முற்றுப்புள்ளி
–
.
ஒரு வாரமாக ஒட்டும் இல்லை உறவும் இல்லை.
அப்படியென்றால், ஒரு வாரத்திற்கு முன்பு மாதவனுக்கும் மாதவிக்கும் நல்ல ஒட்டும் உறவுமா என்று கேட்டால், “ஓம்” என்றும் சொல்லலாம், “இல்லை” என்றும் சொல்லலாம்.
ஓவியக்கல்லூரியில் கற்க ஆரம்பித்த நாள் முதலாய், அவள் மற்ற மாணவிகளிடம் இருந்து தன்னைத் தனியாகக் காட்டியது அவள் கட்டிவரும் சேலைதான். எல்லா மாணவிகளும் சுடிதார், ஜீன்ஸ் என தினமும் அசத்தல் அசத்தலாக ஆடைகளுடன் வரும்போது மாதவி மட்டும் சேலையுடன் வருவாள். அதுவும் கட்டம் கட்டம் போட்ட சேலையே அவளது அடையாளமும் ஆகிவிட்டது.
மகாதேவன் அதே ஓவியக்கல்லூரியில் மாணவனாக மாதவியுடன் கற்று வருகிறான். மாதவியின் குணம், நடத்தை ஏதுவும் அவனுக்குத் தெரியாது. ஆனால், அவன் மனதில் அவள்தான் நிறைந்து இருக்கிறாள்.
அதற்குக் காரணம் அவளது அழகுதான். அழகுதானே முதல் முகவரி! அன்பு, பாசம், கருணை எல்லாம் ஒருவரைத் திரும்பிப் பார்த்த பின் உணரும் உணர்வுகள். இது மாதவனின் எழுதாத விதி. அந்த அன்பு, பாசம், கருணை, நடத்தை எல்லாம் ஒருவர் பற்றிய கருத்தை நிலைநிறுத்த மட்டுமே உதவும்.
மாதவி சற்றுத் தலைக்கனம் பிடித்தவள். அவள் தனது ஓவியங்களை ஒருபோதும் எவருடனும் ஒப்பிட்டுக் கதைக்க மாட்டாள். மகாதேவன் பிறரது ஓவியக் கண்காட்சிகளைப் பெரிதும் பார்க்க மாட்டான்; கடைக்கண்ணால் மட்டுமே பார்ப்பான். அதுவும் ஓட்டப்பந்தயத்தில் ஓடுபவன், இடையே சற்றுத் திரும்பிப் பார்ப்பான் தானே, அது தான் எங்கு ஓடுகிறேன், எவ்வளவு இடைத்தூரம் இருக்கிறது என்பதை அறிவதற்கு!
அதுபோலவே, மகாதேவனும் அதே கண்ணோட்டத்தில் தனது ஓவியங்கள் எங்கே உள்ளன, எந்த இடத்தில் உள்ளன என்பதை அறிய மட்டுமே பார்ப்பான்.
மகாதேவனும் மாதவியும் நன்றாகப் பேசிக்கொள்வார்கள். ஆனால், மறந்தும் ஓவியம் சம்பந்தமாக ஏதும் பேச மாட்டார்கள். ஓவியக்கல்லூரியிலேயே இவர்களது உறவு விசித்திரமான ஒரு சித்திரமாக இருந்தது.
மாதவிக்கு அடிக்கடி அவனுடன் கதைப்பதும், இடைநேரத்தில் நல்ல திரைப்படங்களைப் பற்றி அலசுவதும் கொஞ்சம் பிடித்துத்தான் இருந்தது. அதிலும் படங்களில் வரும் பெண் அடிமைத்தனம் பற்றி அடிக்கடி தெறிக்கவிடுவாள். அது தவிர, அடிக்கடி வரும் முரண்கள்தான் அவர்களுக்கு அரண்களாக இதுவரை அவர்களது உறவையும் தக்கவைத்துள்ளன.
மாதவி மீது மகாதேவன் மட்டுமல்ல, பலருக்குக் கண். ஆனால், மற்றவர்கள் போல் அல்லாமல் மாதவன் கண்ணியமாக அவளுடன் நடந்து வந்தான்.அன்று ஓவியக்கல்லூரிக்கு விடுமுறை. காரணம், நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் காலடி வைத்த பொழுது. உலகமே அதைக் கொண்டாடிக்கொண்டு இருந்த அந்தப் பொழுது, மகாதேவன் மாதவியின் வீட்டில் காலடி வைத்தான்.
காதலை வார்த்தைகளிலோ, கடிதத்திலோ, ஏன் கவிதையிலோ தெரிவிக்காமல், நேரடியாக மாதவியின் வீட்டிற்கே வந்து கேட்கிறான். இது புதுவிதமான அணுகுமுறையாக இருந்தது மாதவிக்கு.
“எவ்வளவு துணிச்சல் இருந்தால் நேரே வீட்டுக்கு வருவான்?” என நீங்களும் எண்ணலாம்.
அதற்கு துணிவைத் தந்தது, சற்றுத் தொலைவில் மாமரத்தில் மாம்பழம் பிடுங்கிச் சாக்கில் போட்டுக்கொண்டு இருந்த மாதவியின் தந்தையின் புன்னகைதான் , அவனுக்கு நல்வரவு சொன்னது. மாதவியை விரும்பத் தொடங்கியதும் அவன் முதலில் நட்புக்கொண்டது மாதவியின் தந்தையுடன்தான்! மாதவியின் குணம் அறிந்த தந்தை மகாதேவனிடம் அவளைப்பற்றி யாவும் கூறி, “முடிந்தால் அவள் சம்மதித்தால் எங்களுக்குச் சந்தோஷம்” என்று படங்களில் வரும் வில்லன் அப்பா போல் இல்லாமல் அவர் நடந்து கொண்டார்.
வீடு வரை வருவதற்கு மகாதேவனுக்கு இருந்த ஒரே நம்பிக்கை, ஒரு துருப்புச் சீட்டு. அன்று மாதவியுடன் தேநீர் குடிக்கும்போது, நடந்த ஒரு சம்பவம்தான்.
“வீடு எப்படி இருக்க வேண்டும், பிள்ளைகளுக்குத் தனித்தனி அறைகள் எப்படி அமைய வேண்டும்?” என்றெல்லாம் பொதுவாகக் கதைத்த பொழுது, மாதவி திடீரென,
“எங்கள் பிள்ளைகளுக்குத் தனித்தனி அறைகள் தேவையில்லை. அவர்கள் எங்களுடன் தான் ஒன்றாக இருக்க வேண்டும்,” என்றாள்.
மாதவனின் இதயத்தில் ஒரு இன்ப அறை விழவே, மாதவி ‘எங்கள் பிள்ளைகள்’ என்று சொன்ன வார்த்தை, அக்கணத்தில் ‘மகாதேவனை’ ‘மாதவனாகச்’ சுருக்கிக் கொண்டது. இப்பொழுதெல்லாம் அவர்கள் வரையும் ஓவியத்தின் அடியில் ‘மாதவன்’, ‘மாதவி’ என்றே பெயர் போட்டுக் கொண்டனர்.
ஓவியக்கல்லூரியில் நடைபெறும் சித்திரப் போட்டிகளில், எப்பொழுதும் முதலிடத்தை ஆண்களே பெற்று வந்தனர். மாதவனும் பல தடவை பெற்றுள்ளான். இன்று அறிவிப்புப் பலகையில் இருந்த ஓவியப்போட்டி முடிவுகளைப் பார்த்த மாணவர்கள் மாதவிக்கு வாழ்த்துத் தெரிவித்தவண்ணம் இருந்தனர்.
ஆம், இம்முறை பரிசு மாதவிக்கு!
மாதவனும் வாழ்த்துத் தெரிவித்துவிட்டு, இருவரும் ஒன்றாகச் சென்று தேநீர் அருந்தினர். அப்போது மாதவன்:
“மாதவி! நீ வென்றது அதிசயமல்ல் ஒரு பொம்பிளையே வென்றதுதான் எனக்குப் புரியவில்லை,” என்றான்.
அவ்வளவுதான்! மாதவி, மாதவனைப் புரிந்துகொண்டாள்.
இப்போது ஒட்டும் இல்லை; உறவும் இல்லை. அவள் படம் வரையும்போது, அவள் தோள்களில் கையைப் போட்டுத் தன் காதலைத் தெரிவித்தாலும், அவள் தன் தோள்களிலேயே உணர்வற்றவளாக இருந்தாள்.
“மாதவி, அட! நீ வெற்றி பெற்றுவிட்டாயே?” எனக் கேட்டு இருந்தால் கூட, அவள் தன் தோள்களில் இருக்கும் அவன் கரங்களின் பரிசத்தை உணர்ந்திருப்பாள்.
ஒட்டுமொத்தப் பெண்களையுமே வல்லமையற்றவர்கள் என்று அவன் சொன்ன அந்த ஒரு சொல்தான், இவர்களது காதல்கதைக்கே முற்றுப்புள்ளியானது.
சில முற்றுப்புள்ளி கள் தொடர்க்குறியானதும் உண்டு.
![]()
