கேள்வி வரும்போது …. (சிறுகதை )
- ரஞ்ஜனி சுப்ரமணியம் –
மறக்க இயலாத அந்தக் கேள்வியை என்னிடம் கேட்ட அழகிய இளம்பெண் இன்று எங்கிருப்பாள்? இருக்கிறாளா இல்லையா? தாயகத்தில் வாழ்கிறாளா? புலம்பெயர்ந்து இருப்பாளா?மண்ணில் விதையாகி நடுகல்லாக வீற்றிருப்பாளா? அங்கவீனராக வறுமையில் உழல்கிறாளா?
தெரியவில்லை.
என் நினைவுக் கடலின் அலைகள் பின்னோக்கி…..
இருபது வயதளவில் இருக்கும் அவளுக்கு . அந்த மாநிற அழகியைப் பார்த்ததும் எனக்குப் பிடித்துப் போய் விட்டது. வரிகள் போட்ட மங்கல் பச்சை நிற சீருடையில் கம்பீரமாக இருந்தாள். நட்சத்திரப் பற்களுடன் ஒளிரும், புன்னகை மாறாத குழந்தைத் தனமான முகம். வேகாத வெயிலில் கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தாள்.
ஓமந்தை சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த இயக்க கண்காணிப்பாளர்கள் ஒவ்வொருவரின் முகபாவனையும் ஒவ்வொரு விதத்தில் இருந்தது. பலரின் முகத்தில் இறுக்கம். உடலில் விறைப்பு மிகுந்த கம்பீரம். பலருக்கு அது அழகாகவே இருந்தது. ஓமந்தை இராணுவ முகாம் சோதனைகளுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாத சோதனைகள். விசாரணைகள். ஆண்டு 2002. அன்று அது அவர்களின் ராஜ்ஜியம்.
இவளைப் போல அமைதி தவழும் இனிமையுடன் சில இளநிலை உதவியாளர்களும் இருந்தார்கள். பயணிகளின் வயதிற்கேற்ற உறவுமுறை கூறி மனம் கவர்ந்தாள்.
அம்மா, அப்பா, ஐயா, அம்மம்மா, தங்கச்சி, கிளிக்குஞ்சு என ஓராயிரம் உறவுமுறைகள் அவள் உள்ளமெங்கும் அன்பாக விரிந்திருந்தது.
“பாத்து இறங்குங்கோ அம்மம்மா”
“கையை பிடிச்சுக் கொள்ளுங்கோ ஐயா “
“கிளிக்குஞ்சுக்கு எத்தினை வயசு இப்ப. நடப்பாவா” ?
அன்பின் வழியது உயிர்நிலை என்றது என் மனது.
.
எண்பத்து ஏழின் பின் யாழ் மண்ணின் வாசனை அறியாதவர்கள் நாம். அதனை புதிதாக நுகரப் போகும் எமது பதின்மத்து இளைய பரம்பரை , இன்னும் சிலருடன் பெருமிதம் மிகுந்த மனதுடன் அன்று யாழ் நோக்கிய பயணம். ஊர்க்கோயில் திருவிழா பார்த்து எத்தனை வருஷமாச்சு, வீடு வாசல் எப்பிடி இருக்குதோ? இருக்க விட்ட ஆக்கள் எழும்புவினமோ மாட்டினமோ என ஏங்கியபடி அப்பா கதிரமலை. பதினைந்து வருடமாக பாரிசவாதத்தில் விழுந்திருக்கும் தனது தம்பியைப் பார்க்கப் போகும் அம்மா. போரின் போது, வடக்குக்கு அப்பால் ஏதோ ஒரு விதத்தில் பாதுகாப்புடன் வாழ்ந்த தன்னலம் நிறைந்த குற்ற உணர்வுடன் நான். ஆனால் இங்கு வாழாமலே வெட்டி முறிக்கும் சிலரை விட மேல் என்றும் ஒரு ஆறுதல் கூடவே. இங்கு வாழ்வதே ஒரு போராட்டமல்லவா?
இத்தனை உணர்வுகளுக்கும் நடுவில் அந்த அழகி என்னைப் பார்த்து திடீரென ஒரு கேள்வி கேட்டாள்.
“கொழும்பில இருந்து வாறீங்களே அம்மா. உங்களோட அவை எப்பிடி ?”
அவை ??
எதிர்பாராத அந்தக் கேள்வியில் நான் திகைத்தேன். யாரைப் பற்றிக் கேட்கிறாள் இந்தப் பெண். ” ஓமோம் கொழும்பு தான் . யாரைப் பற்றியம்மா கேக்கிறீங்கள்? “
“அவைதான். சிங்களாக்கள் உங்களோட எப்பிடி?”
இது என்ன கேள்வி? தெற்கிலேயே பெரும்பகுதி வாழ்ந்த நான் இந்தக் கேள்வியை எப்படி எதிர்கொள்வது, என்ன பதில் கூறுவது என்று திகைத்தேன்.
“பிரச்சனை இல்லையம்மா. எங்களைச் சுத்தி அவைதான் இருக்கினம். நல்ல உதவியா இருப்பினம்” ஏன் ஒரு இனத்தை பொதுமைப்படுத்தினாள் என்ற கேள்வி மனதுள்ளே.
ம்…..என்று திருப்தியில்லாமல் இழுத்தாள் அவள்.
“அப்ப உங்களோடை பிரச்சனை ஒண்டும் இல்லையோ? இங்கை அவை செய்த அட்டூழியத்துக்கு அளவில்லை ” என்றாள் சஞ்சலமாக. கண்கள் கலங்கியதா? தெரியவில்லை. “சில பேர் கொஞ்சம் துவேசம் பிடிச்சவை தானம்மா. எல்லாரும் அப்பிடியில்லை. ஏன் எங்கட ஆக்களிலையும் அப்பிடி இருக்கினம் தானே? சரியம்மா உங்கட பேரென்ன எண்டு எனக்குத் தெரியாது.
நான் உங்களுக்கு ஒரு பேர் வச்சிட்டன். வெண்ணிலா. பிடிச்சிருக்கா ?”
பௌர்ணமியாக சிரித்தாள் அவள்
நல்ல பெயர் என்றாள்.
என் பதில் அவளுக்குப் புரிந்ததா எனத் தெரியவில்லை. ஏன் அவ்வாறு நினைத்தாள் என்ற கேள்வி பயண வழியெங்கும் என் மனதைக் குடைந்து கொண்டே இருந்தது.
கொஞ்சம் யோசிக்க யோசிக்க அவளது மனநிலை புரிந்தது. அவள் பெரும்பான்மை மக்களை சாதாரண மக்களாகக் கண்டிருக்க வாய்ப்பில்லை. பாதுகாப்பு படையினராக, இராணுவமாக அந்த ரூபத்தில் மட்டுமே கண்டிருக்கிறாள். அவளின் வயதிற்கு அந்த எண்ணம் நியாயம்தான்.
2
காலங்கள் மாறின. காட்சிகளும் மாறின. இரேஷாவின் மகளின் ஞாபகம் வந்தது இப்போது. ஓரிரு மாதங்களுக்கு முன் இரேஷாவைக் காணச் சென்றபோது ‘கொட்டி கொட்டி’ என்ற வார்த்தை அடிக்கடி தாயின் வாயிலிருந்து வெறுப்புடன் வெளிவர , சிறுமியான அவளின் மகள் கேட்டாள்.
“கொட்டி கியன்னே கவுத அம்மா?
அப்பிட போம்ப தியன தெமழ கட்டியத ? “
எதிரே என்னைக் காட்டி
“மேகொல்லோ கொட்டித ?”
கொட்டி எண்டா யார் அம்மா?
எங்களுக்கு குண்டு வைக்கும் தமிழர்களா?
இவர்களும் கொட்டியா?
சிறுமியின் கேள்வியில் அவளை விட வயதில் பெரியவளான என் மகள் அதிர்ந்தாள். நானும்தான். எமது உணர்வை, வலி மிகும் வரலாற்றை எதைச் சொல்லி இவர்களுக்குப் புரிய வைப்பது?
கொழும்பில் குண்டு வெடிப்புகளைக் கண்டும் கேட்டும் மகள் மனம் கலங்கி இருப்பதாக இரேஷா கூறினாள். மகளின் சிநேகிதியும் தாயும் ஒரு குண்டு வெடிப்பில் இறந்து விட்டார்களாம்.
3
அன்றைய சிறுமியரும் சிறுவரும் இன்று வளர்ந்தவர்கள். படித்து பக்குவப் பட்டவர்கள். அதன் பின் எதையெல்லாம் இழந்தோம் எதையெல்லாம் பெற்றோம் என்பதை விட மனதில் நிலையாக வாழ்ந்து கொண்டே இருக்கும் அந்தக் கேள்வி இன்றும் உண்டு. மே மாதத்தின் குறிப்பிட்ட அந்தத் தினத்தில் ஆழமான உணர்வலைகளைத் தந்த இந்தக் கவிதையை வாசித்த போது, மீண்டும் அதே கேள்வியை மனது உக்கிரமாகவே கேட்டுக் கொண்டது
“மனதைத் திறந்து வா – பேசுவோம்
மனதைத் திடப்படுத்தி வருகிறேன் – பழகுவோம்
இறந்தான் உன் அண்ணன் – சிங்கக் கொடி போர்த்தினர்
மடிந்தாள் என் அக்கா – புலிக் கொடி போர்த்தினர்
மகனே என்றழுதாள் உன் அம்மா
மகளே என்றழுதாள் என் அம்மா
உன் இழப்பிற்கும் என் இழப்பிற்கும்
காரண வேறுபாடு உண்டா இல்லையா எனத் தெரியாது
இரண்டும் உயிர்களே எனத் தெரியும்!”
– பகீரதன் தேவேந்திரன்
இருசாராரின் எதிர் மனநிலை மாறி இருக்கின்றதா? அல்லது அதுவும் பிள்ளைகளைப் போலவே பெரிதாக வளர்ந்து விட்டதா ?
இன்று உண்மையில்
” எங்களோடை அவை எப்பிடி ?”
“அவையோடை நாங்கள் எப்பிடி ?”
பதிலொன்று வேண்டும்.
![]()
