வடிகால் – சிறுகதை

0
vm489

  • கே.எஸ்.சுதாகர் அவுஸ்திரேலியா

மீராவும் யுவனும் தமது பல்கலைக்கழகப் படிப்பை முடித்துக் கொண்ட பின்னர், புற்ஸ்கிறே என்னும் இடத்தில் லிவிங் டுகெதராக இருக்க விரும்பினார்கள். மீராவுக்கு தாதியாக புற்ஸ்கிறே ஹொஸ்பிற்றலில் வேலை கிடைத்திருந்தது.
மெல்பேர்ண் நகரத்தில் இருந்து ஏழு கிலோமீட்டர்கள் தூரத்தில் இருக்கும் புற்ஸ்கிறே – வைத்தியசாலை, சந்தை, வணிக வளாகங்கள், பல்கலைக்கைக்கழகம், புகையிரத ஸ்ரேஷன் என பல வசதிகளும் கொண்டது. யுவன் கணக்கியல் படித்திருந்ததால் மெல்பேர்ண் நகரத்தில் வேலை தேடுவதற்கு இலகுவாக இருக்கும் என்பதையும் உணர்ந்தான்.
ஆனால் புற்ஸ்கிறே நகரில் வீடுகளின் விலை அதிகமாக இருந்தது. புலம்பெயர்ந்து வந்த பல்லின மக்களும் அங்கே வாழுவதற்கு முண்டியடித்தார்கள்.
“மீரா… என்ன செய்வதாக முடிவெடுத்திருக்கின்றாய்?”
“நாங்கள் கடைசியாகப் பார்த்த வெதர் போர்ட் ஹவுசை வாங்குவோமா என்று யோசிக்கிறன். கிடைக்காட்டி வாடகைக்கு ஒரு வீடு எடுப்பம்.”
“டிப்பொஷிற் கட்ட இருக்கிற காசு போதுமா மீரா…”
“அப்பா அம்மாவையும் கொஞ்சம் தருவினம். ஓரளவுக்கு மனேஜ் பண்ணலாம்.”
இரண்டு கிழமைகளுக்கு முன்னர் பார்த்த வீட்டைக் கெஞ்சி மண்டாடிப் பெற்றுக் கொண்டார்கள். வீடு இரண்டு படுக்கை அறைகள், குசினி, ரொயிலற் பாத்றூம், சிறிய ஹோல் என்பவற்றைக் கொண்டிருந்தது. அந்த வீட்டில் முதிய வெள்ளையினத் தம்பதியினர் முன்னர் வாழ்ந்து வந்தார்கள். கணவர் இறந்து போகவே மனைவி முதியவர் காப்பகத்தில் தஞ்சமடைந்திருந்தாள்.
மரப்பலகைகளால் செய்யப்பட்ட வெளிப்புறச் சுவரைக் கொண்ட வீடுகளை அவுஸ்திரேலியாவில் வெதர் போர்ட் ஹவுஸ் என்று அழைக்கின்றார்கள். சிலர் அதற்கு வண்ணம் அடித்திருப்பார்கள். இவர்கள் வாங்கிய வீடு இயற்கையான தோற்றத்தைக் கொண்டிருந்தது. பொதுவாக இந்த வீடுகளின் தரையையும் சுவர்களையும் தாங்குவதற்கு – கான்கிரீட், மரம், அல்லது செங்கல் தூண்களைக் கொண்ட ஸ்டம்ப் அடித்தளங்கள் பயன்படுத்துகின்றன.
தினமும் மீரா வேலைக்குப் போனதும், யுவன் சமையல் செய்து கொள்வான். அப்புறம் தனது வேலை தேடுவதற்கான பணிகளில் மூழ்கி விடுவான்.
ஆறுமாதங்கள் கடந்தும் யுவனால் தனக்கொரு பொருத்தமான வேலையைத் தேடிக் கொள்ள முடியாமல் இருந்தது. இடையிடையே சில வேலைகளுக்குப் போய் வந்தான். இதனால் மோட்கேஜ் எனப்படும் வீட்டுக்கான அடைமானப் பணத்தைக் கட்ட முடியாமல் இருவரும் திண்டாடினார்கள்.
“யுவன்… எனக்கொரு யோசனை. என்னோடை வேலை செய்யிற கனபேர், ஹொஸ்பிற்றலுக்குக் கிட்ட வீடுகள் கிடைக்காததால தூர இடங்களில இருந்து வருகினம். என்ரை பெஸ்ற் சினேகிதிகளான சாலற்றும் ஒலிவியாவும் எங்கடை மற்ற றூமிலை தங்கிக்கொள்ள முடியுமா எண்டு கேட்டபடி இருக்கிறாளவை.”
“மீரா… உனக்குச் சரியென்றால் அவர்களுக்கு அதை வாடகைக்குக் குடுக்கலாம்.”
இவர்களின் உரையாடல் நடந்த மறுவாரமே சாலற்றும் ஒலிவியாவும் இவர்களின் வீட்டிற்குக் குடிபெயர்ந்தார்கள். உணவு சமைப்பது, குளியலறை கழிப்பறை பாவிப்பது என சில சிக்கல்கள் இருந்தாலும் அவற்றை தங்களுக்குள் சரி செய்து கொண்டார்கள்.
நாளாக மீராவுக்கும் யுவனுக்கும் அவர்கள் இருவரினாலும் வருமானம் வரத் தொடங்கியது. அவர்களின் வருகையின் பின்னர் யுவனுக்கும் சிற்றியில் ஒரு வேலை கிடைத்துக் கொண்டது.
மீரா தனது பெற்றோரிடம் வாங்கிய கடனை முதலில் அடைத்துக் கொண்டாள்.
மீராவின் நண்பிகளின் வருகைக்குப் பின்னர் இரவு வேளைகளில் வீட்டுக்குள் சில சத்தங்கள் எழுவதை யுவன் அவதானிக்கத் தொடங்கினான்.
“என்ன மீரா… உன்ரை நண்பிகள் சுவரிலை ஆணி அடிச்சு படங்கள் மாட்டினமோ?” என யுவன் நக்கல் விட்டான்.
தொடர்ந்தும் சில சத்தங்கள் கேட்டதையடுத்து, ஒருநாள் நண்பிகள் இல்லாத சமயம் அவர்களின் அறையை மீரா சோதனையிட்டாள். அவர்களின் அறைச்சுவர்கள் வெறுமையாக இருந்ததைக் கணட மீரா, யுவனை அழைத்து வந்து அதைக் காட்டினாள்.
“மீரா… அப்படியெண்டால் இது பேய் பிசாசு வேலையா இருக்குமோ?”
“உங்களுக்கு மெல்பேர்ண் வெதரைப் பற்றித் தெரியாதா என்ன? காலநிலை வேறுபாட்டால்தான் இந்தச் சத்தங்கள் வருகின்றன. பகலிலை சரியான வெய்யில், இரவிலை கடும் குளிர். வீடுகள் வெடிக்காமல் என்ன செய்யும்! நான் முந்தி எங்கடை வீட்டிலை இருக்கேக்கையும் இப்பிடிச் சத்தங்கள் கேட்டிருக்கு…”
அத்துடன் அந்தச் சத்தங்களுக்கு முழுக்குப் போட்டார்கள். காசு பெருகப் பெருக மீராவும் யுவனும் வீட்டுக்கடனை அடைப்பதில் குறியாக இருந்தார்கள்.
“நான் இன்னும் இரண்டு சினேகிதிமாரை வீட்டில வாடகைக்கு இருத்தப் போறன்”
“மீரா… எப்பிடி ஒரு அறைக்குள்ளை நாலுபேர்கள் இருப்பினம்?”
“யுவன்… இரண்டு பேருக்கு இரவு வேலை, இரண்டு பேருக்கு பகல் வேலை. நாங்கள் எல்லாரும் நர்ஷாக வேலை செய்வதால் றோஸ்ரரை மாற்றிக் கொள்ளலாம். அப்பிடி ஏதும் சிக்கல் வந்தால் எங்கட ஹோல் இருக்குத்தானே!”
“உது சரிப்பட்டு வராது மீரா…”
“கொஞ்ச நாளைக்குத்தானே! வீட்டுக்கடன் முடிஞ்சதும் எல்லாரையும் கலைச்சுப் போடலாம்” என்றாள் மீரா.
காலப்போக்கில் பணியாளர்களின் பட்டியலை மாற்றிக்கொள்பவரை மீரா சிநேகிதம் பிடித்துக் கொண்டாள். வீட்டிற்கு லோறா, எம்மா என்ற இரண்டு புதிய சிநேகிதிகள் வந்தார்கள்.
வருமானமும் வீட்டிற்குள் சத்தமும் பெருகியது. ஒருநாள் நள்ளிரவில் பெரியதொரு சத்தம் கேட்டு விழித்தெழுந்தார்கள். மீராவும் யுவனும் இருந்த அறை கொஞ்சம் சரிந்திருந்தது கண்டு திகைத்துப் போனார்கள்.
அதைத் திருத்துவதற்கு கட்டடக்கலை சார்ந்த விற்பன்னர்கள் சிலரை யுவன் அழைத்திருந்தான்.
ஹமரத்தாலான ஸ்டம்ப்கள் காலப்போக்கில் பழுதாகக்கூடும். அதனால் சுவர்களில் விரிசல், சீரற்ற தரைகள், கதவுச்சட்டங்களில் இடைவெளி போன்ற பிரச்சினைகள் வரக்கூடும்” எனச் சொன்ன அவர்கள் புதிதாக ஸ்டம்ப்களை மாற்றினார்கள்.
சில நாட்கள் அழகாக இருந்த வீடு, ஒரு மழை நாளில் தனது மூன்றில் ஒரு பாகத்தை நிலத்தினுள் புதைத்துக் கொண்டது. சரிவாகப் புதைந்திருந்த அந்த வீட்டிலிருந்து, ஜேம்ஸ் பாண்ட் சினிமாப் படப்பாணியில் தப்பித்து ஆறுபேரும் வெளியே வந்தார்கள்.
மீண்டும் அதே விற்பன்னர்கள் வந்தார்கள். வீட்டையும் நிலத்தையும் ஆராய்ச்சி செய்தார்கள். புற்ஸ்கிறே நகரம் மிகவும் பழமை வாய்ந்தது என்பதால் அந்த நாட்களில் ட்ரெயினேஜ் எனப்படும் வடிகால் வசதிகள் அந்த வீட்டிற்குச் செய்யப்பட்டிருக்கவில்லை என்பதை அவர்கள் கண்டு பிடித்தார்கள்.
“இரண்டு பேர்கள் இருக்கும் வீட்டில் பலர் இருந்தததால், நீங்கள் குளிக்கும்போது வரும் கழிவு நீர் போன்றவை இந்த வீட்டிற்குக் கீழே போனதால் வந்த வினை” என்றார்கள் விற்பன்னர்கள்.
“அப்போ ரொயிலற்…” என்று ராகமிழுத்தாள் ஒலிவியா.
கட்டடக்கலை விற்பன்னர்கள் அந்த ஆறுபேரையும் பார்த்துச் சிரிக்க, மீரா மயங்கிப் பொத்தெனச் சரிந்தாள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *