இன்றைய காதலுக்கு ஏராளமான கதவுகள்.பாதுகாப்பான வீட்டைக் கட்டுவதில் சிரமம்!
காதலெனும் கூழாங்கல்
- சேவியர்
அரை நூற்றாண்டுகள் கடந்து, நரை ஓடும் கரையோரம் விரல் கோதிக் கிடக்கும் ஆண்களும் பெண்களும் கடற்கரையோரமாய் அமர்ந்து சிந்தித்தால் காதல் கடந்து வந்த பாதையை சிலிர்ப்பாகவும், சிரிப்பாகவும் சந்திக்க முடியும்.
ஒரு காலத்தில் காதலானது வெறும் கால்களோடு, சூரியன் சூடாக்கி வைத்திருக்கும் பாதைகளில், புழுதிகள் பொறாமையோடு படுத்திருக்கும் வீதிகளில் நடை போட்டது. ஆனால் இன்று அது 5ஜி வேகத்தில் ஓடுகிறது. கண்மூடித் தனமான வேகத்தில் பாய்கிறது.
காதல் அழியவில்லை.
காதல் அழியப் போவதுமில்லை. ஆனால் அது புதிய ஆடையை உடுத்தியிருக்கிறது. புதிய நடையைக் கையிலெடுத்திருக்கிறது. புதிய கோணத்தில் புன்னகைக்கிறது.
இன்றைய உலகம் ஃபாஸ்ட் ஃபுட் உலகம். துரித உணவகம் போல எல்லாமே துரிதமாய் நடக்க வேண்டும். ஆனால் அன்றைக்கு அப்படியல்ல, எல்லாமே மெதுவாய் சுழன்றன. காதலியைக் காண காதலன் மணிக்கணக்காய்க் காத்திருப்பதெல்லாம் சுவையாய் இருந்தன. அதுவும் சங்க காலத்துக்குச் சென்றால், காதலனுக்காக வருடக் கணக்கில் காத்திருப்பது கூட சுவை கலந்த சுமையாய் இருந்தது. இப்போதோ புளூ டிக் வந்துச்சு, நீ ரிப்ளை பண்ணல , அப்போ வேற யாரோ இருக்காங்களா மனசுல ? – எனுமளவுக்கு வேகமெடுத்திருக்கிறது.
அப்போதைய காதல், சத்தமிடவில்லை. அமைதியாய் நடந்தது. யாராவது பார்த்து விடுவார்களோ எனும் அச்சத்துடன் கடந்தது. அதெல்லாம் இன்றைய தலைமுறைக்கு ‘கிரிஞ்ச்’ ஆகிவிட்டது. பொதுவிடத்தில் புரபோஸ் செய்வது முதல், ரீல்க்ஸ்களில் காதல் பகிர்தவது வரை காதல் உரக்கச் சத்தமிட்டுக் கொண்டே இருக்கிறது. யாராவது பார்த்துவிடுவார்களா எனும் அச்சம் மாறி, எத்தனை பேர் பார்த்திருக்கிறார்கள் எனும் ஆர்வமாகியிருக்கிறது.
அதில் இருக்கின்ற ஒரே சிக்கல், அன்றைக்கு எவ்வளவு மெதுவாக காதல் உருவானதோ, அந்த அளவுக்கு மெதுவாகத் தான் காதல் உடையவும் செய்தது. இன்று எவ்வளவு வேகமாய் உருவாகிறதோ, அவ்வளவு வேகமாய் உடையவும் செய்கிறது.
காதலை புனிதம் என யாரும் இப்போது சொல்வதில்லை. நாடியைப் பிடித்து கவிதையும் எழுதுவதில்லை. காதல் அவர்களுக்கு சகஜமான ஒரு நட்பாய் மாறிவிட்டது. புனிதம் என சொன்னால் தானே, புனிதம் கெட்டு விட்டது என பேச முடியும் !
முன்பெல்லாம் பார்க்காமலேயே காதல், தொடாமலேயே காதல் என சொன்னால், இன்றைய ஜென் ஸி மக்கள் அதிர்ச்சியடைவார்கள். என்னது, தொடாம காதலா.. அதெப்படிப்பா சாத்தியம் என மயக்கம் போடுவார்கள். அந்த அளவுக்கு காதலிக்கும் முறை மாறியிருக்கிறது. திறந்த சன்னல்களிடையே வெட்கத்துடன் பறந்த காதல் சிக்னல்கள் மாறி, அடைபட்ட சன்னல்களுக்குள் வெட்கம் விலகிய காதல் பயிராகிறது.
ஒருவகையில் பழைய காலம் கட்டி வைத்த சங்கிலிகளையும், மரபுகளையும் இந்த கலியுகக் காதல் உடைத்து எறிந்திருக்கிறது எனலாம். பழைய காலமே சிறந்தது என கொடி பிடிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. நவீன காதல் போல மரபுகளை மீறிய காதலோ, எல்லைகளைத் தாண்டிய காதலோ, பாரம்பரியங்களை உடைத்த காதலோ அன்றைக்கு இருந்ததில்லை. இன்று காதலின் சுதந்திர எல்லைகள் விரிவடைந்திருக்கின்றன.
எங்கே சுதந்திரம் விரிவடைகிறதோ, அங்கே பிழைகளுக்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன. அதுவே இருபக்கமும் கூர்மையான வாள் ! எனவே தான் காதல் எப்போதுமே கவனமாய்க் கையாள வேண்டிய ஆயுதமாய் இருக்கிறது.
அன்றைய காதலில் இருந்த அர்ப்பணமும், வாக்கு மாறா தன்மையும், நீண்டகாலத்துக்கான விட்டுக் கொடுத்தலும் இன்றைக்கு இல்லாமல் போயிருக்கிறது என்பதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும். இன்றைய காதலுக்கு ஏராளமான கதவுகள், எனவே தான் அவர்களால் பாதுகாப்பான வீட்டைக் கட்டுவது சிரமமாக இருக்கிறது.
அன்றைய காதலர்கள் தங்களுக்குள் ஒரு கேள்வியைக் கேட்பார்கள். “இந்த காதலில் நிலைத்திருக்க நான் என்ன செய்ய வேண்டும் ?” ! அந்த கேள்விக்கு விடையாக என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்யத் தயாராய் இருப்பார்கள். அங்கே விட்டுக் கொடுத்தலே அழகாய் மாறிவிடும்.
இன்றைய காதலர்களோ, “எவ்வளவு காலம் எனக்கு இது சிலிர்ப்பைத் தரும்” என்றே யோசிக்கின்றனர். எனவே தான் பருவங்கள் மாறும்போது இலையுதிர்வதைப் போல காதலும் உதிர்ந்து விடுகிறது. காதலர்களுக்கு இடையேயான தகவல் தொடர்பு அதிகரித்திருக்கிறது. டிஜிடல் யுகம் அதற்கான வாய்ப்புகளை அள்ளிக் குவிக்கிறது. ஆனால், பொறுமை ?
இன்றைய காதலின் மிகப்பெரிய பிரச்சினை, அது நங்கூரமில்லாத படகு போல கடலில் அலைகிறது என்பது தான். முதல் அசௌகரியத்திலேயே கடலில் குதித்து நீச்சலடித்துக் கரையேறவே மனம் விரும்புகிறது. கூட அமர்ந்து துடுப்பு இழுக்க அது விரும்புவதில்லை.
இன்றைய காதல் தவறானது அல்ல !
ஆனால் அது அவசரமாய் இருக்கிறது ! அதில் நிதானத்தின் அழகு இல்லை !
விசுவாசமாய் இருக்க வேண்டுமா ?
சுதந்திரமாய் இருக்க வேண்டுமா ? எனும் கேள்வியில் சிக்கி அது குழம்புகிறது.
வேகமாய் ஓட வேண்டுமா,
ஆழமாய் வேர் விட வேண்டுமா எனும் குழப்பத்தில் அது தவிக்கிறது.
விட்டுக் கொடுத்தல் வேண்டுமா,
பெற்றுக் கொள்தல் வேண்டுமா எனும் தவிப்பில் அது கலங்குகிறது.
மொத்தத்தில், இன்றைய காதலும் ஆழமான நேசத்தையே யாசிக்கிறது..
ஆனால் உள்ளீடற்ற ஒரு அர்ப்பணத்தையே நீட்டுகிறது.
அன்று எல்லாம் நன்றாய் இருந்தது
இன்று எதுவும் நன்றாய் இல்லை – என்பதெல்லாம் புரியாதவர்கள் பிதற்றும் வாதம். எல்லா காலத்திலும் காதல் அதன் சிலிர்ப்புடனும், சிரிப்புடனும், அன்புடனும், சில்மிஷத்துடனும் தான் பயணிக்கிறது. அந்தந்த காலகட்டங்கள் தருகின்ற வாய்ப்புகள், வசதிகள், சூழல்கள் போன்றவை காதலை வேறு வேறு விதங்களில் வெளிப்படுத்துகின்றன.
எனவே, பழைய காலத்துக்கு ஓடத் தேவையில்லை, ஆனால் பழைய கால காதலின் ஞானத்தை கொஞ்சம் பெற்றுக் கொள்ளலாம். உதாரணமாக, அந்தக் காலக் காதலில் இருந்து அர்ப்பணிப்பைக் கற்றுக் கொள்ளலாம். இந்தக் காலக் காதலிலிருந்து துணிச்சலைப் பெற்றுக் கொள்ளலாம். துணிச்சலுடன் கூடிய காதல், அர்ப்பணிப்புடன் இணையும் போது மிகவும் வலுவானதாய் மாறும் இல்லையா ?
உண்மையான காதலின் துணிச்சல் எதில் வெளிப்படும் தெரியுமா ? ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தலில், ஒருவருக்கொருவர் மன்னித்தலில், இணைந்தே வாழவேண்டும் எனும் முயற்சிகளில், உடைந்தாலும் உடனே ஒட்ட வைக்கும் இதய நேசத்தில். மற்றபடி பின்சக்கரத்தை மட்டும் ரோட்டில் தேய விட்டு பைக் ஓட்டுவது அல்ல காதலின் துணிச்சல் !
காதலர்களுக்கு ஆலோசனைகள் பிடிக்காது, எனவே இந்த காதலர் தினத்தில் காதலர்களுக்கு ஒரு ஐந்து சிந்தனைகளைச் சொல்லலாம் என நினைக்கிறேன்.
- காதல் ஒரு முறை பூக்கட்டும் தவறில்லை. ஆனால் அதை தினம் தினம் புதுப்பியுங்கள் ! காதல் நிரந்தர உணர்வல்ல, தினம் தோறும் எடுக்க வேண்டிய முடிவு ! தினம் தோறும் அன்பை வெளிப்படுத்துங்கள், காதலைக் கொண்டாடுங்கள். உணர்வுகள் காதலைத் தொடங்கி வைக்கும், அர்ப்பணிப்பே அதைத் தொடர வைக்கும் !
- நேர்மையாய் உரையாடுங்கள். எப்போதுமே பேசிக்கொண்டிருப்பதல்ல, உண்மையோடும், மரியாதையோடும், தேவையான நேரத்திலும் உரையாடுவது மிக முக்கியம். உரையாடல் நமக்குப் பிடிக்காததாய் இருந்தாலும் பொறுமையாய் உடனிருப்பது அவசியம். வார்த்தைகளை ஆயுதமாக்காதீர்கள், மௌனத்தைத் தண்டனையாக்காதீர்கள். காதலைக் கொச்சைப்படுத்தாதீர்கள்
- காதலை ஒப்பிடாதீர்கள். டெஸ்ட் தொடரைப் போன்றதே வாழ்க்கை. அதன் ஹைலைட் போன்றதல்ல. காதல் உங்களுடைய தனிப்பட்ட அன்பின் வெளிப்பாடாய் இருக்கட்டும். பிறருடைய வாழ்க்கையோ, காதலோ அதில் நுழையாதிருக்கட்டும்.
- இணைந்து வாழுங்கள், ஆனால் தனித் தனியே வளருங்கள். காதல் மாறி மாறி வளரத் தூண்டவேண்டும். உதவ வேண்டும். தனி நபர் இலக்குகளை விட்டு விடாமலும், இணைந்த காதலைக் கைவிடாமலும் பயணிக்கும் வாழ்க்கையே அற்புதமானது.
- குற்றம் சாட்டுவதை விட மன்னிப்பதையே தேர்ந்தெடுங்கள். தவறுகள் தவிர்க்க முடியாதவை, ஆனால் கசப்புணர்வுகளைத் தவிர்க்க முடியும். மன்னிப்பு கலந்த காதல், எந்தக் காயத்தையும் ஆற்றும் ஆற்றல் படைத்தது. மன்னிப்பு பலவீனமல்ல, அது உணர்வு ரீதியான பலம். நிபந்தனையற்ற மன்னிப்பு, தவறுகளைக் கிளறாமல் இருப்பது இவையெல்லாம் காதலை வளர்த்தும் உரங்கள்.
காதல் என்பது பிழையற்ற மனிதரைக் கண்டுபிடிப்பதல்ல, கண்டுபிடித்த மனிதரை அர்ப்பணிப்புடன் நேசிப்பதே
அனைவருக்கும் காதலர் தின நல்வாழ்த்துகள்.
பேசும் படம்.
படங்கள் கண்ணா
ஆச்சி, அர்ச்சுணன் பாட்டி!
நான் படம் எடுத்தேன். ஆச்சிக்கு நான் படம் எடுத்ததே தெரியாது.
ஆச்சியின் கண் தாச்சியில் வறுக்கும் மாமீதே.
முகவரி!
புகையிலை காயப்போட மதிலா கிடைத்தது?
மதில் பதில் சொன்னது —
அதுதான் வீட்டின் முகவரி என்று.
கலைக்களஞ்சியம்!
தஞ்சைப் பெருங்கோவில், மதங்களுக்கப்பால் யாவரும் அதிசயிக்கும் கலைக் களஞ்சியம்.
சாகசம்!
காவோலை யை , தளப்பம் இல்லாமல்,
சமநிலையில் சைக்கிளில் ஏற்றிவருதும் ஒரு சாகசம்!
அவர் பெயர் சாகாசம்.
![]()
