இது ஓர் தேன்மார்க்க புரி என்ற சுகானுபவத்தைத் தந்தது டென்மார்க் பயணம்.

0
vm314

ஆழ் கடல் அமைதியும், ஆரத் தழுவும் தென்றலும், தொட்டுத் தொட்டுப் பேசும் மழைச் சாரலும்…
ஆஹா ! இது ஓர் தேன்மார்க்க புரி என்ற சுகானுபவத்தைத் தந்தது டென்மார்க் பயணம்.
40 ஆண்டுகளை அண்மிக்கும் நடனப்பள்ளியாக டென்மார்க்கில் விளங்கும் கீதாலயம், அவர்களின் அரங்கேற்ற நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக அழைத்து அன்பு செய்தது. 15 ஆண்டுகளின் பின்பு நிகழும் அரங்கேற்ற நிகழ்வு இது. கீதாலய இயக்குநர் திருமதி மகாலக்ஷ்மி சத்தியமூர்த்தி அவர்களின் மாணவி சிவதர்ஷினி பாஸ்கரன் அவர்கள் அரங்கேற்றம் கண்டு 25 ஆண்டுகளின் பின்பு அவரது குடும்பத்தினரான அபிஷனா, அபிஷர்ணி இருவருக்கும் தனது முதலாவது அரங்கேற்றத்தை நடத்துகிறார். ஆதலால் இந்த அரங்கேற்றம் கீதாலயத்திற்கு மிக முக்கிய நிகழ்வாக அமையப் பெற்றது. அனைத்துப் பணிகளையும் நேர்த்தியாக முன்னின்று நடாத்திக் கொண்டிருந்தார் கீதாலயத்தின் தலைவர், ஆசிரியர் திருமதி கிருஷ்ணபிரியா சத்தியமூர்த்தி கோபிநேசன். கீதாலய வளர்ச்சியில் பெரும் பங்கு இவர்க்குண்டு. இசையும்,லயமும், முகாமைத்துவமும் தெரிந்த நல்லாசிரியர். தாயகத்துப் பெருமை சொல்லும் நயினைத் தீவினை டென்மார்க் தீவில் காணும் வகையில் அரங்கேற்றம் அமைந்திருந்தது. அரங்கு நிறைந்த ரசிகர்கள், இசை வழங்க இளங் கலைஞர்கள், செயற்கை நுண்ணறிவில் தம் கற்பனையறிவை ஊற்றி காணொளி அமைப்புச் செய்த நுண்ணறிவாளர்கள், லயக்ஞானமுள்ள ஆடல் நாயகிகள் என இனிதே அமைந்தது அரங்கேற்றம்.

அதனைத் தொடர்ந்து 2 நாட்கள் கீதாலய மாணவிகளுக்கு பயிற்சிப் பட்டறை வழங்கிய இன்னுமொரு இனிய அனுபவம் கிடைக்கப் பெற்றது. அன்பினாலானது இவ்வுலகு என்ற என் ஐயன் வாக்குப் போல அன்று அறிமுகமான ஆடல் மழலைகள் எல்லாம் எனைத் ஆரத் தழுவிக் கொண்டு அன்பு செய்தனர். பாரதியின் புதிய ஆத்திச்சூடி வரிகளை இணைத்து அமைக்கப்பட்ட புதிய ஆத்திசூடி அலாரிப்பு 2018 ஆம் ஆண்டு முதல் 200 ற்கும் மேற்பட்டோருக்கு கற்றுக் கொடுத்திருந்தாலும் அன்று இவர்களுக்குக் கற்றுக் கொடுத்தது வித்தியாசமான அனுபவத்தினைத் தந்தது. பாரதியின் மந்திரச் சொற்களை மனமேந்தி, உயிருருக, உணர்வுறி நம் தௌ;ளுற்ற தமிழமுதின் சுவைகூட்டி நான் சொல்ல, அதன் தன்மை கெடாது மிக லாவகமாக டெனிஷ் மொழியில் உடனுக்குடன் மொழி பெயர்த்து உதவினார் கிருஷ்ணப்பிரியா கோபிநேசன் அவர்கள். அக்கணம் நம் அருந்தமிழை வெளிநாட்டவரும் வணக்கம் செய்யும் வகையுணர்ந்து நெகிழ்ந்தேன். எனக்கு எப்போதும் மிக நெருக்கமான நட்டுவாங்கம்,அபிநயம் இரண்டினையும் பற்றிய விரிவுரைகளையும் நாடாத்த முடிந்தது. பங்குபற்றியோர் முக மலர்வும் என்மீது கொட்டிய அன்பும் நிறைவான பயிற்சிப் பட்டறைக்கு உறுதிமொழி தந்தது.

டென்மார்க் ஐ அண்டிய நாடுகளான நோர்வே, ஸ்வீடன் நாடுகளுக்கும் என் பயணம் அமைந்தது. நோர்வே என்றதுமே கவிதா லக்ஷ்மியை எண்ணத் தோன்றும். காலாசாதனா நடனப்பளியை நிறுவி 25 ஆண்டுகளை அண்மிக்கும் இவரது ஆக்கங்கள் தமிழ் தாங்கி நிற்கும். இலக்கிய அறிவோடு நாட்டியத்தை அணுகும் வரம் பெற்ற கவிதா லக்ஷ்மி அவர்களின் சந்திப்பு நல்லின்பப் பொழுதாக அமைந்தது.

இலங்கை இந்திய கலைஞர்கள் பலருடன் பணியாற்றி காலத்தின் தேவை உணர்ந்து செயல்படும் தமிழ் ஒபெராவின் அமைப்பாளர், பெண் ஆளுமை வாசுகி ஜெயபாலன் அம்மா அவர்களையும், நோர்வேயில் தஞ்சாவூர் பாணியை அடுத்த தலைமுறையினர்க்குக் கடத்தும் தமிழினி ஆசிரியர் அவர்களையும்,நோர்வேயில் மூத்த நடன ஆசிரியரான திருமதி மைதிலி ரவீந்திரன் அவர்களையும் ஒன்றாக சந்தித்து உரையாடியதும், அவர்கள் மாணவர்களுக்கு பயிற்சிப் பட்டறை வழங்கியதும் முன்னேற்பாடற்ற முக்கிய நிகழ்வாக அமைந்தது.

கலாக்ஷேத்ராவில் நடனம் பயின்று ஸ்வீடன் நாட்டில் நம் கலை கலாச்சாரத்தை கட்டிக்காக்கும் நடனக் கலைஞர், ஆசிரியர் உஷா பாலசுந்தரம் அவர்களோடான கலைச்சந்திப்பு பார்ம்பரிய பல்வகை நடனங்களை அறியும் பாங்கில் அமைந்தது. ஒவ்வொரு பயணமும் பல நூல்களை வாசித்த பயன் தரும். அதிலும் கலைஞர்கள் சந்திப்பு ஒரு நூலக அனுபவத்தினைத் தரும்.சென்றிடுவீர் எட்டுத் திக்கும்; கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் ! என்ற பாரதி சொற்கள் என் செவியெல்லாம் எதிரொலிக்க, செல்லும் வழியெல்லாம் பெற்றுப் பகிர்ந்த பல உன்னத கலானுபவம் மீண்டும் மீண்டும் சிந்தைக்குள் உலவ, புதிதாய்ப் பிறந்து தரை தொட்டேன் இலங்காபுரியில்.
பயணம் இனிது ! தோழமை இனிது ! கலை இனிது !

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *