ஈழத்தமிழ் பாடகி மாயாவுக்கு பிரித்தானிய அரச குடும்பத்தின் உயர் விருது

0
179

சர்வதேச ரீதியில் அதிகம் கவனிக்கப்படும் லண்டன்வாழ் ஈழத்தமிழ் பாடகியான எம்.ஐ.ஏ. எனும் மாதங்கி மாயா அருள்பிரகாசத்துக்கு (MIA) பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் அங்கத்தவருக்கான எம்.பி.ஈ (Member of the Order of the British Empire -MBE) விருது வழங்கப்பட்டுள்ளது. சர்வதேசத்தில் இசைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புக்காகவே அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. லண்டனிலுள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வைபவத்தில் பாடகி எம்.ஐ.ஏவுக்கு பிரிட்டனின் முடிக்குரிய இளவரசர் வில்லியம் இந்த விருதை வழங்கி கௌரவித்தார்.

இலங்கையிலிருந்து பிரிட்டனுக்குப் புலம்பெயர்ந்த பின் தையல் தொழிலில் ஈடுபட்ட தனது தாயார், இவ்விருதுக்கான பதக்கத்தையும் தயாரித்தார் எனவும் இதனால், இவ்விருதுடன் தனக்கு ஒரு வரலாற்றுத் தொடர்பு உள்ளது எனவும் 44 வயதான பாடகி எம்.ஐ.ஏ மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மாதங்கியின் தந்தை அருள்பிரகாசம் (அருளர்) ஈழப்போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஈரோஸ் இயக்கத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரான அருளர், லங்கா ராணி எனும் நூலையும் எழுதினார். கடந்த மாதம் அருளர் காலமாகியிருந்தார்.

இலங்கையிலிருந்து பிரிட்டனுக்குச் சென்ற அருள்பிரகாசம், கலா தம்பதியின் மகளாக 1975 ஜூலை 18 ஆம் திகதி லண்டனில் பிறந்தவர் மாதாங்கி. அவர் 6 மாத குழந்தையாக இருந்தபோது அவரின் பெற்றோர் இலங்கைக்குத் திரும்பினர்.

மாதங்கி யாழ்ப்பாணத்தில் தனது ஆரம்பக் கல்வியை கற்றார். யுத்தம் தீவிரமடைந்த நிலையில் 1986 ஆம் ஆண்டு மாதங்கிக்கு 11 வயதாக இருந்தபோது அவரின் குடும்பம் மீண்டும் லண்டனுக்குத் திரும்பியது.

2000 ஆம் ஆண்டு இசைத்துறையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் மாதங்கி. தற்போது மேற்குலக இசைத்துறையில் மிகப் பிரபலமான பாடகிகளில் ஒருவராக மாதங்கி மாயா அருள்பிரகாசம் (44) விளங்குகிறார்.

2004 ஆம் ஆண்டு சண்ஷவர், காலாங் ஆகிய பாடல்கள் மூலம ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மாதங்கி, 2005 ஆம் ஆண்டு அருளர் எனும் பெயரில் தனது முதல் பாடல் அல்பத்தை வெளியிட்டார். 2007 ஆம் ஆண்டு தாயார் கலாவின் பெயரில் கலா எனும் 2 ஆவது பாடல் அல்பத்தை வெளியிட்டார். கலா அல்பத்தில் ,இம்பெற்ற பேப்பர்பிளேன்ஸ் எனும் பாடல் எம்.ஐ.ஏவுக்கு பிரிட்டன், கனடா, அமெரிக்கா உட்பட பெரும் புகழை ஈட்டிக் கொடுத்தது.

மேற்கத்தேய இசைத்துறையில் முன்னிலை கலைஞர்களில் ஒருவரானார் எம்.ஐ.ஏ. அமெரிக்க தேசிய கால்பந்தாட்ட லீக் இறுதிப் போட்டியின் இடைவேளையில் இசை நிகழ்ச்சி நடத்துவது பல கலைஞர்களின் கனவாகும். 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற சுப்பர்பொல் இசை நிகழ்ச்சியில் பாடகிகள் மடோனா, நிக்கி மினாஜ் ஆகியோருடன் எம்.ஐ.ஏ. எனும் மாதங்கியும் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *