பணிச்சுமை குறைக்க நோயாளிகள் கொலை: ஜெர்மனியில் செவிலியருக்கு ஆயுள் தண்டனை.
ஜெர்மனி செய்திக்களம்:
முதுமையின் இடர்கள்: பாதுகாப்பு கேள்விக்குறியாகும் முதியோர் வாழ்வு
முதுமை என்பது உடல் வலிமை குறைதல், நோய் எதிர்ப்பு சக்தி தளர்வு, நினைவாற்றல் பாதிப்பு, பிறரின் உதவிக்கு முழுமையாக சார்ந்திருக்கும் நிலை போன்ற பல இடர்களைக் கொண்ட காலமாகும். குறிப்பாக மருத்துவமனைகள் மற்றும் முதியோர் பராமரிப்பு நிலையங்களில் உள்ள வயதானவர்கள், தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியாத சூழலில் இருப்பதால் அதிக ஆபத்துக்குள்ளாகின்றனர். ஜெர்மனியில் நிகழ்ந்த இந்தச் சம்பவம், முதியோர் மீது பராமரிப்பு பொறுப்பில் இருப்பவர்களின் மனிதநேயமும் கண்காணிப்பும் எவ்வளவு அவசியம் என்பதை வெளிப்படுத்துகிறது. பணிச்சுமை, மன அழுத்தம், அலட்சியம் ஆகியவை சேரும்போது, பாதுகாப்பாக இருக்க வேண்டிய இடங்களே உயிருக்கு ஆபத்தானவையாக மாறக்கூடும் என்பதற்கான எச்சரிக்கையாக இந்தத் தீர்ப்பு பார்க்கப்படுகிறது.
ஜெர்மனியில், பணிச்சுமையைக் குறைக்கும் நோக்கில் 10 நோயாளிகளை கொன்றதும், மேலும் 27 பேரைக் கொலை செய்ய முயன்றதுமாக குற்றம் சாட்டப்பட்ட ஆண் செவிலியருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 2025ல் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. மேற்கு ஜெர்மனியின் வூர்சலென் நகரில் உள்ள மருத்துவமனையில், டிசம்பர் 2023 முதல் மே 2024 வரை இந்தக் குற்றங்கள் நிகழ்ந்ததாக அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இரவு பணியின்போது, பெரும்பாலும் வயதான மற்றும் உயர் கவனிப்பு தேவைப்படும் நோயாளிகளுக்கு அதிக அளவு மார்பின் மற்றும் மயக்க மருந்தான மிடசோலம் செலுத்தியதாக குற்றம் நிரூபிக்கப்பட்டது.
2007ல் செவிலியர் பயிற்சியை முடித்த அவர், 2020 முதல் அந்த மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். நோயாளிகளிடம் இரக்கம் இன்றி, “பிறரின் வாழ்வும் மரணமும் தன் கையில்” என்பதுபோல் நடந்துகொண்டதாக நீதிமன்றம் குறிப்பிட்டது. 2024ல் கைது செய்யப்பட்ட அவரின் முந்தைய பணிக்காலத்தில் நிகழ்ந்த சந்தேக மரணங்களையும் புலனாய்வாளர்கள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
![]()
