தங்கமாய் ஜொலிக்கும் ஒரு மூக்கு!
எடுத்ததற்கெல்லாம் மூக்குநுனியில் கோபம்.
யாருடையோ பிரச்சினைகளுக்குள் யோசிக்காமல் சும்மா மூக்கை நுழைக்கிறது.
மூக்கைப் பிடிச்சா வாயைத் திறக்கத் தெரியாத குழந்தையா இவன்?
சொன்னால் கேட்டால்தானே, நல்லா மூக்கு உடைபட்டு வருகிறார்.
பிள்ளை மூக்கும் முழியுமாய் நல்ல அழகாகப் பிறந்திருக்கு.
“நாக்காலே மூக்கைத் தொடு.”
“மூக்கிருக்கும் வரை சளி இருக்கும்.”
“மூக்கு முட்டச் சாப்பிடுகிறான்.”
மூச்சு விடத்தான் மூக்கு என்பதை விட இப்படி பல சொல்லிக் கேட்டு இருக்கிறோம்.
மூக்கைப் பற்றி இன்னும் எத்தனையோ சொல்லலாம். நான் இப்போது இங்கு சொல்ல வருவது, தங்கமாய் ஜொலிக்கும் ஒரு மூக்கைப் பற்றியது.
நாம் எதனை அதிகம் பாவிக்கிறோமோ, எதனை அதிகமாகத் தொடுகிறோமோ, அவை அதற்கேற்ற ஒரு மாற்றத்தைக் காட்டும்.
இதில் உயிருள்ளவை, உயிரற்றவை என்ற வேறுபாடு கிடையாது. இலங்கையில் பேருந்தில் ஏறும் கைப்பிடியைப் பாருங்கள்; எல்லோரும் ஓரிடத்தில் பிடித்து ஏறுவதால், தேய்த்து மினுங்கும். அதுபோல, கிரேக்க (Greece) தீவில் உள்ள லின்டோஸ் (Lindos) நகரில், பெரும் திரளான சுற்றுலாப் பயணிகள் சூழும் இடத்தில் இடுப்பளவு சிலை ஒன்று இருந்தது.
சிலையைப் பார்த்ததுமே, சிலையாக நிற்கும் அந்த மனிதனின் மூக்குதான் முதலில் தெரிந்தது. காரணம், முகமெல்லாம் பழுப்பு நிறத்தில் இருக்க, மூக்கு மட்டும் தங்கமாக ஜொலித்த வண்ணம் இருந்தது.
நான் அச்சிலைக்குப் பின்னால் தெரியும் கடலைப் பார்த்தபடி, என் கண்ணாலும் போனில் உள்ள கமராவாலும் அக்காட்சியை ரசித்த வண்ணம் இருந்தேன்.
என் மனைவி என்னைச் சுரண்டி, “நேரடியாகக் கடலை ரசியுங்கோ, எத்தனை தரம் ஒன்றையே படம் எடுப்பீர்கள்?” என்று புறுபுறுக்க, நான் பலமுறை சொல்லும் பதிலை மீண்டும் சொல்லாமல் மௌமாகக் கடலை ரசித்தேன்.
மீண்டும் என் தோளை உலுக்க, “என்னப்பா, நான் இப்போது படம் எடுக்கவில்லையே, ஏன்?” என்று திரும்பி அவளைப் பார்த்தேன் (மன்னிக்கவும், முறைத்தேன்).
“அங்கே பாருங்க, அந்தச் சிலையின் மூக்கை இதுவரை மூன்று பேர் வந்து பிடித்துவிட்டுப் போகிறார்கள்” என்றாள்.
அட! “அப்ப ஏன் என்னைக் கடலை ரசிக்கச் சொல்லிவிட்டு, நீங்கள் அந்த மூக்கைப் பார்த்தீர்களா?” என்று கேட்க நினைத்தேன்; ஆனால் கேட்கவில்லை. பொதுவாக இன்று கணவனானவன், பல நேரங்களில் இப்படியான கேள்விகள் எழும்போது தண்ணீர் இல்லாமலே கேள்விகளை விழுங்கக் கற்றுவிட்டான்.
இப்படி மனம் பல திரைக்கதை வசனங்களை எழுதும் நேரத்தில், திடீரெனக் கிளைமாக்ஸ் காட்சி வந்ததுபோல் ஒரு தந்தை தன் குழந்தையைத் தூக்கி, அந்தச் சிலையின் மூக்கைப் பிடிக்க வைத்தார். இதுவரை பொறுமையாக இருந்த நான், இப்போது “அந்தச் செயல் ஏன்?” என்று மூக்கை நுழைத்தேன். ஒரு உல்லாசப் பயணி சிலையருகே வர, நான் தயார் நிலையில் இருக்கும் ஈரான் படைபோல் கமராவைத் தயாராக வைத்திருந்தேன். அவர் மூக்கில் கைவைக்க, ஒரே சூடு! குறி தப்பவில்லை. அவர்களிடம் இருந்து பெற்ற தகவல்கள் சிலவற்றை உங்களுக்குத் தருகிறேன்:
இந்தச் சிலை கிரேக்கத்தின் ரோட்ஸ் (Rhodes) தீவில் உள்ள லிண்டோஸ் கிராமத்தில் அமைந்துள்ள அயோனிஸ் ஜிக்டிஸ் (Ioannis Zigdis, 1913–1997) என்பவருடையதாகும். அவர் ஒரு புகழ்பெற்ற கிரேக்க அரசியல்வாதி மற்றும் பொருளாதார நிபுணர் ஆவார்.
இந்தப் படத்தில் சிலையின் மூக்கு மட்டும் தேய்ந்து தங்க நிறத்தில் மின்னுவதைக் காணலாம். இதற்கான காரணம் என்னவெனில், பல சுற்றுலாத் தலங்களில் உள்ள சிலைகளைப் போலவே, இந்தச் சிலையின் மூக்கைத் தொடுவது நல்ல அதிர்ஷ்டத்தைத் (Good Luck) தரும் என்று சுற்றுலாப் பயணிகளிடையே ஒரு நம்பிக்கை நிலவுகிறது.
சில உள்ளூர் கதைகளின்படி, இந்தச் சிலையின் மூக்கைத் தொடுபவர்கள் மீண்டும் ஒருமுறை இந்த அழகான இடத்திற்கு (லிண்டோஸ்) வருவார்கள் என்று நம்பப்படுகிறது. பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வேடிக்கையாகவோ அல்லது நம்பிக்கையிலோ அந்த இடத்தைத் தொடுவதால், வெண்கலச் சிலையில் உள்ள மேல் அடுக்கு (Patina) தேய்ந்து, அடியில் உள்ள உலோகத்தின் அசல் நிறம் வெளியே தெரிகிறது.
இவர் லிண்டோஸ் கிராமத்தில் பிறந்தவர்; கிரேக்கத்தின் அமைச்சராகவும், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர். இந்தச் சிலை அமைந்துள்ள இடம் லிண்டோஸ் அக்ரோபோலிஸ் (Acropolis of Lindos) மற்றும் கடலின் அழகிய காட்சியை வழங்கும் ஒரு சிறந்த இடமாகும். பாட்டி மூக்கை வடிவாகப் பிடித்ததால் எங்கள் மூக்கு அழகானது. இங்கே பார்வையாளர்கள் மூக்குப் பிடிக்கப் பிடிக்க் மூக்கு தங்கமாய் ஜொலிக்கிறது. இது மூக்குச் சரி… இத்தாலியில் ஜூலியட்டின் (Juliet) மார்பும் கைகளும் இதேபோல் ஜொலிக்கிறது. அதற்கும் பல காரண காரியங்கள் உண்டு.
![]()
