். அதே பங்க் ஸ்டைல் பெண் என்னிடம் பேசினாள். “அங்கிள் (ருnஉடந), இந்த புகையிரதம் நேராக நீங்கள் செல்லும் நகரத்திற்கே செல்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன்னர்தான் இரண்டு பெட்டிகள் மட்டும் சென்றன, இப்போது முழுவதுமாக எல்லா பெட்டிகளுடன் புகையிரதமும் அங்குதான் செல்கிறது. அங்கிள், நீங்கள் நிம்மதியாக இருங்கள், நானும் நீங்கள் செல்லும் லூடின்சைட் நகரத்திற்கேதான் போகிறேன்,” என்றாள் அந்தப் பெண்.

பார்க்க ‘வில்லி’ போலத் தெரிந்தாலும், கண்மூடி அவள் குரலைக் கேட்டால் அவள்தான் உண்மையான ‘லட்சுமி’ என்று தோன்றியது. ஆடைபாதி ஆள்பாதி என்பதன் பொருள் இன்று தெரியாமல் தடுமாறினேன். சொற்பனந் தானோ? – பல தோற்ற மயக்கங்களோ? இது தோற்றப்பிழைதானோ! வெறும் காட்சி மயக்கங்களோ. நான் தெளிந்துகொண்டு நடந்தேன். எனக்கு முன்னே ஒருவர் நடந்தார் அவர் பாரதியாக இருக்குமோ

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *