இன்றும் பேசப்படும் வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!தமிழ்த்திரையில் பெண்ணியத்தின் புதிய பரிணாமம்.
தமிழ் சினிமாவின் திசையையும் நிலப்பரப்பையும் மாற்றியமைத்த பெருமை ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவையே சாரும். பல்வேறு திரைப்படங்களில் இன்றும் பேசப்படும் வகையிலான, மிகவும் வலிமையான பெண் கதாபாத்திரங்களை செதுக்கிய தனித்துவமான படைப்பாளி அவர்.
பாரதிராஜா காலத்தைக் கடந்து இன்று நம்மிடம் இல்லாதபோதும், இந்த உலகம் உள்ளவரை அவர் படைத்த திரைப்படங்கள் எப்போதும் அவரது பெருமையையும் புகழையும் பேசிக்கொண்டேதான் இருக்கும். அவரது பெரும்பாலான திரைப்படங்களில் பெண்களை வெறும் காட்சிப் பொருளாகப் பயன்படுத்தாமல், கதையை நகர்த்திச் செல்லும் மிக வலிமையான பாத்திரங்களாகப் படைத்திருப்பார். ஒரு திரைப்படத்தின் கதையும், இயக்கமும் எந்தளவுக்குப் பேசப்படுகிறதோ, அந்தளவுக்கு அவரது படங்களின் பெண் கதாபாத்திரங்களும் ரசிகர்களால் இன்றும் சிலாகிக்கப்படுகின்றன.
மயிலு முதல் கருத்தம்மா வரை: காலத்தால் அழியாப் பாத்திரங்கள்

- 16 வயதினிலே (மயிலு): கமல் – ஸ்ரீதேவி – ரஜினி ஆகியோரின் நடிப்பில் உருவான இத்திரைப்படத்தில், ‘மயிலு’ என்ற கதாபாத்திரத்தைச் சுற்றித்தான் முழு கதையும் இயங்கும். இதில் கதாநாயகி மட்டுமன்றி, அவளது தாய் கதாபாத்திரமும் கூட கதையின் போக்கை தீர்மானிக்கும் பல காட்சிகளை ஆக்கிரமித்திருக்கும்.
- கருத்தம்மா: தன்னுடைய தாயின் பெயரையே தலைப்பாக வைத்து, சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடந்த ‘பெண் சிசுக்கொலை’ எனும் கொடூரமான அவலத்தைத் துணிச்சலாகத் திரையில் சொன்ன படம். வழக்கமாக ஒரு படத்தில் இரண்டு நாயகிகள் இருந்தால் ஒருவருக்கு மட்டுமே முக்கியத்துவம் இருக்கும். ஆனால், இப்படத்தில் இரண்டு பேருக்கும் சமமான முக்கியத்துவம் தந்து கிராமத்து நாயகிகளின் பெருமையைப் பேசினார். பெண் குழந்தை பிறந்தபோது அவமதித்தவர்கள், பிற்காலத்தில் அதே பெண் தன் உழைப்பால் வீட்டில் மரியாதையோடு வாழ்ந்தபோது வியந்த, பல தகப்பன்களின் மனக்குரலாக ஒலித்தது இத்திரைப்படம்.
- மண் வாசனை (முத்துப்பேச்சி): இத்திரைப்படத்தில் நடிகை ரேவதியின் கதாபாத்திரம் பேசிய அழுத்தமான வசனங்களையும், அவரது கண்கள் மூலம் வெளிப்படுத்திய பாவனைகளையும் ரசிக்காத திரை ரசிகர்கள் இருக்கவே முடியாது. கிராமத்துப் பெண்ணின் வெகுளித்தனத்தையும் அதே நேரத்தில் அவளது உறுதியையும் மிக அழகாகக் காட்டிய படம் இது.
பாசமும் ஆளுமையும் நிறைந்த பெண்மை
- கிழக்குச் சீமையிலே: இப்படத்தில் நடிகை ராதிகாவின் ‘விருமாண்டி’ தங்கை கதாபாத்திரம் இல்லை என்றால் கதையே இயங்காது. அண்ணன்-தங்கை பாசத்தை எத்தனை ஆழமாகவும், அதே சமயம் குடும்ப அமைப்பில் ஒரு பெண்ணின் ஆளுமை எவ்வளவு முக்கியம் என்பதையும் உணர்வுப்பூர்வமாக இதில் வெளிப்படுத்தியிருப்பார்.
- கிழக்கே போகும் ரயிலே: ராதிகாவைத் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தி, அந்தப் பாத்திரத்திற்கு மெருகேற்றி, கதையின் மையக்கருவே அவர்தான் என்பது போல நேர்த்தியாகக் கதையை நகர்த்தியிருப்பார்.
- முதல் மரியாதை: இதில் வடிவுக்கரசியின் கதாபாத்திரம் அத்தனை சாதாரணமானதல்ல. நெகட்டிவ் கலந்த பாத்திரமாக இருந்தாலும், எத்தனை கடினமான வசனங்கள், அசாத்தியமான நடிப்பு என திரையுலகில் அது இன்றும் பேசப்படுகிறது.
- இதர படைப்புகள்: ‘அலைகள் ஓய்வதில்லை’ திரைப்படத்தில் சில்க் சுமிதாவின் கதாபாத்திரம், ‘அந்திமந்தாரை’, ‘வேதம் புதிது’ என பாரதிராஜாவின் அத்தனை படங்களுமே வலிமையான பெண் கதாபாத்திரங்களால் இன்றும் தங்களின் அடையாளத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளன.
“ஆடு மாடு மேய்க்கப் போயிருப்பேன்…” – நெகிழ்ச்சியான நேர்காணல்
தான் இயக்கிய ’16 வயதினிலே’ திரைப்படம் குறித்து ஒரு நேர்காணலில் பாரதிராஜா பகிர்ந்துகொண்டபோது, “இந்தப் படம் ஓடுமா என்று பலரும் சந்தேகத்தோடு கேள்வி எழுப்பினார்கள். ஆனால் படத்தைப் பார்த்தபோது எனக்கு ஒன்றுதான் தோன்றியது. என் மனநிறைவுக்காக இந்தத் திரைப்படத்தை எடுத்துவிட்டேன், அதுபோதும். ஒருவேளை படம் ஓடவில்லை என்றால், மீண்டும் என் கிராமத்திற்கே சென்று ஆடு, மாடு மேய்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன்” என்று குறிப்பிட்டார்.
ஆனால், படம் வெளியான அன்றே அது மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. திரையரங்கெங்கும் ‘பாரதிராஜா… பாரதிராஜா…’ என மக்கள் கொண்டாடினார்கள். தமிழ் சினிமாவின் மாபெரும் இயக்குநர் கே.பாலச்சந்தர் அவர்களே முதன் ஆளாக ஓடிவந்து பாரதிராஜாவைப் பாராட்டியது அவரது திரையுலகப் பயணத்தின் ஆகச்சிறந்த மைல்கல்.
![]()
