கொழுத்திப் போட்டேன்.அவ்வளவு தான்.
-மாதவி யேர்மனி.
வீடு வாங்க வேண்டும் என்றால், அதுவும் அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒரு வீடு வாங்க வேண்டும் என்றால், எழுதப்படாத விதிமுறைகள் பல உண்டு. அவற்றில் ஒன்றுதான் அயலவர்களுடன் ஒரு அறிமுகத்தை ஏற்படுத்திக் கொள்வது. “நாங்கள் இந்த மாடிவீட்டில் குடிவரவுள்ளோம்” என்று அவர்களிடம் சொல்லி, வீட்டுக்கு வருவதற்கு முன்னரே ஒரு சுமுகமான உறவை வளர்த்துக்கொள்ளும் முறைமை அது.
இந்த முறைமையில் முளைத்த உறவுதான் முகுந்தனுடனான உறவு. பார்ப்பதற்கு மாநிற மேனியும் திடகாத்திரமான உடலமைப்பும் கொண்டவன் அவன். பொதுவாக, இவ்வாறான மாநிற ஆடவர்களுக்குத் தன்னிடம் பெண்கள் மிக விரைவாகக் கவரப்பட்டு விடுவார்கள் என்றொரு நப்பாசையும் இயல்பாகவே இருக்கும்.
இந்த ஆசை முகுந்தனுக்கும் இருக்கும் என்று தெரிந்திருந்தும், எதிர்வீட்டுக்காரன் என்ற முறையில் உறவைச் சுமுகமாகப் பேண வேண்டும் என்ற எண்ணத்தில் அவனுடன் சகசமாகப் பழகினாள் சுந்தரி.
சுந்தரியின் கணவனுக்கு அவர்கள் வசிக்கும் நகரத்தில் வேலை இல்லை. ஒரு மாதம் முழுவதும் வெளிமாநிலத்தில் வேலை பார்ப்பார். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறைதான் வீட்டுக்கு வந்து, மனைவி பிள்ளைகளுடன் தன் பொழுதை இனிதாகக் கழித்துவிட்டுத் திரும்புவார்.
எதிர்வீட்டு முகுந்தனின் பால்கனியில் இருந்து பார்த்தால், சுந்தரியின் வீட்டு பால்கனி பளிச்சென்று தெரியும்.
ஒரு நாள் காலை, சுந்தரி குளித்துவிட்டுத் தன் தலை ஈரம் காயும் பொருட்டு, ஒரு துணியைத் தலைமுடியோடு சேர்த்து முடிச்சுக் கொண்டையாகப் போட்டிருந்தாள். முகுந்தன் தன் பால்கனிக்கு வரவும், சுந்தரி தலையில் துணி வைத்து அப்படிக் கொண்டை போடவும் சரியாக இருந்தது.
”சுந்தரி! நீங்கள் தப்பாக நினைக்காவிட்டால் ஒன்று சொல்லட்டுமா?” என்றான் முகுந்தன்.
”தப்போ, சரியோ… சொன்னால் தானே தெரியும்?” என்றாள் சுந்தரி.
முகுந்தன் முகமலர்ச்சியோடு சொன்னான்: “உங்கள் தலைமுடி அழகாக இருக்கிறது. அதிலும் குளித்த பின் துணியோடு சேர்த்துப் போட்டிருக்கும் இந்தக் கொண்டை அட்டகாசமாக இருக்கிறது!”
அதற்குச் சுந்தரி எந்தவிதத் தயக்கமும் இன்றி, சட்டென்று, “தம்பி, உங்கள் மனைவி குளிப்பதே இல்லையா? அல்லது ஈரம் காய இப்படி கொண்டை போடுவதே இல்லையா?” என்றாள்.
முகுந்தனுக்குச் சட்டென்று சுருக்கென்றது. அவள் தன்னை “தம்பி” என்று விளித்ததுதான் அவனது மனதை மிகவும் குடைந்தது.
அன்று இரவு பத்து மணி இருக்கும். சுந்தரியின் குடும்பத்தினர் அந்த வீட்டை வாங்குவதற்கு முன்னர் எல்லோருக்கும் கொடுத்திருந்த தொடர்பு இலக்கம் முகுந்தனிடமும் இருந்தது. அவன் அந்த இலக்கத்திற்குச் சுந்தரிக்குத் தொலைபேசி அழைப்பு எடுத்தான்.
”சுந்தரி, படுத்துவிட்டீர்களா? நான் காலையில் அப்படி உங்களை அழகு என்று சொல்லி இருக்கக் கூடாது. பிழையாகச் சொல்லியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்” என்றான்.
”அட, அப்படியென்றால் நான் அழகு என்று சொன்னது பொய்யா?” என்று சுந்தரியின் மனம் கேட்கத் துடித்தது. ஆனால், முகுந்தனின் குணம் அறிந்து அவள் அதனைக் கேட்கவில்லை. எதற்கும் தனக்கு ஒன்றும் தோன்றாதது போல, “சரி” என்று கூறிவிட்டுத் தொலைபேசியை வைத்தாள்.
மறுநாள் காலை விடிந்தது. முகுந்தன் சுந்தரியை எதிர்பார்த்துத் தன் ஜன்னல் ஓரமாக நின்றிருந்தான். சுந்தரிக்கும் இதுவரை பால்கனி வரை மட்டுமே இருந்த வீடு, சற்று விசாலமானது போன்றதொரு உணர்வு. நேற்று முகுந்தன் நின்ற இடத்தை எதேச்சையாக அன்றி, சுயமாகவே ஒருமுறை பார்த்துவிட்டாள்.
முகுந்தனுக்கு அதுவே போதுமானதாக இருந்தது. தனக்குள் ஒரு கணக்கைத் தானாகவே போட்டு, அதற்குரிய விடையையும் அவனே எழுதிக் கொண்டான்.
சுந்தரி வேகமாகத் தன் மகனையும் மகளையும் அழைத்துக்கொண்டு, அவர்களைப் பாடசாலையில் விடுவதற்காக மாடியில் இருந்து கீழே இறங்கினாள். அப்போது முகுந்தன் அவள் எதிரே வந்து நின்றான்.
”உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால், நான் போகும் வழிதானே… பிள்ளைகளை இறக்கி விடுகிறேன்” என்றான்.
”தம்பி, எனக்கு வேறு வேலை இருக்கிறது” என்றபடி, முழுமையாகப் பதில் அளிக்காமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள் சுந்தரி.
மீண்டும் இரவு அதே நேரம் தொலைபேசி ஒலித்தது.
”சுந்தரி, உங்களுடன் பேச வேண்டும்” என்றான் முகுந்தன்.
சுந்தரி மீண்டும், “மன்னிப்பா?” என்றாள்.
”இல்லை, காலையில் பிள்ளைகளை இறக்கி விடுகிறேன் என்று கேட்டேன் அல்லவா… பிழையாக எண்ணியிருந்தால் மன்னியுங்கள்” என்றான்.
சுந்தரிக்குச் சிரிப்பும் வந்தது, கோபமும் வந்தது. காலையில் குடைச்சல் கொடுப்பது, மாலையில் மன்னிப்புக் கேட்பது!
”தம்பி, எனக்குப் பேசுவதற்கு நேரம் கிடைக்காது. இனி மன்னிப்பு என்று கேட்டுத் தொலைபேசி எடுக்க வேண்டாம்” என்று கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.
அதன் பிறகு இரண்டு நாட்களாகத் தொலைபேசி அழைப்பு எதுவும் வரவில்லை. ‘தம்பி திருந்திவிட்டான்’ என்று நினைத்துக் கொண்டே நிம்மதியாகத் திரும்பிப் படுத்தாள் சுந்தரி.
ஆனால், மீண்டும் அதே மணி ஒலித்தது. சுந்தரி அழைப்பை ஏற்கவில்லை.
’முகுந்தன் எதற்காக இப்போது அழைத்திருப்பான்? பேச ஆசைப்படுகிறானா? இல்லை, என்னை ஒரு அக்காவாக நினைத்துப் பழகுகிறானா?’ எனப் பலவாறாக அவனது தரப்பில் இருந்து தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள் சுந்தரி.
மறுநாள் காலை விடிந்தது. பிள்ளைகளைப் பாடசாலையில் விட்டுவிட்டு வீடு திரும்பினாள்.
முகுந்தன் ஏதோ அதட்டும் தொனியில், “இரவு பேச அழைத்தால் ஏன் போனை எடுக்கவே இல்லை? எனக்கும் உங்களிடம் பேசாமல் தூக்கம் வராது” என்றான்.
சுந்தரி தன்னைச் சுதாரித்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தாள். அப்போது அவளது வாட்ஸ்அப் (WhatsApp) ‘டிங்’ என்று ஒலித்தது. தொட்டுப் பார்த்தால், “சொல்லத்தான் நினைக்கிறேன்…” என்ற பழைய பாடல் ஒன்று ஒலித்தது. அதனை அழிப்போம் என்று அவள் தொடப் போக, அது தவறுதலாக வேறு ஒரு குழுவில் பகிரப்பட்டுவிட்டது (Forward).
பின்பு என்ன? தொலைபேசியில் பேசுவதற்குப் பதிலாக, ஒரே பாட்டுக்குப்பாட்டுதான்!
இதற்கு ஒரு முடிவு கட்டத் துணிந்த சுந்தரி, நேராக முகுந்தனிடம் கேட்டாள்: “உங்கள் மனைவி இதையெல்லாம் பார்ப்பதில்லையா?” என்று.
அதற்கு அவன், “நான் தான் உடனுக்குடன் எல்லாவற்றையும் அழித்துவிடுவேனே!” என்றான் அலட்சியமாக.
மாலை நேரம் சுந்தரியின் கணவன் வீடு வந்து சேர்ந்ததும் பிள்ளைகளுக்கு ஒரே கும்மாளம். சுந்தரிக்கோ முகுந்தனின் தொந்தரவைச் சொல்வதா, விடுவதா என்றொரு அங்கலாய்ப்பு அடிமனதில் இருந்தது.
இரவு பன்னிரண்டு மணி இருக்கும். அதே தொலைபேசி மீண்டும் ஒலித்தது. சுந்தரியின் கணவன், “இப்போது எடுக்க வேண்டாம்” என்று சொல்லிவிட்டு, சுந்தரியை அணைத்தபடி தூங்கிவிட்டார்.
காலை எழுந்ததும் சுந்தரி தனது தொலைபேசியை எடுத்துப் பார்த்தாள். அது முகுந்தனின் அழைப்புத்தான்.
சுந்தரி தன் கணவனுக்குச் சுடச்சுட காப்பி கொடுத்துவிட்டு, “இங்க பாருங்கோ… எதிர்வீட்டு முகுந்தன் என்னை ஒரு மாதிரியாகப் பார்க்கிறான். தினமும் ஏதோ ஒரு காரணம் சொல்லி நேரம் காலம் பார்க்காமல் போன் செய்கிறான்” என்றாள்.
”மாடிவீடுகளில் இருக்கும் நாம்தான் பார்த்து நடக்க வேண்டும். சும்மா தெரியாத்தனமாக முட்டி மோதி, பெரிய பிரச்சினையாகிப் பெயரைத் கெடுத்துக் கொள்ளக் கூடாது” என்றான் அவள் கணவன்.
அவன் பால்கனியில் இருந்த ஆடைகளை உலர்த்தும் கொடியை அவிழ்த்து, வீட்டின் பின்புறமாகக் கட்டினான். அத்துடன், “சுந்தரி, நீ பாட்டுப் போட்டுக் கொண்டு சமைப்பதை இன்றோடு நிறுத்திவிடு. எதிர்வீட்டு முகுந்தன் தனக்கான பாட்டுதான் நீ போடுகிறாய் என்று நினைத்துவிடப் போகிறான்.
அதுமட்டுமல்ல, பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்ல நான் ஒரு ஆட்டோக்காரனை ஒழுங்கு செய்யட்டுமா?” என்றான்.
சுந்தரிக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
”நான் அவனால் எனக்குப் பிரச்சினை என்று சொன்னால், நீங்கள் ஏதோ நான்தான் பிரச்சினை என்பது போலக் கொடியை மாற்றிக் கட்டுகிறீர்கள்; பாட்டுப் போடாதே என்கிறீர்கள்; ஏன், வெளியிலும் போகக் கூடாது என்கிறீர்களா? நீங்கள் தானே மாடிவீட்டுக்காரர்கள் ஒருவருக்கொருவர் துணையாக இருக்க வேண்டும் என்று இப்படித் தொலைபேசி எண்களைப் பகிர்ந்தீர்கள்? பற்றவைத்த நீங்கள்தான் இதற்கு ஒரு முடிவும் கட்ட வேண்டும்” என்று சுந்தரி சினந்தாள்.
கணவன் மீண்டும் தன் வேலைக்காக வெளியூர் சென்றுவிட்டார். இப்போது மூன்று வாரங்களாக முகுந்தனிடம் இருந்து எந்தவொரு தொலைபேசி அழைப்பும் வரவில்லை.
கணவனைத் தொடர்புகொண்ட சுந்தரி மகிழ்ச்சியுடன் சொன்னாள்: “இப்போது முகுந்தன் போன் செய்வதே இல்லை!” என்று.
அப்போதுதான் சுந்தரியின் கணவன் தான் கொழுத்திப்போட்டதைப் பற்றிச் சொன்னார்:
”நான் முகுந்தனின் மனைவிக்குத் தொலைபேசி எடுத்து, ‘இரவு ஒரு மணிக்கு உங்கள் கணவர் என் மனைவிக்குத் தொலைபேசி அழைப்பு எடுத்துள்ளார். ஏதும் மாடிவீட்டுப் பிரச்சினையா? முகுந்தன் வந்தால் என்னைத் தொடர்புகொள்ளச் சொல்லுங்கள், எந்த நேரம் என்றாலும் பரவாயில்லை’ என்று சொன்னேன்.”
அவ்வளவுதான்! முகுந்தனின் வீட்டில் அவன் கொழுத்திப்போட்ட நெருப்பில், முகுந்தனின் முகம் நன்கு வெளிச்சத்திற்கு வந்தது. முகுந்தனின் மனைவியின் முகம் தீப்பிளம்பானது.
சுந்தரியின் வாழ்க்கை குளிர் நிலவானது.
இப்படியான சில சமயோசித தீப்பந்தங்கள் கொழுத்திப்போட என்றே தயார் நிலையில் வைத்திருக்க வேண்டிய காலம் இது.
![]()
