யேர்மனியின் ‘பாடன்-வூட்டம்பேர்க்’ மாநிலத்தில்ஒரு புதிய வரலாறு எழுதப்பட்டுள்ளது.

0
vm444

வி.சபேசன் – யேர்மனி

மனிதத்தை பேசுபவர்களாக இங்கு உங்கள் பிள்ளைகளை வளருங்கள்!
இன்று, 13.05.2026. யேர்மனியின் ‘பாடன்-வூட்டம்பேர்க்’ (Baden-Württemberg) மாநிலத்தில் ஒரு புதிய வரலாறு எழுதப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தின் முதலமைச்சராகச் செம் ஒச்டெமிர் பதவியேற்றுள்ளார். இவரது பெற்றோர் துருக்கி நாட்டைச் சேர்ந்தவர்கள்.

இவரது தந்தை 1963-இல் ஒரு ஒப்பந்தத் தொழிலாளராக யேர்மனிக்கு வந்தவர். இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய தொழிலாளர் பற்றாக்குறையை நிரப்ப வந்த பல்லாயிரக்கணக்கான துருக்கியர்களில் அவரும் ஒருவர். அந்த உழைப்பாளர் குடும்பத்தில் பிறந்த செம் ஒச்டெமிர், இன்று யேர்மனியின் ஒரு சக்திவாய்ந்த மாநிலத்தின் முதல்வராக உயர்ந்திருக்கிறார்.
இங்கே கவனிக்க வேண்டியது என்னவென்றால், செம் ஒச்டெமிர் வீட்டில் துருக்கி நாட்டு உறவுகளுடன் துருக்கி மொழியில் பேசுகிறார் என்பதற்காகவோ, அவரது பூர்வீகம் துருக்கி என்பதற்காகவோ எந்த யேர்மனியரும், “ஒரு துருக்கியன் எப்படி எங்களை ஆளலாம்?” என்று கையை உயர்த்திப் பைத்தியக்காரத்தனமாகக் கூக்குரலிடவில்லை.

அப்படிச் செய்வது மிக அசிங்கமான செயல் என்பதையும், அது ஒருவரின் அடிப்படை உரிமையைப் பறிக்கும் முட்டாள்தனம் என்பதையும் யேர்மனிய மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். தீவிர இனவாத நவ-நாசி குழுக்கள் வேண்டுமானால் தங்களுக்குள் முணுமுணுக்கலாம். ஆனால், வெளிப்படையாகப் பேச அவர்கள் வெட்கப்படுவார்கள். ஏனெனில், ஜனநாயகம் என்பது இனம், மதம், சாதி கடந்தது. ஒரு நாட்டின் குடியுரிமை பெற்ற எவருக்கும் அந்நாட்டின் உயரிய பதவியை அடையும் உரிமை உண்டு என்பதை ஐரோப்பா ஏற்றுக்கொண்டுள்ளது. இத்தனைக்கும் தற்போது யேர்மனியில் தீவிர வலதுசாரிக் கட்சியான யுகுனு கருத்துக்கணிப்பில் முதலிடம் வகிக்கின்றது. ஆனால் யுகுனு கூட இப்படி வெளிப்படையாக இனவாதம் பேசாது.

தேசியம் என்பது இனம், மதம், சாதி கடந்தது. யேர்மனியத் தேசியக் குடியுரிமை பெற்ற ஒருவர், அந்த குடியுரிமை உள்ள மற்றவர்கள் கொண்டிருக்கும் அனைத்து உரிமைகளையும் கொண்டிருக்கிறார். வாக்களிப்பதற்கும், வாக்களிக்கப்படுவதற்கான உரிமையையும் அவர் கொண்டிருக்கிறார். மக்கள் தேர்ந்தெடுத்தால் அவர்தான் முதல்வர், அவர்தான் பிரதமர். இதில் சாதியையும், இனத்தையும் ஆராய்ச்சி செய்பவன் கேவலமான முட்டாள்.

யேர்மனியில் நீண்ட காலம் பிரதமராக இருந்த ஏஞ்சலா மெர்கலுடைய முன்னோர்கள் போலந்து நாட்டை சேர்ந்தவர்கள். யேர்மனியர்கள் கிடையாது. 2013 தொடக்கத்தில் இந்தச் செய்தி வெளிவந்த பொழுது, போலந்து நாட்டைச் சேர்ந்த பல பத்திரிகையாளர்கள் ஆச்சரியத்துடன் இது குறித்து எழுதினார்கள். ஏஞ்சலாவின் முன்னோர்கள் வாழ்ந்த வீட்டை படம் எடுத்து வெளியிட்டார்கள். அந்த ஆண்டில் யேர்மனியில் நடந்த தேர்தலிலும் ஏஞ்சலா மெர்கல் வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் ஆனார்.

பிரான்சில் ஜனாதிபதியாக இருந்த நிக்கோலா சார்க்கோசியின் முன்னோர்கள் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்தவர்கள். சார்க்கோசி பல குற்றச்சாட்டுகளில் சிக்கிய பொழுது, இவர் வேறு இனத்தவர் என்பதால்தான் இந்தக் குற்றங்களைச் செய்தார் என்று யாரும் முட்டாள்தனமாக உளறவில்லை.

ஏஞ்சலா மெர்கல் குறித்த விமர்சனங்கள் இன்றைக்கும் யேர்மனிய மக்கள் மத்தியில் உண்டு. 2015இல் பல இலட்சம் சிரியா அகதிகள் யேர்மனிய எல்லையில் வந்து நின்ற பொழுது, ‘எவ்வளவோ பாத்துட்டோம், இதையும் பாத்துக்கலாம்’ என்பது போல் அனைவரையும் யேர்மனிக்குள் அனுமதித்தார். இன்று அது பல பிரச்சனைகளை யேர்மனயில் உருவாக்கி விட்டிருக்கிறது. ஆனால் எந்த ஒரு யேர்மனியனும் ‘ஏஞ்சலா மெர்கல் யேர்மன் ரத்தம் இல்லை, அதனால்தான் இப்படி செய்தார்’ என்று சொல்வது இல்லை. சொல்லவும் மாட்டார்கள். ஆனால் இதற்கு மாறான போக்கு தமிழ்ச் சூழலில் ஆங்காங்கே காணப்படுகிறது. மக்களாட்சி முறையில் மக்களே தமது தலைவரை தேர்ந்தெடுக்கிறார்கள். அவர் ஆள்கிறார், இவர் ஆள்கிறார் என்பவை எல்லாம் மக்களாட்சி முறைக்கு விரோதமான சிந்தனைகள் ஆகும்.
செம் ஒச்டெமிரின் பின்னணியில் ஈழத்தமிழர்கள் கற்க வேண்டிய பாடம் ஒன்று இருக்கிறது. அவரது முன்னோர்கள் துருக்கியில் வாழும் சிறுபான்மையினமான ‘செர்க்காசிய’ (ஊசைஉயளளயைn) இனத்தைச் சேர்ந்தவர்கள். 19-ஆம் நூற்றாண்டில் ரஷ்யப் பேரரசால் மாபெரும் இனப்படுகொலைக்கு உள்ளான இனம் அது. இனப்படுகொலையிலிருந்து தப்பிப் பிழைத்து, புலம் பெயர்ந்து, இன்று வேறொரு நாட்டில் அதிகாரம் மிக்கப் பதவிக்கு ஒருவர் வர முடிந்திருக்கிறது.

ஈழத்தமிழர்களே! இதில் இருந்து கற்றுக் கொள்ள முனையுங்கள். உங்கள் பிள்ளைகள் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் அதிகாரம் மிக்க பதவிகளுக்கு வர வேண்டும். அதற்கு அனைத்து இனங்களையும் மதித்து, இனவாதம் பேசாது, மனிதத்தை பேசுபவர்களாக உங்கள் பிள்ளைகளை வளருங்கள்!

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *