திரையில் முளைக்கும் கிரீடங்கள்

0
vm450

திரை மிகவும் வலிமையான ஆயுதம். திரைப்படங்கள் சொல்லும் கதைகள் மக்களின் உணர்வுகளைத் தூண்டுகின்றன. திரையில் உலா வரும் கதாநாயகர்கள் மக்களின் கனவுத் திரிகளில் நெருப்பைக் கொளுத்துகின்றனர். ஒரு நல்ல நடிகர் மக்களைச் சிரிக்கவைப்பார், அழ வைப்பார், உற்சாகமூட்டுவார், சிந்திக்க வைப்பார். ஆனால், ஆபத்தான ஒரே ஒரு கேள்வி மட்டுமே எஞ்சி நிற்கும் ! அவர் அரசியலில் நுழைந்தால் என்னவாகும் ?

ஒரு நல்ல நடிகர். இயல்பாகவே ஒரு நல்ல தலைவராக மாற முடியுமா ? எழுதப்படும் திரைக்கதையில் தன்னை இணைத்துக் கொண்டு, பஞ்ச் டயலாக் பேசும் ஒருவர் ஒரு சமூகப் பிரச்சினையைத் தீர்க்க முடியுமா ? திரை பிம்பங்கள் கட்டியெழுப்பும் ஒரு கண்ணாடி மாளிமை, ஒரு வலிமையான கோட்டையாய் மக்களைப் பாதுகாக்க முடியுமா ?

தலைவராய் நடிப்பதற்கும், தலைவராய் வாழ்வதற்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு உண்டு. திரையில் ஆயிரம் பேரை அடிக்கும் ஒரு ஹீரோவினால் ஒரு சின்ன வேலை வாய்ப்பை உருவாக்க முடியாமல் போகலாம். திரையில் குடும்ப உறவுகளைப் பற்றி கண்ணீர் விட்டுப் பேசும் ஹீரோ நிஜத்தில் குடும்பத்தை நாடு கடத்தி விட்டு மாண்புகளை இழந்து வாழலாம்.

ஒரு கேமரா ஒரு ஹீரோவை உருவாக்கலாம், ஆனால் சிறந்த நிர்வாகமே ஒரு தலைவரை வெளிக்காட்ட முடியும். மக்கள் இலட்சியத்துக்காக வாக்களிக்காமல், உணர்வுகளால் உந்தப்பட்டு வாக்களிக்கும்போது தேசம் ஆபத்தை நோக்கி நகர்கிறது.

கைத்தட்டல்களே தகுதியென்றாகும் போது, தேசம் வலிமை இழக்கிறது.
மனுக்குலம் குழப்பத்துக்குள் விழுந்து விடுகிறது.

ஒரு நடிகர் நிச்சயமாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த முடியும், ஆனால் ஒரு நாட்டை நிர்வகிக்கத் தேவை நடிப்பல்ல. சிறந்த தொலைநோக்குப் பார்வை வேண்டும். நிர்வாகத் திறமை வேண்டும். பொருளாதாரம் குறித்த புரிதல் வேண்டும். ஒரு இக்கட்டான சூழலை எப்படி எதிர்கொள்வது எனும் தெளிவு வேண்டும். பழுதற்ற குணாதிசயம் வேண்டும், நல்ல சிந்தனையாளனாய் இருக்க வேண்டும், எல்லாவற்றுக்கும் மேலாய் மனிதநேயம் உடையவனாய் இருக்க வேண்டும். இத்தனை தகுதிகள் தேவைப்படும் இடத்தில் வெறுமனே திரைக்கவர்ச்சி வந்து இட்டு நிரப்பி விட முடியாது.

உங்களுக்கு இதய அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது என வைத்துக் கொள்ளுங்கள், சினிமால டாக்டரா நடிச்ச ஒருத்தரை கூப்பிட்டு ஆபரேஷன் பண்ண சொல்லுவீங்களா ? அதற்கான பதில் ‘இல்லை’ என்றால் – உங்கள் அரசியல் தேர்வுகளை நீங்கள் மறு பரிசீலனை செய்ய வேண்டியது அவசியம்.

அரசியல் என்பது தனி நபர் ஆராதனை அல்ல. அதிலும் குறிப்பாக அரிதாரம் பூசியவர்களை ஆராதிக்கும் இடம் அல்ல. ரசிகர்கள் சிந்திப்பதில்லை, அவர்கள் நடிகரைப் மந்தையைப் போல பிந்தொடர்கிறார்கள். பின்னர் தலைவனுக்காய் கேள்விகளுக்கு முட்டுக் கொடுக்கிறார்கள். அதன் பின் கேள்விகள் கேட்பதையே நிறுத்திவிட்டு தலையாட்டத் துவங்கிவிடுகிறார்கள்.

அவரு என்னோட தலைவருடா…பொறந்ததுல இருந்தே நான் அவரோட ரசிகன்…. அவரு படத்துல ஏழைகளுக்கு அள்ளி அள்ளிக் குடுப்பாரு…. சோசியல் மீடியா பாரு.. அவரு தான் கடவுள். இப்படியெல்லாம் பேசுபவர்கள் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும். ஜனநாயகம் என்பது ரசிகர் மன்றம் அல்ல ! ரசிகன் கூச்சலிடுவான், ஒரு குடிமகன் கேள்வி கேட்பான் ! திரையரங்குகள் அதிர அதிர விசிலடிக்கலாம் தப்பில்லை, ஆனால் தரையில் வரும்போது ஆழமாய் சிந்திக்க வேண்டும். அதுவே அவசியமானது.

தமிழகம் பல்வேறு தலைவர்களைக் கண்டிருக்கிறது. அவர்களில் பலர் திரையரங்கிலிருந்து கரையொதுங்கியவர்களே. திரைப்படத்தில் நடித்தார் என்பது ஒரு மனிதரை தகுதியற்றவர் ஆக்கிவிடாது. அதே போல, திரைப்படத்தில் நடித்தார் என்பதே ஒரு மனிதனைத் தகுதியுடையவராகவும் ஆக்கிவிடாது. இந்தத் தெளிவு நமக்கு மிக அவசியம்.

ஒரு நடிகன் தலைவனாகும் முன் விமர்சிக்கப்பட வேண்டும். அலசப்பட வேண்டும். உரசப்பட வேண்டும். தகுதியில்லையேல் ஒதுக்கப்பட வேண்டும்.

சமூக வலைத்தளங்கள் இப்போது அரசியல் போதைக் களங்களாய் மாறிவிட்டன. அரசியல் தலைவர்கள் டிஜிடல் வெளிகளில் கட்டமைக்கப்படுகின்றனர். தேசிய அளவில் டிரண்ட் ஆக்கப்படுகின்றனர். ஒரு செய்தியைத் திரும்பத் திரும்பச் சொல்லி அதை மக்கள் மனதில் பதிய வைக்கின்றனர். ஒரு செயற்கை மாயையை உருவாக்கி அதில் மக்களை இழுக்கின்றனர். திண்ணைப் பிரச்சாரங்கள் விலகத் துவங்கிவிட்டன. இன்ஸ்ட்டா பிரச்சாரங்களே கொடிகட்டிப் பறக்கின்றன. அரசியல் தலைவர்கள் கோடிகளைக் கொட்டி தங்கள் இமேஜை கட்டியெழுப்புகின்றனர். அல்லது பிறருடைய புகழை வெட்டி வீழ்த்துகின்றனர்.

ஒரு நல்ல தலைவனின் பண்பு, தன்னை கடவுளின் அவதாரமாய்க் காட்டுவதல்ல. மக்களின் பணியாளனாய்க் காட்டுவதே. மக்களுக்கான வேலை வாய்ப்புகள், கல்வி, மருத்துவம், பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி, எதிர்காலத் திட்டம் இப்படி நீளவேண்டும். ஒரு மோசமான படத்தைப் பார்த்தாலே, ‘சே மூணு மணி நேரம் வேஸ்ட் பண்ணிட்டேன்’ என புலம்பும் நாம் ஒரு சினிமா நடிகனை இருக்கையில் அமர வைத்தால், ‘சே ஒரு அஞ்சு வருஷம் வேஸ்ட் பண்ணிட்டேனே’ என புலம்ப வேண்டி வரலாம்.

ஒரு நாட்டின் வளர்ச்சி எப்போது வீழ்ச்சியடையத் துவங்கும் தெரியுமா ? சாதாரணக் குடிமகன் கேள்வி கேட்பதை நிறுத்தும் போது தான். ஒரு தலைவனை தலைக்கு மேல் தூக்கி வைத்து, அவன் செய்வதையெல்லாம் சரியென வாதிட்டு, அவனைக் கடவுளைப் போல பூஜித்து, அவன் நடத்திய படுகொலைகளையும் நியாயப்படுத்தி வாழ்ந்தால் – ஜனநாயகம் அங்கே மரணிக்கத் துவங்கும்.

மாறாக, சரியான கேள்விகளை எழுப்பி அதன் அடிப்படையில் தலைவர்களைத் தேர்வு செய்தால் வாழ்க்கை ஒளிரத் துவங்கும். நாம் தேர்ந்தெடுக்கப் போகும் தலைவர் பொருளாதாரத் திட்டங்கள் என்னென்ன வைத்திருக்கிறார் ? அவருடைய கல்வித் திட்டம் என்ன ? எப்படி வேலைவாய்ப்பை உருவாக்குவார் ? எப்படி ஊழலை ஒழிப்பார் ? அவருடைய அனுபவங்கள் என்னென்ன ? யார் அவரை இயக்குகிறார் ? எந்த சித்தாந்தம் உண்மையிலேயே அவருடையது – இப்படியெல்லாம் கேள்வி கேட்கும் குடிமக்களே உண்மையில் நல்ல தேசத்தைக் கட்டியெழுப்புவார்கள். தலைவர்களைக் கேள்வி கேட்பது அவமானம் அல்ல, ஜனநாயகம்.

திரை நமக்கு களிப்பைத் தரலாம், செழிப்பைத் தரும் என சொல்ல முடியாது. நடிகர்கள் திரையில் நல்லவர்களாய் தோன்றலாம், நிஜத்தில் அப்படி இருப்பார்கள் என குருட்டுத் தனமாய் நம்ப முடியாது. திரையில் பணிவாய் இருப்பவர்கள், நிஜத்தில் தாழ்மையாய் இருப்பார்கள் என அர்த்தமில்லை. இவையெல்லாம் மிக எளிய சிந்தனைகளே. நாம் அறியாத ஒன்றல்ல. ஆனால் பல வேளைகளில் உணர்வுகளால் உந்தப்படும்போது நாம் கண்மூடித் தனமாக தவறிழைத்து விடுகிறோம்.

நடிகர்கள் தொடக் கூடாதவர்கள் அல்ல. நடிகர்களை ரசிக்கலாம், நம் சிந்தனைகளை அவர்களின் காலடியில் போட்டு புதைத்து விடக் கூடாது. எதிர்காலம் ஞானமுடைய வாக்காளர்களால் தான் கட்டியெழுப்பப்படும். யார் நம் பொழுதுகளைப் போக்குவார் என்பதல்ல, யார் நம் பொழுதுகளை ஆக்குவார் என்பதே நம் கேள்வியாய் இருக்க வேண்டும். ஏனெனில் அரசாங்கத்தை பின்னணி இசை மூலம் நடத்த முடியாது, நல்ல சிந்தனையுடன் தான் நடத்த முடியும். அந்த சிந்தனை நடிகர்களிடம் இருந்தால் அவர்களை வரவேற்கலாம், அது இல்லையேல் அவர்களை நிராகரிப்பதே புத்திசாலித்தனம்.

நமது தவறு நடிகரை நாடுவதல்ல, கண்மூடித்தனமாய் தேடுவதே ! கைத்தட்டல்களை திரையரங்க வாசலிலேயே விட்டு விட்டு, நல்ல தலைவர்களை வாழ்வில் தேடவேண்டும். தேசத்தின் திசைகாட்டியை, திரை காட்டி விடுதல் நல்லதல்ல. சிரிக்கும் முகத்தை விட விரிக்கும் கரங்களையே மனுக்குலம் எதிர்பார்க்கும். ஒற்றைப் பாடலில் அனைத்தையும் சரிசெய்யும் வித்தை நிஜ வாழ்வில் இல்லை. விழித்துக் கொள்வோம்.

நினைவில் கொள்வோம் ! குடிமக்கள் கேள்வி கேட்பதை நிறுத்தும் போது, தேசம் முன்னேறுவதை நிறுத்தி விடும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *