உணர்வலைகள் – 8

0
vm361

நெருநல் உளனொருவன் இன்றில்லை

கௌசி. சிவபாலன் – யேர்மனி
உலகத்தில் பிறந்த உயிர்கள், சடப்பொருள்கள் அனைத்தும் ஒருநாள் அழியும் என்னும் உண்மை தெரிந்திருந்தும் அதில் மனிதன் கவனம் செலுத்தாததே இயற்கை மனிதனுக்குக் கொடுத்த வரப்பிரசாதம் என்று கருதுகின்றேன். சமூகவலைத்தளங்கள் கோலோச்சும் காலத்திலே நாம் திறக்கும் எந்தத் தளத்தை எடுத்தாலும் நாம் காணுகின்ற செய்தி மரணம். பூவும், பிஞ்சும்;, மலரும், கனியும் என்று பல பருவங்களில் இறப்பு இதயத்தை வாட்டுகிறது. இது இயற்கை. பிரபஞ்ச விதி. இவ்வுலகில் மரணத்தை வென்றார் உண்டோ?

ஒரு கடமையை தலைமேல் கொண்டு, அதற்குத் தலையெழுத்து என்று பெயரிட்டு, ஒரு தாய் வயிற்றிலே பிறந்த உயிரானது தன் கடமையை நிறைவேற்றுவதற்காக இரவு பகலாகத் தன்னை இழந்து கடமையை முடிக்கிறது. எடுத்த கடமை முடித்த பின் எது வந்தாலும் இவ்வுலகில் தரியேன் என்று இவ்வுலக வாழ்வை விட்டுப் போய்விடுகின்றது. குறிப்பிட்ட காலம் வந்தால் ஒரு செக்கன் கூட உயிர் உடலிலே தங்காது. ‘காயமே இது பொய்யடா. காற்றடைத்த வெறும் பையடா” என்ற சித்தரின் பாடல் போல உடலை விட்டு உயிர் பிரிந்தால், உடல் எரிந்து சாம்பலாகிக் கடலுக்குள் கரைந்து விடுகின்றது. அழி இறப்பர் கொண்டு அழிப்பது போல, சூரியனைக் கண்ட பனி போல இந்தப் பூமிப்பந்திலே மனிதன் அடையாளமின்றி அழிந்து போகின்றான். இதுதான் இயற்கை, இதுதான் பிரபஞ்ச நியதி. ஒவ்வொருவரும் பிறந்த அக்கணத்திலிருந்து இறப்பை நோக்கியே பிரயாணம் மேற்கொள்ளுகின்றார்கள். யார் முன்னே? யார் பின்னே என்பதுவே கேள்வி.

‘செத்துக் கிடக்கும் பிணத்தருக்கே
இனிச் சாம் பிணங்கள் கத்துங் கணக்கென்ன காண்
கயிலாபுரிக் காளத்தியே”

என்று நகைச்சுவையாகப் பட்டினத்தார் பாடினார். கடுவெளிச்சித்தரும்

‘நீர் மேல் குமிழி காயம்
அது இல்லாமல் போய் விடும்
நீ அறி மாயம்”

என்று உடல் நிலையாமைப் பற்றிப் பாடினார். இவ்வாறு நிலையில்லா உடலெடுத்து மறையும் யாம் இறந்தபின் எதைக் கொண்டு போவோம். பட்டினத்தார் பாடியது போல் ‘காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே”.

‘அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே
அழகும் மாதரும் வீதி மட்டே
சுடுகாடு மட்டே பிள்ளைகள்
தொடர்வது புண்ணிய பாவமுமே”

இதனையே ‘வீடுவரை உறவு. வீதிவரை மனைவி. காடு வரை பிள்ளை. கடைசிவரை யாரோ” என்று நிலையாமைத் தத்துவத்தைக் கண்ணதாசனும் பாடினார். எதுவும் கூட வராத போது நாம் செய்கின்ற செயல்களும் ஞானமும் மட்டும்தான் எம்மோடு கூட வரும். என இந்துமதத் தத்துவங்கள் எடுத்துரைக்கின்றன.

எனவே இந்த உலகம் எமக்கு நிரந்தரமில்லாதது. இந்த உறவுகளும் நிரந்தரமில்லை. இந்தப் புகழும் நிரந்தரமில்லை. என்று மனத்திலே நினைத்து கடந்த வாழ்க்கையின் இன்ப துன்பங்களின் பற்று நீக்கி, கோப தாபங்களின் வெறுப்பு நீக்கி ஒவ்வொரு மனிதர்களும் தம்முடைய வாழ்க்கையை வாழ வேண்டும். அதனாலேதான் சித்தர்கள் ‘மரணத்தை நினைத்து அஞ்சாதே அறியாமையை நினைத்து அஞ்சு” என்று பாடுகின்றார்கள். ஏனென்றால் அறிவுதான் ஞானம். அந்த ஞானத்தின் மூலமாக உலகவாழ்க்கையை மனிதன் அறிய முடியும்.

லெபனான் நாட்டுத் தத்துவஞானியும், கவிஞருமான கலீல் ஜிப்ரான் மரணத்தின் ரகசியத்தை நீங்கள் அறிய வேண்டும் என்றால் அதை இதயத்தில் தேட வேண்டும் என்கிறார். இரவிலே மட்டும் காணக் கண் படைத்த ஆந்தை பகலிலே காண இயலாததால் ஒளியின் தத்துவத்தை அதனால் அறியமுடியாது. அதேபோல மரணத்தின் ஆற்றலை நீங்கள் காண விரும்பினால் உங்களுடைய வாழ்க்கையின் பரு உடலைக் காண வேண்டும். அண்டத்திலுள்ளது பிண்டம். பிண்டத்திலுள்ளது அண்டம். பஞ்சபூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியன பிண்டமாகிய உடலிலே காணப்படுகின்றன. எலும்பு, தசை ஆகியன நிலமாகவும், உடலுக்குள்ளேயுள்ள நீர், இரத்தம் ஆகியன நீராகவும், சுவாசம் காற்றாகவும், வெற்றிடம் ஆகாயமாகவும் காணப்படுகின்றன. அதனால் இந்த உடலானது பஞ்சபூதங்களின் கலவையாகும். பிரபஞ்சத்தில் நடக்கின்ற பஞ்சபூதங்களின் அனைத்து மாற்றங்களும் உடலிலும் நடக்கும். அதனால் தன்னைத்தானே அறிந்து கொள்பவன் பிரபஞ்சத்தை அறிவான். மரணத்தின் தன்மையை அறிவான். வாழ்க்கையும் மரணமும் நதியும் கடலும் போன்றது. நதி கடலில் சங்கமமாவது போல் வாழ்க்கையும் மரணத்திலேயே முடியும். இறை ஆற்றலுடன் சங்கமமாகும். இதயத்தில் மரணத்தை நீ தேடி அறிந்தால் நான் என்னும் அகங்காரமும், புகழ் என்று மமதையும் உனக்கு ஏற்படாது. மரணத்தின் ஆற்றலை நீ உணர்வாய் என்கிறார் கலீல் ஜிப்ரான்.

‘உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு”

என்று வள்ளுவரின் வாக்கினால் நாம் தெளிவடையும் போது, ஒவ்வொருநாளும் தூங்கி எழும்போது மீண்டும் பிறப்பெடுத்தேன் என்று ஒவ்வொருவரும் நினைத்திருக்க வேண்டும். நேற்று இருந்தது போல் அன்றிப் புது மனிதனாக பிறப்பெடுத்தேன் என்று தெளிந்த ஞானத்தைப் பெற வேண்டும்.

ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயின் The Death of Ivan Ilyich என்ற படைப்பில், மரணத்தை எதிர்கொள்ளும் ஒரு மனிதன் தனது வாழ்நாளை மறுபரிசீலனை செய்கிறான். அவன் வாழ்ந்த வாழ்க்கை உண்மையானதா, அர்த்தமுள்ளதா என்ற கேள்வி எழுகிறது. இங்கு மரணம் வாழ்க்கையை மதிப்பீடு செய்யும் கண்ணாடியாகச் செயல்படுகிறது. எனவே தெளிந்த ஞானத்தடன் நேற்றிருந்தார் இன்றிருப்பது நிஜமில்லை என்ற ஞானத்தை மனத்தில் கொண்டு அழுக்காறில்லா திறந்த மனத்துடன் வாழ்வோம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *