“எமது மண் எனறு எந்த அடையாளமும் இருக்கக்கூடாது”என்பதற்கான ஒரு யுத்தம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

0
vm441

முள்ளிவாய்க்கால் முடிவல்ல…

மானுடத்துக்கு எதிராக இந்த நூற்றாண்டில் திட்டமிட்டு நடத்தப்பட்ட மிகக்கொடூரமான படுகொலையை எதிர்கொண்ட ஈழத்தமிழினம், முள்ளிவாய்க்காலில் கொத்து கொத்தாக கொன்றழிக்கப்பட்ட தமது உறவுகளை நினைந்து 17 ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நினைவுகூரும் ஒரு கறுப்புநாளில் இந்த கட்டுரையை எழுதுகிறேன்.

கிபிர் விமானங்களினாலும் பல்குழல் பீரங்கிகளினாலும் ஆட்லறிகளினாலும் கொத்துக்குண்டுகளினாலும் விஷ வாயுக்களினாலும் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என்ற வேறுபாடின்றி தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக படுகொலை செய்யப்பட்டு, சிங்கள இனவாத அரசின் உச்சக்கட்ட கொடூரம் அரங்கேறிய நாள் தான் மே 18.முள்ளிவாய்க்கால் மண்ணில் 146,679 தமிழர்கள் ஓரிரு நாட்களுக்குள் படுகொலை செய்யப்பட்ட அந்த வலிகொண்ட நாளை உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்கள் 17 ஆவது ஆண்டாக நினைவுகூருகிறார்கள்.

இனப்படுகொலை என்பது ஏதோ ஒரு நாளில் நிகழ்ந்துவிடும் தன்னியல்பான நடவடிக்கை அல்ல. அது ஓர் ஒடுக்கும் சமூகம் இன்னொரு சமூகத்தின் மீது நீண்டகால அளவில் படிப்படியாகச் செயற்படுத்தும் பல்வேறு விதமான ஒடுக்குமுறைகளின் இறுதி விளைவு. அந்த அடிப்படையில் மருத்துவமனைகள், தஞ்சமடைந்த இடங்கள், உணவின்றி தவித்த மக்கள், குண்டுகளின் சத்தத்துக்குள் உயிர் காக்க ஓடிய மக்களை பெரும் சக்திவாய்ந்த நாடுகளின் உதவியுடன் வேட்டையாடிய நிலமே முள்ளிவாய்க்கால். முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்தேறி 17 ஆண்டுகளை எட்டியிருக்கும் நிலையிலும் பல குடும்பங்கள் இன்று வரை தங்கள் அன்புக்குரியவர்களை தேடி அலைகின்றனர். பல குழந்தைகள் தாய் – தந்தையற்றவர்களாக வாழ்கிறார்கள்,பல தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளின் புகைப்படங்களை கையில் பிடித்தபடி நீதிக்காக இன்னும் தெருத்தெருவாக-சர்வதேச சமூகத்திடம் நீதிக்காக கையேந்தி நிற்கிறார்கள். முள்ளிவாய்க்கால் நாள் வெறும் நினைவேந்தல் அல்ல் உயிரிழந்த அப்பாவி மக்களின் குரலை உலகிற்கு மீண்டும் மீண்டும் நினைவூட்டும் நாள்.ஒரு சமூகம் எத்தனை எத்தனை கொடுமைகளை அனுபவித்தது என்பதை இந்த உலகுக்கு மீண்டும் மீண்டும் காட்டி அதனூடாக ஒரு நீதி கிடைக்கும் என காத்திருக்கும் ஒரு சமூகத்தின் ஏக்கமாகும்.

மானுடத்துக்கு எதிரான குற்றங்கள் என்பது ஒரு கூட்டத்தை சேர்ந்த குடிமக்கள் மீது பரவலாக அல்லது திட்டமிட்டு நடத்தப்படும் கொலை, சித்திரவதை, பாலியல் வன்முறை, அடிமைப்படுத்துதல் மற்றும் வலுக்கட்டாயமாக இடம்பெயரச் செய்தல் போன்ற பன்னாட்டு மனித உரிமை மீறல்களாகும்.இந்த குற்றங்கள்
மனித நாகரிகத்திற்கு எதிரான தீவிர குற்றங்களாகக் கருதப்படுகின்றன. ரோம் சட்டத்தின்படி இந்த குற்றங்கள் ஒரு தனிப்பட்ட தாக்குதலாக இல்லாமல், ஒரு அரசின் அல்லது நிறுவனத்தின் கொள்கையாகத் திட்டமிடப்பட்டு பொது மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும். படுகொலைகள் மற்றும் சித்திரவதை, மக்களைக் கொடூரமாகக் கொல்வது மற்றும் உடல் அல்லது மன ரீதியாகத் துன்புறுத்துவது,பாலியல் வன்முறை, பாலியல் அடிமைத்தனம், கட்டாயக் கற்பழிப்பு மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள், அடக்குமுறைகள், அரசியல், சமயம் அல்லது இனம் சார்ந்த காரணங்களுக்காக மக்களைத் திட்டமிட்டு ஒடுக்குவது, நாடு கடத்தப்படல்.இவை அனைத்தையும் ஈழத்தமிழர்கள் தங்களது சொந்த மண்ணில் அனுபவித்தார்கள்-தற்பொழுதும் அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

முள்ளிவாய்க்காலில் மனித வேட்டையாடிய சிங்கள-பௌத்த இனவாதம்,முள்ளிவாய்க்காலுக்கு பின்னர் தமிழ்ப் பகுதிகளில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தை தீவிரப்படுத்தி தமிழரின் இனவிகிதாசாரத்தை அழிக்கும் செயற்பாடுகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகிறது.கடற்கரையோர கிராமங்களில் சிங்கள மீனவர்கள் குடியேற்றப்பட்டு அவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழரது அடையாளங்கள் மறைக்கப்படுகின்றன.-அழிக்கப்படுகின்றன. முள்ளிவாய்க்காலுக்கு பின்னரான 17 ஆண்டுகளும் தமிழர்கள் தங்களது மண் என கூறுவதற்கு எந்த அடையாளமும் இருக்கக்கூடாது என்பதற்கான ஒரு யுத்தம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஆட்சிகள் மாறினாலும் இனவாதத்தின் தீப்பிழம்பு சுடர்விட்டு எரிந்துகொண்டே இருக்கிறது.அந்த சுடர் சிங்கள-பௌத்த இனவாத தேசத்தின் நீண்டகால நிகழ்ச்சி நிரல்.அந்த நிகழ்ச்சி நிரல் ஆட்சியாளர்கள் மாறுவதனால் நின்றுவிடும் செயற்பாடு அல்ல.இங்கே ஈழத்தமிழர்கள் தான் தெளிவுபெறவேண்டும்.

கடந்த 17 ஆண்டுகளில் தமிழர்களின் தலைவர்கள் என்று கூறிக்கொண்டவர்கள் தமிழினத்தின் இருப்புக்காக -தேசத்தின் விடிவுக்காக -பாதிக்கப்பட்ட மக்களின் நீதிக்காக-இளைஞர்களின் எதிர்காலத்துக்காக ,சமூகத்தின் ஒற்றுமைக்காக என்ன செய்தார்கள்-அதற்காக எந்தளவுக்கு உழைத்தார்கள் என்பதிலேயே தமிழருடைய எதிர்காலம்-நிகழ்காலம் போன்றன தங்கியிருக்கிறது.இலட்சக்கணக்கான உயிர்களை மண்ணுக்காக தியாகம் செய்த ஒரு இனம்- மண்ணுக்காகவும் உரிமைக்காகவும் கோடிக்கணக்கான சொத்துக்களை-அடையாளங்களை-பாரம்பரியங்களை இழந்த ஒரு இனத்தின் தலைவர்கள் எப்பேர்பட்டவர்களாக இருக்கவேண்டும் என்பதற்கு உலக வரலாறுகள்-படிப்பினைகள் எம்முன்னால் இருக்கின்றன.ஆனால்,தமிழர்களை ஆளவேண்டுமென எண்ணிய தலைவர்கள் குறிப்பாக கடந்த 17 ஆண்டுகளாக தமிழினத்தை ஆண்ட தலைவர்கள் எவ்வாறு செயற்பட்டார்கள்-எவ்வாறான அரசியலை முன்னெடுத்தார்கள் என்பதை மீண்டும் மீண்டும் சொல்லவேண்டிய தேவையில்லை.தமிழர்கள் அவற்றை கண்டுகொண்டுவருகிறார்கள்.

இன்றும் தமிழ்த்தலைவர்களுடைய அதிகாரப்போட்டி முடிவுக்கு வரவில்லை.தமிழர் தேசத்தில் பிரதான அணியாக இருக்கும் தமிழரசு கட்சிக்குள் இன்றும் அதிகார மோதல் தொடர்கிறது.சுமந்திரன் அணி-ஸ்ரீதரன் அணி என இரு அணிகளாக பிரிந்து மோதல் போக்கு நிலவிவருகிறது.இங்கே தமிழ் மக்கள் மீதும் மிகப்பெரிய குற்றசாட்டு இருக்கிறது.தங்களுக்கான சரியான தலைமைகள் யார் என்பதில்கூட அவர்கள் இன்னும் தெளிவாகவில்லை.ஒருமுறை கூட தமிழ்த்தலைமைகள் திருந்துமளவுக்கு அவர்களது தேர்தல் முடிவு அமைந்ததில்லை.இன்னும் தமிழ் மக்கள் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கும் பக்குவத்தை அடையவில்லை என்பதை ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் நிரூபித்து வருகிறார்கள்.ஏமாற்றுபவர்களுக்கு பின்னாலும் காலம்காலமாக வாக்களிக்கும் தரப்புகளுக்கும் பின்னால் நிற்கும் ஒரு கலாசாரமே தமிழர் தாயகத்தில் இருந்துவருகிறது.அண்மைக்காலங்களாக தென்னாசிய நாடுகளில் ஏற்பட்டுவரும் ஆட்சிமாற்றங்கள் தமிழ் மக்களுக்கு ஒரு தெளிவான பாடத்தை காட்டிநிற்கிறது.

அந்த அடிப்படையில் போராட்ட குணமிக்க தலைவர்கள்-இளம் தலைமுறையினரின் முன்வருகையுடன் ஒரு இயக்கம் தமிழர் தாயகத்தில் உருவாகுவது அவசியமாகும்.அந்த இயக்கத்தை வழிநடத்துபவர்கள் தமிழர் தேசத்தின் புத்திஜீவிகள்-கல்விமான்கள்-சமூக நலன்விரும்பிகளாக இருப்பது காலத்தின் அவசியமாகும்.கனவு நனவாகாத ஒரு சமூகம் அந்த கனவு நிறைவேறும்வரை அவர்களது போராட்ட குணம் துளியளவும் குறைவது பொருத்தமாகாது.அந்த கனவை அடையும்வரை அவர்களது போராட்ட குணம் மேலும் மேலும் சக்தி வாய்ந்ததாக உருப்பெறுவது அவசியம்.அந்த அடிப்படையில் எமது இளம் தலைமுறையினரை அந்த கனவை நோக்கி நகர்த்துவது காலத்தின் தேவையாகும்.இங்கு ஒரு யுத்தம் தேவையில்லை.ஆனால்,ஒரு கல்வி சமூகமாக-பக்குவப்பட்ட,ஒழுக்கமுள்ள-அறிவார்ந்த ஒரு சமூகம் வளர்த்தெடுக்கப்படும் ஒரு நிலைமையை உருவாக்கிவிட்டாலே அந்த சமூகம் அந்த இலக்கை தனது அறிவினூடாக என்றோ ஒருநாள் பெற்றுக்கொள்ளும்.ஆனால்,தமிழர் தாயகத்தில் அந்த நிலைமையும் தற்போதைக்கு பெரும் சவாலாகவே உள்ளது.

எனவே, முள்ளிவாய்க்கால் தியாகங்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பது அவசியமாகும்.எமது இனத்தின் வரலாறு அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்படுவது அவசியமாகும்.வெறும் தேர்தல் தேவைகளுக்கான பேச்சுகளாக இல்லாமல் எமது மண்ணின் வீர வரலாறு -எமக்கு எதிராக நடந்த அநீதிகள்-போராட்டங்களின் அவசியம் பற்றிய புரிதல்-பாடங்கள் அடுத்த தலைமுறையினரிடம் வரலாறு திரிபுபடாமல் கடத்தப்படுவது காலத்தின் தேவையாகும்.அவ்வாறான ஒரு சூழல் ஏற்படுமானால் தான் எமது இனத்தின் அடையாளத்தையும், நீதிக்கான குரலையும் உலக அரங்கில் தொடர்ந்து ஒலிக்கச் செய்ய முடியும்.இந்த வரலாற்றை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவது, தமிழர்களின் நீதிக்கான பயணத்தில் மிக முக்கியமான கடமையாகும். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது வெறும் அழுகையோ அல்லது கடந்த காலத்தை நினைத்து வருந்துவதோ அல்ல.அது இழந்த உயிர்களுக்கான மரியாதை மற்றும் எமது உரிமைகளுக்கான விழிப்புணர்வு ஆகும். ஒவ்வோர் ஆண்டும் மே 12 முதல் மே 18 வரை கடைப்பிடிக்கப்படும் நினைவேந்தல் வாரம், இளைய சமுதாயத்திற்குத் தங்களின் பூர்வீக வரலாற்றையும், தியாகங்களையும் நினைவூட்டும் ஒரு பாலமாக அமைகிறது.அந்த பாலம் பலமாக போடப்பட்டால் தான் தாயக மண்ணில் விதையாக்கப்பட்டிருக்கும் இலட்சக்கணக்கானவர்களுடைய தாகம் என்றைக்கோ ஒருநாள் நிறைவேறும்.அந்த பாலத்துக்கான அத்திவாரத்தை போடக்கூடிய கடைசி சந்ததியும் நாங்களே என்பதை அனைவரும் மனதில் நிறுத்தி அடுத்த கட்ட நகர்வுகளை ஒரு ஆரோக்கியமான சமூகமாக முன்னெடுப்போம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *