— மாதவி, யேர்மனி
ஓவியக் கல்லூரியில் படித்த காலம்.
லைஃப் டிராயிங் (Life Drawing) கற்க முதலில் சிலைகளைப் பார்த்து வரையச் சொல்வார்கள். ஒவ்வொரு சிலையும் உயிரும் தசையும் உடல் வளைவுகளும் கொண்ட உயிர்ச்சிற்பங்களாக அங்கு இருந்தன.
படிக்கும் காலத்தில் வீனஸ் பென்சில் (Venus Pencil) பெட்டியில் இருந்த வீனஸ் சிலையை அன்று நேரில் பார்த்தது போன்ற மகிழ்ச்சி எனக்கு. அந்த வீனஸ் சிற்பத்தை அப்போ சிறுவயதில் பார்த்து வரைவோம். அதில் ஒரு சௌகரியமும் அன்று ஆரம்பகாலத்தில் இருந்தது.கை, கைவிரல், கால், கால் விரல்கள் ஆரம்பகாலத்தில் சித்திரம் வரைய சிக்கலாக இருக்கும். அதனால் பொக்கற்றில் கை வைத்து இருக்கும் உருவமாகவோ, பெண்கள் என்றால் பூக்கூடையில் கைமறைத்து பூக்களுடனும் வரைவோம்.கால் விரல்களுக்கு சப்பாத்து அல்லது நிலத்தில் வளர்ந்திருக்கும் புற்கள் மறைக்க கை கொடுக்கும்.
எப்போதும் பழைய காட்சிகள் சில எம்மை பின்னோக்கிய நிகழ்வுகளுக்கே அழைத்துச் செல்லும்.ஆனால் ஓவியக் கல்லூரியில் பல காட்சிகள் எம்மை முன்னோக்கி நகர்த்துவனவாகவே இருந்தன. தெரிந்ததைவிட தெரியாததைக் கற்றுக்கொள்ளும் போது இந்த முன்னோக்கி நகர்வுகள் ஆரம்பிக்கின்றன என்று சொல்லலாம்.
இந்த நகர்வு சிறப்பாக இரண்டாம் ஆண்டு எமக்கு ஆரம்பித்தது. லைஃப் டிராயிங் :மனிதர்களை முன் நிறுத்தி வரைய ஆரம்பித்தோம். வயதான ஆண்களும் பெண்களும் மொடல்களாக வந்து அமர்வார்கள். மாதத்தில் ஒரு முறை சில புதிய நிலா முகங்கள் வந்து போகும்.
முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் அரைகுறை ஆடையுடனான மொடல்களை பார்க்க, நாம் வரையும் நேரத்தில் பென்சில், பேப்பர் (Pயிநச) என்று இரவல் கேட்டு சிறுபிள்ளைகள் போல் சாட்டிக்கொண்டு வந்து மொடல்களை பார்த்துப் போவார்கள். அவர்கள் ஏன் வருகிறார்கள், போகிறார்கள் என்பது எமக்கு தெரியும். எவரும் அதனை கண்டு கண்டதில்லை; காரணம் நாமும் முதலாம் ஆண்டைத் தாண்டி இரண்டாம் ஆண்டுக்கு வந்தவர்கள் தான்.
நாம் வேண்டாத இரவல் பென்சிலா?
இப்போது நாம் சலனங்கள் கடந்து பார்த்துப்பார்த்து வரைவோம். லைஃப் டிராயிங் எம்மை ஒருவகையில் ஞானியாக்கியது என்று கூடச் சொல்லலாம்.ஆண், பெண்: அதே மொடல்களே வருடம் முழுவதும் வந்தாலும், வாழ்க்கை அவர்கள் மீது தினமும் ஏதோ ஒன்றை மாற்றி வைத்திருக்கும். அதனால் ஒரே மனிதர்கள் என்றாலும் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு முகத்துடன் வருவார்கள்.அதனால் வரைவதில் ஒருபோதும் சலிப்பு இல்லை.
கல்லூரியின் இறுதியாண்டில், எங்கள் கல்லூரிக்கு அடுத்தே ஒரு நடனக் கல்லூரி இருந்தது. அங்கு சிங்கள மொழி பேசும் மாணவர்கள், மாணவிகள் நடனம் கற்றனர். வாரத்தில் மூன்று நாள் அவர்கள் ஆடும் நடனத்தைப் பார்த்து லைஃப் டிராயிங் வரைய எங்களை அனுப்புவார்கள்.
அது எங்களுக்கு புதிய அனுபவமாக இருந்தது.
சிங்கள மாணவிகள் ஆடும் போது, வியர்வைத் துளிகள் அவர்கள் முகத்தில் முத்துக்கள் போல பனித்திருக்கும். அந்த அழகு, குளித்து சேலை கட்டி ஒப்பனை செய்து நகைகள் அணிந்து முன்வந்து நின்றாலும் அந்த அழகிற்கு நிகரில்லை.அந்த அழகை எனக்குள் பேரழகாக்கிவிட்டவள், மோனிஷா. இப்போது நான் ஞானி அல்ல!
எனது பென்சிலால் ஆடும் பெண்ணை அப்படியே நிறுத்தி, அவளை நான் கண் மூடி ஒரு கண்ணால் பென்சிலை முகத்துக்கு நேரே பிடித்து அளந்து அளந்து வரைவேன். அவள் சிலையாக நிற்பாள். சிறிது நேரத்தில் என் அளவீடு முடிந்ததா என விழித்து என்னைப் பார்ப்பாள்.
அந்த பார்வையை எவரும் வரைய முடியாத கொள்ளை அழகு அது.
அப்படிப் வரைந்தால் அவன் ஒரு லியோனார்டோ டா வின்சி (டுநழயெசனழ னய ஏinஉi) ஆகிவிடுவான். அப்போ என் மோனிஷா மோனாலிசா (ஆழயெ டுளைய) வின் தங்கையாக இருப்பாளோ! அவளை வரையும் காலத்தில் அவளை நாளொரு மேனி, பொழுதொரு வண்ணமாக எனக்குள் கரைத்தேன்.ஆனால் அவள்! கலை மீதே அதிகம் காதல் கொண்டவளாக இருந்தாள்.
அவள் தன்னை வரைந்தவுடன் என் அருகில் வந்து, என் தோளின் பின்னால் நின்று என் ஓவியத்தைப் பார்ப்பாள். ஆடி முடிந்து ஓடிவந்து என் பின்னால் நிற்பதால் அவளின் மூச்சுக்காற்று எனைச் சூடேற்றும்.
ஒரு நாள் நான் வரைந்த ஓவியத்தை அவள் பின்னால் நின்று பார்க்க முயன்றபோது, அவள் கால்தடுமாறி என்னைத் தழுவிக் கொண்டாள்.
அவளால் தன்னைச் சுதாரித்துக் கொள்ள முடிந்தாலும், சில நொடிகள் என்னைத் தழுவியபடியே தன்னை வரைந்த ஓவியத்துடன் உறைந்து நின்றாள்.அன்று முதல்,அவள் காதல் என் மீதா?அல்லது என் ஓவியத்தின் மீதா?என்ற கேள்வி என் உள்ளத்தில் தேங்கி நின்றது.
கல்லூரியின் இறுதி நாள்.
அவள் என்னிடம் வந்து தன்னை வரைந்த ஒரு ஓவியத்தை தரும்படி கேட்டாள்.நான் பல ஓவியங்களை எடுத்து காட்டினேன். சிலவற்றை அவள் எடுத்தாள்.பின் அவள் மீண்டும் கைநீட்டியபோது, ஒரு ஓவியத்தின் பின்னால் மறைந்திருந்த மற்றொரு ஓவியம் கீழே விழுந்தது.அதைப் பார்த்த அவள் சில நொடிகள் கண் இமைக்காமல் நின்றாள்.
நான், அவளை மட்டும் அல்ல…அவளின் தோளில் சாய்ந்து நிற்பது போல் என்னையும் சேர்த்து வரைந்திருந்தேன்.
அவள் என்மீது சாய்ந்து நிற்கும் ஓவியம் அது.
சட்டென அவள் அந்த ஓவியத்தை எடுத்தாள்.பின்னர் அந்த ஓவியத்தில் இருந்ததைப்போல் என்னுடன் நின்று பார்த்தாள். எனது தோள்களை எட்டாத அவளின் உயரம், என் மார்பில் தலை சாய்ந்து நின்றது.
நான் வரைந்த ஓவியமும் அப்படியேதான்.
ஒரு நிமிடம்…
எங்களுள் யாரும் அசையவில்லை. இரு உடலும்,இரண்டு உயிரும் அந்த அணைப்பில் பிரதிகள் எடுத்துக்கொண்டனவோ!
என் மனம் மட்டும்…. “அந்த ஓவியத்தை இன்னும் நெருக்கமாக நம்மை வரைந்திருக்கலாமோ…”எனச் சொன்னது.
அவள் எதுவும் பேசவில்லை. வரைந்த என் கைகளுக்கு மட்டும் ஒரு முத்தம் தந்து ஓவியத்தை எடுத்துச் சென்றாள்.
செல்வதை பார்த்தபடி நின்றேன்.அவள் என் தோளில் சாய்ந்தே நடப்பது போல இருந்தது.
பத்து ஆண்டுகள் பல போராட்டங்களுடன் போனது. எனக்கு மட்டுமல்ல, எம் இனத்திற்கே அது போராட்டக் காலம்.
போராட்டம் ஓய்ந்து ஒருநாள்…
அதே நடனக் கல்லூரியில் அவளை மீண்டும் சந்தித்தேன்.இப்போது அவள் அக்கல்லூரியின் அதிபர்.தனது அறைக்கு அழைத்துச் சென்று தானே தேநீர் ஊற்றி தந்தாள்.“வாழ்க்கை எப்படி போகிறது?” என நான் கேட்டேன்.ஒரு வார்த்தையில் சொன்னாள்:
“ஒருவர் வந்தார்… சென்றார்… இப்போது நான் மீண்டும் நானாகத் தனியே.
“ஏன்?” என ஒரு பெருமூச்சு விட்டேன். அவள் தலைநிமிர்ந்து சுவரைப் பார்த்தாள்.
அங்கே!
அன்று நான் வரைந்த ஓவியம், அழகான பிரேமில் தொங்கியது.அதில் ” நானும் அவளும்” .“இந்த ஓவியம் அவருக்கு பல சந்தேகங்களைத் தந்தது,” என்றாள். “சேர்வதற்கு மட்டுமல்ல, பிரிவதற்கும் பெரிய காரணம் தேவைப்படுவதில்லை.அதனால் அவர் என்னை விட்டுச் சென்றார்.எனக்கு பிடித்ததை இதுவரை மனதில் மாட்டி வைத்திருந்தேன். இப்போது அந்த ஓவியத்தை எல்லாரும் பார்க்கும் இடத்தில் மாட்டி வைத்திருக்கிறேன்.”
இதுவரை தனித்து வாழ்ந்த என்மனம், இனி நான் வரைந்த அந்த ஓவியமாகவே வாழலாம் என்று எண்ணியது.
நான் என் எண்ணத்தை தயக்கத்துடன் சொல்ல முயன்றபோது அவள் என்னை முந்திக்கொண்டாள்.
அவள் தொடர்ந்தாள்:
“நீங்கள் வரைந்த அந்த ஓவியத்தையே நான் காதலித்தேன்.அவர்! ‘நீ வரைந்த கலைஞனை காதலிக்கிறாய்’ என நினைத்து என்னை விட்டுச் சென்றார்.அதுமட்டுமல்ல,‘உன் மனதில் இப்படி எத்தனை ஆண்கள் ஓவியமாக குடியிருக்கிறார்கள்?’என்று நக்கலாகச் சொல்லிப் பிரிந்தார்.
எனது காதல் உன்னிடம் அல்ல…அந்த ஓவியத்தின் மீதே என்பதை யாவரும் அறியவே இந்த ஓவியத்தை என் அலுவலகத்தில் மாட்டி வைத்துள்ளேன்.”
அவள் காதலை நான் உணர்ந்தேன்:
அவளின் காதல் என்மீது அல்ல, என் ஓவியத்தின் மீதே.நான் அவளிடம் காதல் கொண்டதை அவள் அறிந்தால்,
அவளின் முன்னாள் கணவன் மட்டுமல்ல, அந்த ஓவியமே நம்மை பார்த்து சிரிக்கும்.
எனக்குள் ஒரு அமைதி…
“என் காதல், ஒரு ஓவியமாக, அவள் தினமும் பார்ப்பதற்காகஅங்கே தொங்கிக் கொண்டிருக்கிறது.”அது போதும்.எழுந்து விடைபெறுகின்றேன். “ஒரு நிமிடம்,” என்றாள். அவள் எழுந்து தனது அலமாரியில் இருந்து ஒரு பெரிய உறையைத் தந்தாள்.நான் உறைந்துபோனேன்.
அது 2000 ஆண்டுக்கான காலண்டர் (ஊயடநனெயச 2000) ஒன்று. 12 மாதங்களிலும் நான் வரைந்த லைஃப் டிராயிங்களே அடங்கி இருந்தது.
“காதல் உள்ளத்தை ஓவியமாக்கும் ஒரு பயணம். நான் பார்த்ததும், வரைந்ததும் ஓவியமாக அவை என் சொந்தம்.
ஆனால் அந்த காட்சிகள், மொடலாக நின்ற மோனிஷா அவள் எனக்கே சொந்தம் இல்லை” என்பதை உணர்ந்த நான் பிரிந்தேன்.
![]()
