மிஸ்டர் மங்: நிலக்கிளி பாலமனோகரனின் புதிய நாவல்

- ரூபன் சிவராஜா
ஈழத்தின் மூத்த எழுத்தாளர் நிலக்கிளி பாலமனோகரன் அவர்களுடைய படைப்பாக்க இலக்கியம் மற்றும், மொழிபெயர்ப்புப் பங்களிப்புகள் முக்கியமானவை. தமிழோடு ஆங்கிலம், டெனிஸ் ஆகிய மொழிகளை லாகவமாகக் கையாளும் மொழித்திறன் கொண்டவர்.
கடந்த மாசி மாதம் (15.02.2025) ‘மிஸ்டர் மங்’ எனும் அவருடைய நாவல் வெளியீட்டு நிகழ்வு முள்ளியவளை, தண்ணீரூற்றில் இடம்பெற்றது. பாலமனோகரன் அங்கிளுக்கும் நூலைப் பதிப்பித்து வெளியிடும் குமுழமுளை ‘முழவம்’ கலையகத்தின் பாலகாந்தன் பிரசன்னாவுக்கும் எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்.
பாலமனோகரன் அவர்கள் எங்கள் ஊர்க் காரர். அப்பாவின் நெருங்கிய நண்பர். டென்மார்க்கில் இருந்து நோர்வேக்கு பல தடவைகள் வந்து சென்றவர். அப்பாவின் வீட்டில் தங்குபவர். நான் எதிர்பாராத தருணங்களில் எனது கவிதைகளை ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்து அனுப்புபவர். இதுவரை குறைந்தது 30 வரையான என் கவிதைகளை மொழிபெயர்த்திருகின்றார். இப்படியாக எனக்கும் அவருக்குமான உறவு நெருக்கமானது.
இது ஒரு நவீன புனைவு (Modern fiction) நாவல்.50 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டது. அரசியற் காரணங்களால் அது நூலுருப் பெறவில்லை. மிஸ்டர் மங்க் என்பது ஆண்டான் குளத்தில் வாழும் ஒரு குரங்கின் பெயர். அந்தக் குரங்குதான் இந்த நாவலின் மையப் பாத்திரம். அது ஆறறிவு படைத்த குரங்கு. அந்தக் குரங்கினால் மனிதர்கள் போலச் சிந்திக்கவும், பேசவும், எழுதவும் செயற்படவும் முடிகிறது. இந்த விடயங்கள் ஒரு ஆசிரியரால் அந்தக் குரங்கிற்குக் கற்பிக்கப்படுகின்றது.
ஆண்டான் குளத்திலிருந்து நெடும்பயணம் ஒன்றினை மேற்கொள்ளும் குரங்கின் பயணவழிப் பாதையிற் பற்பல சுவாரஸ்யமான அனுபவங்களும் சம்பவங்களும் நடந்தேறுகின்றன. குரங்கு ஒரு கட்டத்தில் வாரப்பத்திரிகை ஒன்றுக்கும் ஆசிரியாராக ஆகுகின்றது. அது கட்டுரைகளையும் எழுதுகின்றது. குரங்கின் எழுத்தாணி எவ்வகை விளைவுகளை உண்டுபண்ணுகின்றது எனவாகக் கதை நகர்கின்றது. இந்நூல் பற்றிய விரிவான கட்டுரை ஒன்றினை விரைவில் எழுதவுள்ளேன்.
பாலமனோகரன் ஈழத்தின் குறிப்பிடத்தக்க நாவலாசிரியர்களில் ஒருவர். முல்லைத்தீவின் தண்ணீரூற்று அவரது சொந்த இடம். புலம்பெயர்ந்து டென்மார்க் நாட்டில் வாழ்ந்து வருபவர். நிலக்கிளி அவரது முதலாவது நாவல் 1973இல் வெளிவந்தது. அவரது இலக்கிய வாழ்விற்கு அரைநூற்றாண்டுக்கு மேலான கால நீட்சி உண்டு.
1973இல் இலங்கையின் சாகித்ய மண்டல விருதினைப் பெற்றது அவரது முதலாவது நாவலான ‘நிலக்கிளி’.
தொடர்ச்சியாக பல நாவல்கள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு மற்றும் ஓவியங்கள் ஆகிய படைப்பாக்க வகைமைகளுக்கூடாக இலக்கியத்திற்குப் பங்களித்துவருபவர். நிலக்கிளி, கனவுகள் கலைந்த போது, வட்டம்பூ, குமாரபுரம், நந்தாவதி ஆகியன இவர் எழுதிய நாவல்கள். இவற்றில் வட்டம்பூ ”The bleeding heart” என்ற தலைப்பில் ஆங்கிலத்திலும் அவரால் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்திருந்தது. 2010இல் இதன் அறிமுக நிகழ்வு ஒஸ்லோவிலும் இடம்பெற்றிருந்தது. 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் நிலக்கிளி டெனிஸ் மொழியில் (Jordpapegøjen) வெளிவந்திருக்கின்றது.
தீபதோரணங்கள், நாவல்மரம் ஆகிய தலைப்புகளில் இவரது சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. நாவல்மரம் சிறுகதைத் தொகுதி டெனிஸ் மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தவிர டெனிஸ் – தமிழ் அகராதிக்கு இவரது பங்களிப்பு இருந்துள்ளது.
முருகர் குணசிங்கம் ஆங்கிலத்தில் எழுதிய ஆய்வுநூல்களான «இலங்கையில் தமிழர் – ஒரு முழுமையான வரலாறு – கி.மு 300 – கி.பி.2000),”இலங்கை தமிழ் தேசியவாதம் அதன் ஆரம்பதோற்றம் பற்றியதோர் ஆய்வு” ஆகிய நூல்களைத் தமிழாக்கம் செய்தவர். தமிழ் நெற் (Tamil net) இணையத்தளத்திற்கு பல வருடங்கள் செய்திகள், கட்டுரைகளை மொழிபெயர்த்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாலமனோகரன் அவர்கள் தமிழ் இலக்கியத்திற்கு வழங்கிவரும் நீண்டகாலப் பங்களிப்பினை அடையாளப்படுத்தி-இலக்கியத்தின் செழுமைக்கும், மேன்மைக்கும் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக நோர்வே தமிழ்3 வானொலி அவருக்கு 2018 ஆண்டின் ‘சங்கமம்’ நிகழ்வில் சிறப்பு மதிப்பளிப்பினை வழங்கியது. ஈழத்தமிழ் சமூக பண்பாட்டு வாழ்வியலினதும், புலம்பெயர் வாழ்வியலினதும் பிரதிபலிப்பாக அமைந்த இவரது படைப்புகளும் எழுத்துகளும் தனித்துவமானவை.