சாப்பிடாமல் எவ்வளவு நாட்கள் உயிர் வாழ முடியும்?
இன்று சாப்பிட்டீர்களா…? என்ன சாப்பிட்டீர்கள்…? சரி, இது எல்லாம் போகட்டும், ஏன் சாப்பிட்டீர்கள் என்று உங்களிடம் கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்? பசித்ததால் சாப்பிட்டேன் என்று சிலர் சொல்வார்கள். வேறு சிலர் சக்தி பெறுவதற்காக சாப்பிட்டேன் என்று கூறுவார்கள். மேலும் சிலர் சாப்பிடாமல் விட்டால் நாம் இறந்துவிடுவோம் என்று சொல்லி வாயை அடைத்துவிடுவார்கள். மூன்று காரணங்களுமே 100 வீதம் சரி தான். ஆனால், ஒரு வேளையோ அல்லது ஒரு நாளோ சாப்பிடாமல் பட்டினி இருந்தால் இறந்து விடமாட்டோம் என்பது உங்கள் எல்லோருக்குமே தெரிந்த விஷயம் தான். எனவே, பட்டினி என்றால் என்ன? இப்படி பட்டினி இருந்தால் நம்மால் எவ்வளவு நாட்கள் உயிர் வாழ முடியும் என்று உங்களுக்குத் தெரியுமா?
மருத்துவ அல்லது உயிரியல் ரீதியாகப் பார்த்தால் பட்டினி இருப்பது என்பது வேறு ஒன்றும் இல்லை. நமது உடலுக்கு தேவையான கலோரி மற்றும் ஊட்டக்கூறு அதாவது nutrient குறைபாடு ஏற்படும் போது, அதை பட்டினி இருப்பது என்கிறோம். இப்படி பட்டினி இருக்கும் போது உடலுக்கு தேவையான உணவை முற்றிலும் கொடுக்காமல் விட்டால், அதன் விளைவு கடைசியில் இறப்பு தான். அதைத் தவிர்த்து ஒன்றுமே இல்லை! ஆனால் உங்கள் எல்லோருக்குமே தெரியும், சும்மா 1-2 நாட்கள் சாப்பிடாமல் விட்டதும் நாம் இறந்து விட மாட்டோம். அப்படி விரைவில் இறந்து விடுவோம் என்றால் நமது மனித இனமே இன்று வரை உயிர் வாழ்ந்திருக்க முடியாது.
உண்மை சொல்லப் போனால், உணவை விட நாம் உயிர்வாழ்வதற்கு வேறு அத்தியாவசியமான விஷயங்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு பிராணவாயு, அதாவடு oxygen இல்லாமல் நம்மால் ஏறத்தாழ 5-10 நிமிடங்கள் மட்டும் தான் உயிர் வாழ முடியும். இதுவே தண்ணீர் குடிக்காமல் ஒரு சில நாட்கள், பொதுவாக 2 இருந்து 7 நாட்கள் வரை தான் உயிர் வாழ முடியும். ஆனால் உணவு இல்லாமல் சூழ்நிலையைப் பொறுத்து, நோய் ஒன்றும் இல்லாத, ஆரோக்கியமான ஒரு மனிதர் இரண்டு மாதங்கள் வரை உயிர் வாழ முடியும்! நம்பவே முடியவில்லை அல்லவா? சரி, இப்படி தொடர்ந்து உண்ணாமல் பட்டினி இருக்கும் நேரம் நமது உடலில் என்னவெல்லாம் நடைபெறுகிறது என்று பார்ப்போமா?
சாப்பிடாமல் இருக்கும் போது நமது உடல் மூன்று கட்டங்களைக் கடக்கின்றது. முதலாவது கட்டத்தில் நமது உடல் அதற்கு தேவையான சக்தியை எப்போதுமே கடைசியாக சாப்பிட்ட உணவில் காணப்படும் குளுக் கோஸ் ஊடாகப் பெறுகிறது. இதற்கு என்ன காரணம் தெரியுமா? குளுக்கோஸ் மூலமாகத்தான் நமது உடல் மிக இலகுவான வழியில் சக்தியைப் பெறுகிறது. இந்த குளுக்கோஸ் பொதுவாக glycogen எனப்படும் மூலக்கூற்றை அதாவது molecule ஐ உடைத்து உருவாக்கப்படுகிறது. இதில் ஆச்சரியமான விஷயம் என்ன தெரியுமா? ஒரு நாளில் நமது உடலுக்கு தேவைப்படுகிற சக்தியில் 25 சதவீதமான சக்தியை நமது மூளை மட்டுமே உபயோகிக்கிறது. இப்படி உபயோகிப்பதால் மட்டும் தான் நமது மூளை ஒழுங்காக வேலை செய்ய முடியும்.
நமது உடலில் காணப்படும் குளுக்கோஸ் முற்றிலும் முடிவடைந்ததும் நமக்கு பசி ஆரம்பித்துவிடும். பசி வந்தும் நாம் உணவு சாப்பிடாமல் இருந்தால், அடுத்ததாக இரண்டாவது கட்டம் ஆரம்பமாகிவிடும். இந்தக் கட்டத்தில் நமது உடல் glycerolipids எனப்படும் கொழுமியத்தை, அதாவது lipidir உடைத்து கிளிசரால் மற்றும் கொழுப்பு அமிலத்தை அதாவது fatty acid உருவாக்கத் தொடங்கிவிடும். முதலில் கிளிசரால் ஊடாக மேலும் குளுக்கோஸ் உருவாக்கப்படுகின்றன. கிளிசரால் முற்றிலும் முடிந்ததும் நமது ஈரல் கொழுப்பு அமிலங்களை ketone bodies எனப்படும் உயிர்வேதியியல் பொருளாக மாற்றிவிட்டு மநவழளளை எனப்படும் செயல்பாட்டை ஆரம்பித்துவிடும். இந்த ketosis நடைபெறும் நேரம் குளுக்கோஸ்க்கு பதிலாக ketone bodies இல் இருந்து தான் நமது உடல் சக்தியைப் பெறுகிறது. இப்படி இந்த இரண்டாவது கட்டத்தில் மூளை, இருதயம் போன்ற முக்கிய உடல் உறுப்புகளுக்கு சக்தி செல்கிறது. இந்த காலகட்டத்திலும் உணவு சாப்பிடாமல் இருந்தால் ketone bodies உடன் நமது உடல் ஒரு சில நாட்கள் இருந்து கொஞ்ச வாரங்கள் வரை உயிர் வாழ முயற்சிக்கும். அதற்கும் காரணம் நமது மூளை தான்!
உணவு இல்லை என்று தெரியவந்ததும் நமது மூளை தனது குளுக்கோஸ் பாவனையைக் குறைத்துவிடுகிறது. ஒரு நாளில் 120 கிராம் குளுக்கோஸ் பாவித்த மூளை 30 கிராம் குளுக்கோஸ் மட்டுமே பாவிக்கத் தொடங்கிவிடும். ஆனால், இந்த கட்டத்தில் நமது உடலும் மிகவும் பலவீனமாகிவிடும்.
அனைத்து ketone bodies உம் முற்றிலும் முடிந்துவிட்டதும் கடைசி கட்டமாகிய மூன்றாவது கட்டம் ஆரம்பித்துவிடும். இதில் நமது தசைகளில் காணப்படும் புரதங்களை உடைத்து அமினோ அமிலங்கள் (amino acid) மூலம் நமது உடல் சக்தியைப் பெறுகிறது. இந்த கட்டத்தில் நமது தசைகள் மெலியத் தொடங்கி விடுகின்றன. இதற்கு என்ன அர்த்தம் என்று புரிகிறதா? நமது உடல் தன்னைத் தானே உண்கிறது! இப்படி தசைகள் மெலிந்து போகும்போது ஒரு நேரத்தில் நமது இருதயம் தனது செயல்பாட்டை நிறுத்திவிடும். அதுமட்டும் இல்லை, மேலும் உடலின் நோய் எதிர்ப்பாற்றல் முறைமை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையை அடைந்துவிடும். ஆகவே, ஒரு சிறிய நோய் வந்தால் கூட அதன் விளைவு விபரீதமாக இருந்துவிடும்.
இப்போ உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும் நமது உடல் இயற்கையின் ஓர் மாபெரும் அதிசயம் என்று. உணவு இல்லாமல் போனால் அதற்கு ஒரு Backup plan மட்டும் இல்லை, மூன்று Backup plans வைத்திருக்கிறது நமது உடல்!
பட்டினி இருந்து உடல் எடையை குறைக்கலாம் என்பது உண்மை தான். ஆனால் அப்படி மெலிவது உங்கள் உடலுக்கு ஆரோக்கியமற்றது! சத்துள்ள உணவு உண்டு உடற்பயிற்சி செய்தாலே போதும், சும்மா Top Model போல் உங்கள் உடல் வந்துவிடும். ஆனால் அதற்கு பொறுமை தேவை…!
நண்பர்களே, நமது உடல் ஒரு மாபெரும் அதிசயம் என்பது உங்களுக்கும் புரிந்துவிட்டதா? இதற்குரிய பதிலை மட்டுமில்லாமல், எனது சிறு கட்டுரை பற்றிய அபிப்பிராயத்தையும் எனக்குக் கண்டிப்பாக எனது முகநூல் பக்கத்தில் (www.facebook.com/scinirosh) அறியத் தாருங்கள்!
Dr.நிரோஷன்
![]()
