புதிய வாய்ப்புக்களின் சிற்பிகளாக நாம் எழ வேண்டும்.

0
vm443

தமிழ்நாடு வழிகாட்டட்டும்
ஜூட் பிரகாஷ்- மெல்பேர்ண்

1963 இல் அறிஞர் அண்ணாதுரை தலைமையிலான தி.மு.க., “திராவிட நாடு” என்ற பிரிவினைக் கோரிக்கையை அமைதியாக கைவிட்டது. அறிஞர் அண்ணாவும் தி.முக.வும் தனித் திராவிட நாடு கோரிக்கையை கைவிடுவதற்கு மூன்று முக்கிய காரணங்கள் இருந்தன.

முதலாவது, 1963 இல் இந்திய அரசாங்கம் கொண்டுவந்த 16 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் மூலம், பிரிவினையை ஆதரிக்கும் அரசியல் நடவடிக்கைகள் சட்டவிரோதமாக்கப்பட்டன. தேர்தலில் போட்டியிடும் அரசியல்வாதிகள் இந்தியாவின் ஒற்றுமையையும் இறையாண்மையையும் பாதுகாக்க வேண்டும் என்ற நிபந்தனையும் அறிமுகப்படுத்தப்பட்டது.

இரண்டாவது, அண்ணாவிற்கும் தி.மு.க விற்கும் யதார்த்தம் புரிந்தது. தமிழகத்துக்கு வெளியே, இந்தியாவிலும் சர்வதேசத்திலும், தனித் திராவிட நாட்டு கோரிக்கைக்கு யாரும் ஆதரவு தரவில்லை. மூன்றாவது, 1962 சீன – இந்தியப் போருக்குப் பின்னர், தமிழகத்தில் பிரிவினை அரசியல் மீது எதிர்ப்பு அதிகரித்தது.

அதன் பின்னர், தி.மு.க. உள்ளிட்ட திராவிடக் கட்சிகள், இந்தியாவிலிருந்து பிரிவதை வலியுறுத்துவதற்குப் பதிலாக, மாநிலங்களுக்கு அதிக சுயாட்சி, கூட்டாட்சி முறையை (அதான்டாப்பா சமஷ்டி) வலுப்படுத்தல், தமிழ் மொழி மற்றும் கலாசாரப் பாதுகாப்பு, இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு போன்ற கொள்கைகளை முன்னிறுத்தத் தொடங்கின.

இதே கதை தானடாப்பா எங்களுக்கும் நடந்தது. தமிழ்நாடு 1960 களில் தனிநாடு கேட்டுப் போராடி, யதார்த்தம் விளங்கி, தனிநாட்டு கோரிக்கையை கைவிட்டு, மாநில சுயாட்சியை மையமாக வைத்து, தமிழ்நாட்டை வளப்படுத்தும் பயணத்தை ஆரம்பித்த பின்னர், 1977 இல் இருபது மைல் தொலைவில் இருந்த நாங்கள், வட்டுக்கோட்டையில் தனித் தமிழீழப் பிரகடனம் நிறைவேற்றி அள்ளு கொள்ளையாக எங்கட அரசியல்வாதிகளை இலங்கை பாராளுமன்றம் அனுப்பி வைத்தோம்.

அதுவரை தமிழர் விடுதலை கூட்டணியில் (TULF) இணைந்திருந்த மலையகத் தலைவர் தொண்டமானும் முஸ்லிம் தலைவர்களும் (அஷ்ரப் உட்பட) தனிநாடு கேட்ட எங்களை தனியே விட்டு விட்டு அரசோடு இணைந்து தங்கள் தங்கள் சமூக நலன்களை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் கிளம்பினார்கள்.

தனிநாடு கோரி ஆயதம் ஏந்திய எல்லா இயக்கங்களிற்கும் தாராளமாக ஆதரவு அளித்தது தமிழ்நாடு தான். 1986 இறுதியில் பெங்களூரில் நடந்த சார்க் மாநாட்டில் ராஜீவ் காந்தி முன்வைத்த தீர்வு யோசனைகளில் தலைவர் முரண்படுவதோடு தொடங்கிய சிக்கல், இயக்கத்தின் தொலைதொடர்பு சாதனங்களை இந்தியா பறிக்கப் போய், தலைவர் சென்னையில் சாகும்வரை உண்ணாவிரதம் ஆரம்பிப்பது வரை பெரிசானது. அப்பேக்கயும் எம்.ஜி.ஆர் தலையிட்டு சமாதானப்படுத்தி எடுத்த தொலைதொடர்பு சாதனங்களை எல்லாம் திருப்பி எடுத்துக் கொடுத்தார். 1987 ஜனவரி 5 இல், எம்.ஜி.ஆர் இற்கும் சொல்லாமல் கொள்ளாமல், தலைவர் கடைசித் தடவையாக இந்தியாவை விட்டு வெளிக்கிட்டு யாழ்ப்பாணம் வந்திறங்கிய அன்றுடன் இந்தியாவுடனும் தமிழ்நாட்டுடனுமான எமது உறவு விரிசல் அடையத் தொடங்கியது.

1987 செப்டெம்பர் 26 இல் காவியமான திலீபனின் உண்ணாவிரதத்தையோ 1987 ஒக்டோபர் 10 இல் தொடங்கிய இந்தியாவுடனான போரையோ, நிறுத்த முடியாமலே 1987 டிசம்பர் 24 அன்று எம்.ஜி.ஆர் காலமானார். 1990 மார்ச் 24 ஆம் திகதி இலங்கையில் இருந்து திரும்பி வந்த இந்திய இராணுவத்திற்கு சென்னை துறைமுகத்தில் நடந்த வரவேற்பில் கலந்து கொள்ள அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி மறுத்து விட்டார்.
அறுபதுகளில் தமிழ்நாடு பிரிவினையை கைவிட்டு, திராவிடக் கட்சிகள் ஆட்சியேறத் தொடங்கின காலத்தில் இருந்து சமூக பொருளாதார ரீதியில் தமிழ்நாடு படுபயங்கரமாக முன்னேறிவிட்டது. குழசவரநெ 500 நிறுவனங்களில் 70 இற்கு மேற்பட்ட நிறுவனங்கள் இன்று தமிழ்நாட்டில் இயங்குகின்றன. இந்தியாவின் முன்னனி மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு அடைந்த சமூக பொருளாதார அபிவிருத்திக்கு அடிப்படையாக அமைந்தது பெரியாரின் சமூக சீர்திருத்த சிந்தனைகள் தான். ஆமாண கொள்கை கோட்பாட்டு இல்லாமல் தமிழ்நாடு அடைந்த சமூக பொருளாதார அபிவிருத்தி சாத்தியமாகி இருக்காது.

ஆனால், எந்த கொள்கைக்கும் கோட்பாட்டிற்கும் ஒரு காலவரையறை, நஒpசைல னயவந இருக்கும். அதனை சரியாக புரிந்து கொண்டு தக்கன பிழைக்கும் கொள்கையும் கோட்பாடுமே நிலைத்து நிற்கும். மாறிக் கொண்டே இருக்கும் உலகில், மாறாமல், தம்மைத் தாமே மாற்றதிற்கு உள்ளாக்காமல், இருக்கும் கொள்கை கோட்பாடுகள் மட்டுமன்றி நிறுவனங்களையும் தனிநபர்களையும் கூட காலம் இல்லாமல் ஆக்கிவிடும் என்பது வரலாறு, உலக நியதி.
சோழனும், பாண்டியனும், பல்லவனும் ஆண்ட தமிழ்நாடு இந்தப் புரிதலை நன்றாகவே புரிந்து வைத்துள்ளது என்றே தோன்றுகிறது. யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டு அவங்களை பார்த்து சினிமா மோகம் பிடித்த மொக்கு கூட்டம் என்று நாங்கள் ஏவறைக் கதை பறைந்து கொண்டிருக்க, அவங்கள் 1970 களில் கலைஞரையும், 1980 களில் எம்.ஜி.ஆர் ஐயும் பின்னர் மாறி மாறி ஜெயலலிதாவையும் கருணாநிதியையும் ஆட்சியில் அமர்த்தி இருக்கிறார்கள். அத்தோடு தொண்ணூறுகளில் இருந்து மத்திய அரசிலும் திராவிட கட்சிகளை செல்வாக்கு செலுத்த வைத்திருக்கிறார்கள்.
ஒரு காலத்தில் தங்கள் இருப்பை தக்க வைக்க அவசியப்பட்ட திராவிட அழனநட இன்றைய காலத்திற்கு காலவாதியாகி விட்டது என்று உணரத் தொடங்கியதும், ஊழலும், அதிகரித்து வரும் போதை பாவனையும், பெண்கள் பாதுகாப்பின்மையும், வாரிசு அரசியலிற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவமும், அரசியலிற்கு புதிதாக தன்னந்தனியனாக நுழைந்து, எந்தவித கொள்கை கோட்பாடும் கதைக்காமல், யதார்த்த அரசியல் பேசிய ஜோசப் விஜய் எனும் உச்ச சினிமா நட்சத்திரத்திடம் தமிழக மக்கள் ஆட்சியை கையளித்திருக்கிறார்கள்.

விஜய்யின் அரசியல் வருகையும், தமிழக தேர்தலும், தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் நடந்த நாடகங்களும், முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் பதவியேற்பு நிகழ்வும், எங்களூர் அரசியலில் அக்கறை செலுத்தாத பலரும் ஆர்வத்தோடும் அக்கறையோடும் அவதானித்துக் கொண்டிருந்ததை பார்க்க வியப்பாகவே இருந்தது. நாங்கள் வேற தமிழ்நாடு வேற, நாங்கள் அவங்களை விட திறமான ஆக்கள் என்ற எடுவை கதைகள் எல்லாம் அடிபட்டு போன நாட்களாகவே இந்த நாட்கள் அமைந்து விட்டன.

தமிழ்நாட்டில் நடந்த மாற்றத்தை போல, சமூக பொருளாதார அபிவிருத்தியுடன் கூடிய அரசியல் சுயாட்சி நமக்கும் வாய்க்க வேண்டும். யுத்தம் முடிந்து கடந்த 17 ஆண்டுகளிற்கு மேலாகியும் நாம் கண்டது என்னவென்றால் கடந்த தேர்தலில் யாழ்ப்பாணத்தில் ஜே.வி.பி. கட்சிக்கு மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை தாரைவார்த்து கொடுத்தது தான்.
தமிழ்நாட்டில் மலர்ந்திருக்கும் ஜோசப் விஜய்யின் ஆட்சியும், தென்னிலங்கையில் நடக்கும் தோழர் அநுரவின் ஆட்சியும், நமக்கும் ஒரு உள்ளக மாற்றத்திற்கான உத்வேகத்தை தரவேண்டும். தமிழ்தேசிய பற்றுறுதியும் செயலாற்றலும் உத்வேகமும் முற்போக்கான சிந்தனையும் கொண்ட இளையவர்கள் அரசியல் தலைமை தாங்க வாய்ப்பளிக்கும் காலம் எங்களூர்களிலும் மலரட்டும்.

யுத்தம் மௌனிக்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை, நாம் விதைத்தவர்களின் கனவுகள் மண்ணில் புதைந்து கிடக்கின்றன. அந்தக் கனவுகளை மீண்டும் மலரவிட வேண்டுமென்றால், பழைய சிந்தனைகளின் சிறையிலிருந்து நம்மை நாமே விடுவித்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு காட்டிய பாதை தெளிவானது தங்களது மொழியும் கலாச்சாரத்தையும் நிலத்தையும் இருப்பையும் தக்கவைத்துக் கொண்டு தமிழ்நாடு யதார்த்தத்தை தழுவியதால் அவர்கள் அரசியல், சமூக, பொருளாதார ரீதியாக பலத்துடன் முன்னேறினார்கள்.

இன்று தமிழ்நாடு அடைந்த மாற்றத்தை அடிப்படையாக கொண்ட வெற்றியின் கதை நம் கண் முன்னே நிற்கிறது. எங்கள் மண்ணில் பிறந்து வளர்ந்த இளைய தலைமுறை, இனிமேல் வெறும் புலம்பல்களின் வாரிசுகளாக அல்லாமல், புதிய வாய்ப்புகளின் சிற்பிகளாக எழ வேண்டும், வாழ வேண்டும். அந்த எழுச்சிக்கான நேரம் வந்துவிட்டது எமது எதிர்காலம் எம் கைகளில் தான் இருக்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *