பிள்ளைக் காதல் !
அகிலத்து இன்பங்கள் யாவும் நமக்கென ஆகும்.மனமெல்லாம் இசை பாடும் நரம்பெல்லாம் நர்த்தனமாடும்.தென்றலின் தேவை புரியும்.சுவாசத்தின் ஆழம் நீளும்.உயிரினில் உண்மை கூடும்.மெய்யினில் தண்மை சேரும்.கண்களின் கொண்டாட்டம் காலத்தின் கூத்தினை பறை சாற்றும். !
அன்பினால் சூழ்ந்த இவ்வுலகில் சின்னச் சின்ன விடயங்களில் கொட்டிக் கிடக்கும் பேரின்பத்தை மூலதனமாக்கி இயங்கிக் கொண்டிருக்கும் இவ்வினிய வாழ்வில், எத்தனை வதனங்களின் வாசம் எம்முள் வீசிச்சென்றாலும், சுவாசத்தில் சிக்கி நிற்பது அந்த முதல் காதல் தானே!
பள்ளிப் பராயத்தில் உத்தரவின்றி அகத்தினில் நுழைந்து குடையும் இன்பவண்டு நினைவெல்லாம் நீயாகி நிற்கும் பிள்ளைக் காதல்.
எவ்வித எதிர்பார்ப்பும் அற்ற அந்த உறவினில் உள்ளதெல்லாம் உண்மையின் வெளிச்சம். எம்மை நாமே கண்டுகொள்ள அது ஓர் சிறந்த சாதனம். கண்களுக்குள் விழுந்த முகம் கலங்களுக்குள் புகுந்து லீலை செய்யும். எந்த மொழி கொண்டு சொல்ல ? வந்த களி பெரிதினும் பெரிது !
அன்ன போழ்தினி லுற்ற கனவினை
அந்தமிழ்ச் சொலில் எவ்வனம் சொல்லுகேன்
எந்த இடத்தில் கண்டோமோ அந்த இடம் நோக்கி கால்கள் தினமும் நடை பயிலும் . கால் கடுக்கக் காத்திருந்தாலும் கண்டால் சிலையாகித் தானே நிற்கிறது உயிர் மெய் . ஒருமுறை ஓரப் பார்வை வீசிச் சென்றாலே இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற புதுரத்தம் பாய்கிறது.
பூத்த ஜோதி வதனம் திரும்புமேல்
புலன ழிந்தொரு புத்துயி ரெய்துவேன்
எட்ட நின்று கண்கள் கலந்தாலும் விண்ணவன் பதவி கிட்டுகிறது. தேவ வாழ்விலும் மிகப் பெரிது காதல் பெற்று களியுற்றிருத்தல்.
ஓதொ ணாத பெருந்தவம் கூடினோர்
உம்பர் வாழ்வினை யௌ;ளிடும் வாழ்வினோர்,
மாத ரார்மிசை தாமுறுங் காதலை
மற்ற வர்தரப் பெற்றிடும் மாந்தரே!
எப்படிப் பிழைத்திட முடியும் அன்பெனும் பெருவெள்ளம் இழுத்தால் ?
அன்பெ னும்பெரு வெள்ளம் இழுக்குமேல்
அதனை யாவர் பிழைத்திட வல்லரே?
புல ஜென்மங்கள் சேர்த்து வைத்த புண்ணியத்தால் இருவரும் இணைந்து களிக்கும் வரம் பெற்றால், சூழவுள்ளனவும் இவ்வுலகும் புலனெட்டா பொருளாகும். அன்பு மட்டுமே உயிரினில் ஒன்றிடும். ஆஹா ! பிறந்த பயன் அக்கணமே புலப்படும்.
கான கத்தில் இரண்டு பறவைகள்
காத லுற்றது போலவும், ஆங்ஙனே
வான கத்தில் இயக்க ரியக்கியர்
மையல் கொண்டு மயங்குதல் போலவும்;
ஊன கத்த துவட்டுறும் அன்புதான்
ஒன்று மின்றி உயிர்களில் ஒன்றியே
தேன கத்த மணிமொழி யாளொடு
தெய்வ நாட்கள் சிலகழித் தேனரோ!
கழித்த நாட்கள் சிலவாகக் கூடும். கலி வந்து சற்று முகம் காட்டவும் நேரும். களி கொண்டிருந்த காலத்தில் நிலைத்த அகத்தீ பற்றி நிற்கும். பல்லாண்டு காலம் பற்றி நிற்கும்.
மீண்டும் காணும் நாள் வந்தால் …….! மீண்டும், அகிலத்து இன்பங்கள் யாவும் நமக்கென ஆகும். மனமெல்லாம் இசை பாடும் நரம்பெல்லாம் நர்த்தனமாடும்.தென்றலின் தேவை புரியும்.
சுவாசத்தின் ஆழம் நீளும். உயிரினில் உண்மை கூடும். மெய்யினில் தண்மை சேரும். கண்களின் கொண்டாட்டம் காலத்தின் கூத்தினை பறை சாற்றும். !
ஆதலினால் ஆனந்த வாழ்வு தரும் அன்பவங்களை அள்ளிச்செல்லுங்கள். ஆயுள் முழுதும் அமர சுகம் தரும்.
![]()
