எங்கடை ஆச்சி 11கற்ற அறிவு. பெற்ற அறிவு. உற்ற அறிவுஅந்த மூண்டு அறிவு!
அறிவு எண்டால் என்னண்டால் அறியப்பட்ட தகவல்கள், விபரங்கள், எண்ணங்கள், கருத்துக்கள், நடைமுறைகள் எண்டு பொருள் இருக்குது எண்டு ஆச்சி சொல்லுவா. இதுக்கு மேலாலை மனுச வாழ்க்கையைச் சரியான திசையில் இயக்கிற இல்லாட்டில் கொண்டு போற கருவி எண்டும் அறிவைச் சொல்லலாம் எண்டு அவ சொல்லுவா.
அவவைப் பொறுத்தவரையில் அறிவு எண்டது கற்ற அறிவாக, பெற்ற அறிவாக, உற்ற அறிவாக இருக்கலாம். இப்ப முறைசார்ந்த கல்வி முறைசாராக்கல்வி எண்டு சொல்லுற முறையளாலை வாத்திமாரிட்டை படிச்சு எடுக்கிற அறிவு கற்ற அறிவாகும் எண்டுவா. அதமாதிரி எங்கடை வாழ்க்கை அனுபவத்துக்காலை அதில இருக்கிற ஏற்றம், இறக்கம்,உயர்வு,தாழ்வு, சோதனை, வேதனை, சாதனை எல்லாத்தாலையும் ஒரு மனுசனுக்கு அறிவு வந்திச்சுது எண்டால் அதைப் பெற்ற அறிவு எண்டு அவ சொல்லுவா. அதாவது பட்ட அறிவு இல்லாட்டில் அனுபவ அறிவு பெற்ற அறிவாகும் எண்டு அப்பு அதுக்கு விளக்கம் சொல்லுவார் .
இந்த ரெண்டு அறிவையும் வைச்சுக்கொண்டு சரி எது பிழை எது எண்டு ஆராச்சி செய்து உய்த்து ஒருத்தன் எடுத்து தனக்கு சொந்தமாக்கிக் கொள்ளுற அறிவு பகுத்தறிவு. உதைத்தான் உற்ற அறிவு எண்டு சொல்லுறது எண்டிற அப்பு, ஒரு மனுஷனுக்கு முக்கியமா இருக்க வேண்டிய அறிவு, மனுசனுக்கு மட்டுமே சொந்தமான அறிவு, மனுசனுக்குரிய அறிவு உந்த உற்ற அறிவாகும் எண்டுவார்.
உந்த உற்ற அறிவை மனுசனுக்கு உரிய அறிவு எண்டு சொல்லுறதுக்கு காரணம் இருக்குது எண்டுவார் அப்பு. உண்ணான எந்த மிருகத்தாலயும் உந்த முதல் ரெண்டு அறிவுகளையும் பெற்றுக் கொள்ள ஏலும்.
உதாரணமாப் பாத்தம் எண்டால் எங்கட வீடுகளிலை நிக்கிற ஆடு, மாடு, நாய், பூனை எல்லாத்துக்கும் நாங்கள் சில விசயங்களைப் பழக்கிறம் அதுகளும் பழகுதுகள். அதே மாதிரி அதுகள் அனுபவத்தாலையும் சிலதுகளை அறிஞ்சு கொள்ளும். உதாரணமா மாடுகளுக்கு மேயப்போகேக்கை வயலுக்கை தண்ணி குடிக்க எங்க கேணி இருக்குது எந்தப் பாதையாலை போனால் வீட்டை போகலாம் எண்டது எல்லாம் தெரியும். ஆனால் அதுகளுக்கு உந்தப் பகுத்தறிவு இல்லை எண்டுவார் அப்பு.
எந்த அறிவாக இருந்தாலும் திருவள்ளுவர் சொன்னது மாதிரி கசடறக்கற்க வேணும் எண்டுவா ஆச்சி. அப்பதான் அறிவு எண்ட கருவியைச் சரியாகப் பாவிக்க ஏலும், இல்லாட்டால் அழிவில முடிஞ்சு போகும் இதுக்கு எங்களிட்டை நிறைய வரலாற்று ஆதாரங்கள் இருக்குது எண்டுவா. இந்த மூண்டு அறிவுகளுமே தனிவாழ்விலும் சரி, குடும்ப வாழ்விலும் சரி, சமூக வாழ்விலும் சரி, பொது வாழ்விலும் சரி, அரசியல் வாழ்விலும் சரி, ஆன்மீக வாழ்விலும் சரி ஒரு மனிதனிற்கு மிக முக்கியம் எண்டு அவ நெடுகவும் சொல்லுவா.
உந்த அறிவுகளிலை ஒண்டோ இல்லாட்டில் ரெண்டோ மட்டும் இருந்து பிரயோசனமில்லை. கற்ற அறிவு மட்டும் இருந்து பெற்ற அறிவும் உற்ற அறிவும் இல்லாதவன் கற்ற முட்டாளாயிருப்பான். உதுக்கு கன படிச்ச ஆக்கள் எண்டு சொல்லுறவையை உதரணமா எடுக்கலாம் எண்டுவா. அதமாதிரி பெற்ற அறிவு மட்டும் இருந்து கொண்டு மற்ற அறிவு ஒண்டும் இல்லாதவன் பட்டும் அறிவைப் பெறாதா முட்டாளாயிருப்பான். உப்பிடிக்கொத்த ஆக்களை அரசியலிலை வடிவாப் பாக்கலாம். கற்ற அறிவு பெற்ற அறிவு எண்ட ரெண்டும் இல்லாமல் உற்ற அறிவு மட்டும் இருக்கிற ஒருத்தன் எப்பவும் குதர்க்கம் பேசுற முட்டாளாய் இருப்பான். உப்பிடிக்கொத்த ஆக்களை இலக்கியத் துறையில நிறையப் பாக்கலாம் எண்டிற ஆச்சி இப்படியான ஆக்கள் தாங்களும் சரியா வாழ மாட்டாங்கள் மற்ற சனத்துக்கும் அவங்களாலை வழிகாட்டவும் ஏலாது.
மூண்டு அறிவும் இருக்கிற ஒருந்தனாலைதான் தானும் சரியாக வாழ்ந்து மற்றவனையும் சரியாக வாழச்செய்ய ஏலும். இல்லாட்டால் வாழ்க்கை எண்டது முழுமை இல்லாமல்போடும். அப்பிடி மூண்டு அறிவும் இல்லை எண்டால் அவங்களாலை முன்னெடுக்கப்படும் எந்த விசயமும் முழுசாகாமல் வீணாகிப்போகும் எண்டிற ஆச்சி இப்ப இந்தக் காலத்திலை எங்கடை அரசியலிலையும் சரி, ஆன்மீகத்திலையும் சரி, இலக்கியத்திலையும் சரி உந்த மூண்டு அறிவும் உள்ள ஆக்கள் வலு குறைவு எண்டா.
![]()
