மொபைல் போன்கள் நம் குழந்தைகளை ஆற்கொண்டுவிட்டன

0
vm101

  • பிரியா இராமநாதன் (இலங்கை)

“முன்பெல்லாம் ஒரு வீட்டில் நான்கைந்து குழந்தைகள் இருந்தாலும், இந்த அளவிற்கு அலட்டல் இல்லாமல் நன்றாகத்தான் வளர்ந்தார்கள். ஆனால் இப்போதோ,பெற்றவர்கள் குழந்தைகளைப் பொத்திப் பொத்தி வளர்க்கிறார்கின்றோம், கண்ணுல வெச்சி காப்பாத்துறோம்னு சொல்லிச் சொல்லியே அவர்கள் குழந்தைகளை வளர விடுவதேயில்லை” இப்படி நம் முந்தைய தலைமுறையினர் அடிக்கடி அலுத்துக்கொள்வதை கேட்டிருக்கின்றோம்.

        முன்னைய தலைமுறையினைக்காட்டிலும்,தற்போது குழந்தை வளர்ப்பில் அதிக கவனம் செலுத்தப்படவேண்டிய அவசியமும் தேவையுமும்தான் என்ன? சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்புவரையிலும் கூட  சிறுவர்களின் வாழ்க்கை எப்படி இருந்தது? தினமும் பள்ளிக்குச் செல்வார்கள்,  ஆட்டம் பாட்டம் விளையாட்டு, வீடு திரும்பியதும் அவரவர் வசதிக்கு ஏற்றாற் போல  உணவு !  படிப்பு, உறக்கம். வார இறுதிகளிலும் விடுமுறை நாட்களிலும் காலை முதல் மாலை வரையிலும் அக்கம்பக்கத்து வீட்டுக் குழந்தைகளுடன் விளையாட்டு . கூட்டுக் குடும்ப அமைப்பு இருந்தவரையிலும் ஒரே வீட்டில் நிறைய குழந்தைகள், பெரியவர்கள் இருந்தமையால்  ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்தும், அன்பினைப் பொழிந்துகொண்டும் வாழ்ந்தனர். பல குழந்தைகள்  ஒன்றுகூடி விளையாடும்போது   ஏற்படும் நன்மைகள் ஏராளம். மற்ற குடும்பங்கள் பற்றிய அறிதல், விட்டுக்கொடுக்கும் பாங்கு, வெற்றி மற்றும் தோல்வி இரண்டையும் ஏற்றுக்கொள்ளுதல் போன்றவை  சாதாரணமாக நிகழும். ஆனால் இன்றோ நம் குழந்தைகள் கூட்டாக  ஓடியாடி விளையாடும் விளையாட்டுக்களை முற்றிலும் இழந்து வருகின்றார்கள் என்பதே யதார்த்தம். தனிக்குடித்தன பெருக்கங்கள், அயலவர்களுடன் பேச்சுவார்த்தை குறைவு போன்ற இன்னோரன்ன காரணங்களினால் நம் குழந்தைகளின் பெருவாரியான நேரத்தினை தொலைக்காட்சிகள் சுவீகரித்துக்கொண்டன என்பதைவிட மொபைல் போன்கள் நம் குழந்தைகளை ஆற்கொண்டுவிட்டன என்பதே கசப்பான உண்மை. உளவியல் ரீதியாகவும் வெற்றி தோல்விகளைச் சரிசமமாக கருதும்  மனநிலை அற்றவர்களாக தோல்விகளை சகித்துக்கொள்ள இயலாதவர்களாக மாறிவருகின்றனர்.  
                  எனவே  பூங்கா, மைதானம், அல்லது வீட்டின் மொட்டைமாடியிலாவது  குழந்தைகள்  ஓடியாடி விளையாடும் சூழலை உருவாக்கித் தர வேண்டியது பெற்றோர்கள் பொறுப்பு. அது அவர்களின் உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமின்றி, படிப்புச் சுமை தரும்  அழுத்தங்களில் இருந்து   மீட்டு மன ஆரோக்கியத்துக்கும் கைகொடுக்கும்.
                  அனைத்துப் பெற்றோர்களுக்கும் தங்கள் பிள்ளைகள் மிகவும் வல்லவர்களாகவும், திறமைசாலிகளாகவும் உலகத்தோடு போட்டி போடுபவர்களாகவும் வளர வேண்டும் என்று எண்ணம் இருப்பது நியாயமான ஒன்றுதான். குறிப்பாக  மனதளவில் வலிமையாக இருக்கும் படி குழந்தைகளை வளர்ப்பது இலேசுப்பட்ட காரியமல்ல. மனதளவில் குழந்தைகளை வலிமையானவர்களாக மாற்றி விட்டாலே அவர்களது வாழ்க்கையை அவர்களால் திறம்பட வழி நடத்த முடியும். ஆனால் இன்றைய பெற்றோர்கள் பலரும் தங்கள் குழந்தைகளை அவ்வாறு வலிமையானவர்களாக மாறும்படி வளர்க்கின்றோமா ?
                  நம்குழந்தைகள் திறமையானவர்களாகவும் வலிமையானவர்களாகவும் வளர வேண்டுமெனில் அவர்களது பிரச்சினைகளையும்  சவால்களையும் அவர்கள்  தனியாக சந்திக்க செய்ய வேண்டும். பெரும்பாலான நேரங்களில் நாம் குழந்தைகளுக்கு உதவி செய்கிறோம் என்று நினைத்துக் கொண்டு பல்வேறு செயல்களை செய்கிறோம். ஆனால் உண்மையிலேயே சில சமயங்களில் நாம்   தள்ளி நின்று  குழந்தைகளை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கும்போது அவர்களாகவே கற்றுக்கொள்வது ஏராளம். அதுமட்டுமன்றி பெற்றோராகிய நாம் செய்யும் இன்னொரு தவறுதான் அவர்கள் கேட்பதையெல்லாம்  வாங்கிக்கொடுப்பது. இதனால் அத்தியாவசியமான அவசியமான பொருளுக்கும் ஆசையில் வாங்கும் பொருளுக்குமான வித்தியாசம் குழந்தைகளுக்கு  தெரியாமலேயே போய்விடுவதுதான் .
                         “குழந்தைகளைக் கண்டிக்கிறோம்“ என எல்லார் முன்பும் அவமானப்படுத்து வதைச் சில பெற்றோர் வழக்கமாக  வைத்திருக்கிறார்கள். அதிகமாகக் கண்டிக்கவும், தண்டிக்கவும்படும்  குழந்தை உளவியல் ரீதியாகப் பாதிக்கப்படுவது கண்கூடு. மதிப்புடனும், மரியாதையுடனும் நடத்தப்படும் குழந்தை எதையும் சுலபமாகக் கற்றுக் கொள்கிறது. குழந்தை வளர்ப்பில்  தாய், தந்தை இருவருக்குமே பங்கு இருப்பதே நன்மை. ஆனால்  நம் சமூகத்தில் எல்லாப் பொறுப்பும் தாயின் தலையிலேயே கட்டப்படுகிறது. குழந்தையின் நடவடிக்கைகள் எதிர்மாறாக இருக்கும்போது நிச்சயம்  தாய்தான் குற்றம் சாட்டப்படுகிறார்.

                 சரியான குழந்தை வளர்ப்பு என்பது அந்தந்தத் தருணங்களில் குழந்தைகளை  மகிழ்ச்சிகரமாக உணரச் செய்வதே. நம் கடந்த கால ஆசைகள் மற்றும் எதிர்காலத் தேவைகள் போன்றவற்றை அவர்கள் மீது திணிப்பதை தவிர்த்து, அவர்கள் சொல்வதையும் கொஞ்சம் காது கொடுத்துக் கேட்க வேண்டும். அவர்கள் செய்யும் சிறு தவறுகளை மன்னிக்கக் கற்றுக் கொள்வது  இன்றைய பெற்றோர்களின் மிகப்பெரிய கடமைதான். தவறே செய்யாமல் யாரும் இருக்க முடியாது. ஆனால் அந்தத் தவறுகள் பெரிதாகாமல் வழிநடத்த வேண்டும். அதற்காகப் பெற்றோர்களாகிய நமது   கண்ணோட்டத்தை முதலில் விரிவுபடுத்த வேண்டும். குழந்தைகள் மீது நிபந்தனையற்ற அன்பு செலுத்துதல் முக்கியம். 
                      பெற்றோர் வளர்ந்த சூழ்நிலையும், குழந்தைகள் வளரும் சூழ்நிலையும் நிச்சயம் வேறுபட்டுத்தான் இருக்கும். அவற்றை ஒன்றோடு இன்னொன்று ஒப்பிட்டுக்கொண்டு நம்மை நாமே குழப்பிக் கொள்ளக் கூடாது. ஒவ்வொரு குழந்தையும் தனித்துவம் மிக்கது. அவர்களை ஒருவரோடு இன்னொருவரைப் ஒப்பிட்டுப்  பேசுவதை தவிர்க்க  வேண்டும். வாழ்க்கையை எளிதாக எடுத்துக்கொள்ள கற்றுத் தர வேண்டும். மிக முக்கியமாக நம்மைப் பார்த்துதான் குழந்தைகள் ஒவ்வொன்றையும் கற்றுக் கொள்கிறார்கள் என்பதை ஒவ்வொரு பெற்றோரும் எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

குழந்தைகளை ஒரு கூட்டுக்குள் அடைக்காமல், அவர்களை சமூகமயப்படுத்தவேண்டும். தொலைக்காட்சி மற்றும் இணையவழி பிம்பங்களைத் தாண்டி அவர்களுக்கு மனிதர்களுடனான உரையாடல்களை ஊக்குவிக்கவேண்டும். பிள்ளைக்களுக்கான நேரத்தை பெற்றோர்கள் அதிகப்படுத்தவேண்டும். பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகளும், குழந்தைகளிடம் இருந்து பெற்றோர்களும் கற்றுக்கொள்ள நிறையவே இருக்கும். இந்த நேரமின்மை நிறைந்த காலகட்டத்தில் இது நிறையவே கஷ்டம்தான் என்றாலும், வேறு வழியில்லை. ஏனெனில் நாம் எவ்வளவு சம்பாதித்தும் வேலையில்லை குழந்தைகளை ஒழுங்காக வளர்த்தெடுக்காவிட்டால் இல்லையா ?

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *