இலங்கைச் செய்திக் குறிப்புகள் சில..
-தற்போது யின் மொத்தக் குடும்பங்களின் எண்ணிக்கை 61.11.315 ஆகும். ஹம்பகா மாவட்டத்தில்தான் அதிகளவு குடும்பங்கள். குறைவான குடும்பங்கள் வசிக்கும் மாவட்டம் மன்னார். பெண்கள் தலைமைத்துவ குடும்பங்கள் கூடிய மாவட்டம் முல்லைத்தீவு.
-நாட்டில் தொலைபேசிப் பாவனை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு நூறு பேருக்கும் 147 கைபேசிகள் பாவனையாகும். இலங்கை மத்தியவங்கியின் பொருளாதார அறிக்கையில் தெரியவந்துள்ளது.
-“கிளீன் சிறிலங்கா“ திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளை ஏற்றி-இறக்கல் பணிக்காக இ.போ.சபை விசேட பஸ் வண்டிச் சேவையை ஆரம்பித்துள்ளது.
-110 கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருட்களுடன் 22 இலங்கைப் புத்ததுறவிகள் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டனர்.
-யாழ்-செம்மணி மனிதபுதைகுழியின் 3ம் கட்ட அகழ்வு கடந்த 8 மாதங்களின் பின் மீண்டும் தோண்டும் பணிகள் ஆரம்பம். 06.05.2026 வரை 256 மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டன.
-நாட்டில் நிலவிய கடும் வெப்ப நிலையால் 30.04.2025வரை 100 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.
-இணைய மோசடிக் குற்றச்சாட்டுகளில் 200க்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டதுடன், கணனி உபகரணங்கள், வாகனங்கள், பணம், மற்றும் ஆடம்பரப் பொருட்களையும் பொலிசார் பறிமுதல் செய்தனர். இவர்களைக் கைது செய்து வழக்குத் தொடரப்பட்டதுடன் பலர் அவர்களது சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.
-இலங்கையில் வாழும் நகர்ப்புற மக்களில் 30 – 32 வீதமானோருக்கு“கொழுப்புக் கல்லீரல்“ நோய் பாதிப்பு. விரைவுணவு, உணவுப்பழக்கம், உடலுழைப்புக் குறைவு போன்றவையே பிரதான காரணம் என மருத்துவ அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
-சிறுவர்கள் உடல் ரீதியாகத் தண்டிக்கும் குற்ற முறைப்பாடுகள் வருடாந்தம் 2.000 – 2.500 கிடைத்து வருவதாக தேசிய சிறுவர் பாதுகாப்புச் சபை அறிவித்தது.
-சர்வதேச ஊடகங்களின் சுதந்திர அளவீட்டில் இலங்கை 139வது இடத்தில். 180 நாடுகளிடையே இந்தக் கணிப்பு எடுக்கப்பட்டது. 2025ஆண்டில் 150 வது இடத்தில் இருந்துள்ளது. உலக ஊடக அமைப்பு இத்தகவலை வெளியிட்டுள்ளது.
-01.01.2026 – 10.05.2026 வரை 27.465 டெங்கு நோயாளர்கள் அடையாளம். 14 பேர் இறப்பு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. ஹம்பகா, களுத்துறை மாவட்டங்களில் அதிகம்பேர் பாதிப்பு.
-04.05.026 தொடக்கம் மீண்டும் எரிபொருட்களின் விலை ஏற்றம். டீசல் 458ரூபா, பெற்றோல் 458 ரூபா என உயர்ந்ததால் அனைத்துப் பாவனைப் பொருட்களும் விலை உயர்வு. மக்களின் வாழ்க்கைச் செலவு மீண்டும் உயர்ந்துள்ளது.
-2015ம் ஆண்டில் புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் படுகொலை வழக்கின் 4 குற்றவாளிகளுக்கும் கொழும்பு உயர்நீதிமன்றம் மரணதண்டனை வழங்கியுள்ளது.
-9.5.2026 அன்று யாழ் போதன வைத்தியசாலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. மருந்துக்களஞ்சிய சாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் 60 வீதமான விலை உயர்ந்த மருந்துகள் எரிந்து நாசம். இதனால் கோடிக்கணக்கான ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.
-இலங்கையில் புகையிலை மற்றும் மதுப்பழக்கத்தால் வருடாந்தம் 22.000 பேர் இறப்பு என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
-வடமாகாணத்தின் மிக உயரமான (88 அடி) புத்தர்சிலை ஒன்று நயினாதீவு பௌத்த விகாரைப் பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
-கடந்த வருடம்“டித்வா“ கடும்மழை காரணமாகப் பலத்த சேதங்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணம் – கொழும்பு தொடரூந்துசேவை(ரயில்) 11.05.2026 தொடக்கம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
-இலங்கையின் அரச மருத்துவ மனைகளில் தற்போது சுமார் 10.000 இருதய நோயாளிகள் சத்திர சிகிச்சைக்காக நீண்ட நாட்களாகக் காத்திருக்கிறார்கள் என மருத்துவ சங்கம் தெரிவித்தது.
-முள்ளிவாய்க்கால் இனவழிப்பு 17வது வருட நினைவு நாளின் உணர்வுபூர்வமான வழிபாடுகள், நினைவு ஒன்றுகூடல் பேருரைகள் நாட்டின் பலபகுதிகளில் 11.05.2026 தொடக்கம் 18.05.2026 வரை நடைபெற்றது. தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் பல நாடுகளிலும் இந்த நிகழ்வுகள் நடைபெற்றது.
![]()
