பூனை சாம்ராஜ்யம்

0
vm461

கிரீஸ் ரோட்ஸ் தீவில் பூனைப்படை!

  • மாதவி யேர்மனி

பூனை சாம்ராஜ்யம்

நான் கிரீஸ் நாட்டில் ரோட்ஸ் (rhodes) விமான நிலையத்தில் இறங்கிப் பேருந்து எடுக்கப் போனால், குறுக்காகப் பூனை ஒன்று ஓடியது. வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கம் ஓடினால் நல்லதோ, இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கம் ஓடினால் கூடாதோ, எனக்கு வடிவாகத் தெரியாது.

எதற்கும் பூனை குறுக்கே போனால் நின்றுவிட்டுப் போக வேண்டும் என்று நான்குபேர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

ஆனால் அதனை வெளிப்படையாகச் செய்ய எனக்குக் கொஞ்சம் தன்மானம் இடம் தராது. அதேநேரம், அந்த தன்மானத்திற்கும் சேதாரம் வரக்கூடாது, என்பதிலும் கவனம் அதிகம். என் மனைவியும் என் செயலைப் பார்த்துச் சிரிக்காமல் இருக்க ஒரே வழி, பின்னே வரும் மனைவிக்காகக் காத்திருப்பது போல் சட்டென அந்த இடத்தில் நின்றேன்.

மனைவியும், “அட, என் மனுஷன் இன்று முன்னுக்கு ஓடாமல் நின்று நிதானமாகக் கூட்டிப் போகிறார்” என்றபடி அருகில் வந்தாள்.

நானும் சிரித்தபடி மீண்டும் பேருந்து நிற்கும் இடம் நோக்கி காலை வைத்தேன். சட்டென இன்னுமொரு வெள்ளைப் பூனை குறுக்கே ஓடியது.
மனைவி நிற்கவில்லை, என்னையும் விலத்திக்கொண்டு நடந்தாள். எப்படிப் பார்த்தாலும் அவளுக்கு மூடநம்பிக்கை கிடையாது என்ற பெருமிதத்துடன் அவளைப் பின்தொடர்ந்தேன்.

அவ்வளவுதான், அவள் ஒரு பார்வை திரும்பிப் பார்த்துச் சொன்னாள்:

“இஞ்சாருங்கோ, பயப்படாமல் வாருங்கோ! குறுக்கே போன பூனை வெள்ளைப் பூனை. அது மட்டுமல்ல, இடதுபக்கத்தில் வலது பக்கம் போச்சு” என்றாள்.

நானும் மூடநம்பிக்கை அவளுக்குக் கிடையாது என்று முழுதாக நம்பி இருந்தேன். இப்போது அவள் பூனைகளின் நிறங்களுக்கும் பலன் சொல்கிறாள்!

சரி, தீவுக்கு வந்தாச்சு, விடுதியில் இடமும் எடுத்தாச்சு. காலையில் கடற்கரைக்குப் போகலாம் என்று வெளிக்கிட்டால், ஒரு பெண் ஹோட்டலில் இருந்து வெளியே பூனையுடன் வாக்கிங் போகிறாள்.

எமது நடை வேகத்தைக் குறைத்து மெல்லத் தெருவுக்கு வந்தால், வாசலில் இருபுறமும் இரு பூனைகள் கண்ணை மூடி உறக்கத்தில் இருந்தன.
விமான நிலையத்தில் ஆரம்பித்த பூனைப்படை, நான் செல்லும் இடமெங்கும் என்னைச் சூழ்ந்து வந்தன. எங்கு பார்த்தாலும் பூனைகளின் இராச்சியம். இதற்குமேலும் இந்தப் பூனைகள் பற்றிக் கேட்டு அறியாமல் ஒரு வாய் தண்ணீர் குடிப்பதில்லை என்று முடிவு செய்தேன்.

எனவே கடையொன்றில் கேட்டேன். அவர்கள் தந்த பதில் எனக்குப் பூனைகள் பற்றி அறியும் ஆவலை மேலும் தூண்டியது. என் கேள்வித் தூண்டிலில் சிக்கிய பதில்களை இங்கு தொகுத்துத் தருகிறேன்.

கிரீஸ் நாட்டின் ரோட்ஸ் தீவு மற்றும் பிற தீவுகளில் பூனைகள் ஒரு முக்கிய அங்கமாகத் திகழ்கின்றன. இதற்கான முக்கிய வரலாற்றுக் காரணங்களில் ஒன்று பண்டைய காலத்திலிருந்தே கிரீஸில் பூனைகள் மதிக்கப்படுகின்றன. குறிப்பாக எகிப்திலிருந்து வணிகக் கப்பல்கள் மூலம் இவை கிரீஸிற்கு வந்தடைந்தன. கப்பல்களில் உள்ள தானியங்களை எலிகளிடமிருந்து பாதுகாக்க மாலுமிகள் பூனைகளை வளர்த்தனர். ரோட்ஸ் போன்ற துறைமுக நகரங்களில் எலிகளைக் கட்டுப்படுத்த பூனைகள் பெரிதும் உதவின.

கிரீஸ் நாட்டின் இதமான மற்றும் மிதமான தட்பவெப்ப நிலை பூனைகள் வெளியில் வாழ்வதற்கு மிகவும் சாதகமானது. கடும் குளிர் இல்லாததால், பூனைகள் ஆண்டு முழுவதும் தெருக்களிலேயே ஆரோக்கியமாக வாழ முடிகிறது. இது அவற்றின் இனப்பெருக்க காலத்தை நீட்டிக்கச் செய்வதால் பூனைகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கிறது.

கிரேக்க மக்கள் பூனைகளை அதிர்ஷ்டத்தின் அடையாளமாகவும், தீய சக்திகளிடமிருந்து பாதுகாக்கும் காவலர்களாகவும் கருதுகின்றனர். பெரும்பாலான வீடுகளில் பூனைகளை ஒரு குடும்ப உறுப்பினரைப் போலவே நடத்துகின்றனர். கடைகள் மற்றும் உணவகங்களுக்கு வெளியே பூனைகளுக்காக உணவு மற்றும் நீர் வைப்பது அங்கு ஒரு பொதுவான கலாச்சாரம்.

தீவுகளில் எலிகள் மற்றும் பாம்புகள் போன்ற உயிரினங்களின் எண்ணிக்கையை இயற்கை முறையில் கட்டுப்படுத்த பூனைகள் உதவுகின்றன. இதனால் மக்கள் அவற்றை விரட்டாமல், தங்களுக்கு உதவி செய்யும் உயிரினங்களாகக் கருதி வளர்க்கின்றனர்.

ரோட்ஸ் தீவிற்கு வரும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பூனைகளை விரும்பி அவற்றுக்கு உணவளிக்கின்றனர். பல சுற்றுலாத் தலங்களில் பூனைகளுக்கெனப் பிரத்யேக உணவு வழங்கும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

முன்பு கிரீஸில் பூனைகளுக்குக் கருத்தடை செய்வது இயற்கைக்கு மாறானது என்று கருதப்பட்டது. இதனால் அவற்றின் எண்ணிக்கை கட்டுப்பாடின்றி வளர்ந்தது. தற்போது சில தன்னார்வ அமைப்புகள் இதைக் கட்டுப்படுத்த முயன்றாலும், பரந்த அளவில் இன்னும் பூனைகள் பெருகிக்கொண்டே இருக்கின்றன.

ரோட்ஸ் தீவின் பூனைகள் வெறும் விலங்குகள் மட்டுமல்ல, அவை அந்தத் தீவின் அடையாளமாகவும், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒரு முக்கிய அம்சமாகவும் மாறிவிட்டன.

எலிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாக்க வரவேற்கப்பட பூனைகள், பூனைப்படைகளாக தீவைக்காத்தன. இன்று தீவீன் மூத்த பிரஜைகள் என்ற கௌரவம் பெற்றுவிட்டது!

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *