எங்கடை ஆச்சி 02

0
vm225

காரைக்கவி.கந்தையா.பத்மானந்தன்.

பவர்கட் வந்தபிறகு வீட்டம்மா போனை நல்லா சார்ஜ் ஏத்தி வைக்கவேணும் டேற்றா தாராளமாப் போட்டு வைக்க வேணும் அப்பதான் அடாது பவர்கட் வந்தாலும் விடாது சீரியல் பாக்கலாம் எண்டுபோட்டு என்னைப் போய் டெற்றா போட்டுக்கொண்டுவா எண்டு துரத்திவிட்டா. சரி இனி அவ சொன்னாப் பேந்தென்ன பம்மிக்கொண்டு நிக்கேலுமே எண்டுபோட்டு வெள்ளவத்தையில ஒரு கடைக்குப் போய் டேற்றா போடவெண்டு நிக்க வண்டியும் குண்டியுமா யம்பரும் ரீ சேர்ட்டும் போட்ட ஒரு நடுத்தர வயதுக்காறர் அங்கை மாஸ்க்கை நாடியில இழுத்து விட்டபடி வாய்நிறைய வெத்திலையைச் சப்பிக்கொண்டே வந்தார்.

நான் அவரை ஒரு மாதிரி முறைச்சுப் பாக்க மாஸ்க்கை இழுத்து வாயை மூடினவர் கடைப்பெடியிட்டை அது இருக்கோ இது இருக்கோ எண்டு மாஸ்க்குக்கால எச்சில் பறக்க கேட்டுப்போட்டு கதவைத் திறந்து கொண்டு வெளியில போனார்.வெளியில போய்க்கொஞ்ச நேரத்தில வாந்தி பேதி வந்த எருமைமாடு சாணிபோடுறமாதிரி ஒரு சத்தம் வர எட்டிப்பாத்தா தெருவில ஆக்கள் நடந்து போற நடைபாதையில அவர் வெத்திலை எச்சிலைத் துப்பினார். எனக்கெண்டாக் கடும் கோபம் வந்திச்சு பேந்தும் எனக்கு வீட்டம்மால வாற கோவம் மாதிரியே காணாமப் போட்டுது ஏனெண்டால் அவரில ஒரு வாள்வெட்டுக்காறன்ரை சாயல் இருந்தது.

வெத்திலை போடுறகனபேர் உப்பிடித்தான் கண்ட கிண்ட இடங்களிலையும் துப்புங்கள். சில கறுமங்கள் ஓடுற பஸ்ஸிலை இருந்தே யன்னலுக்கால எட்டித்துப்புங்கள். எட்டிச் செவிட்டில விடவேணும் போல இருக்கும். வெத்திலை போடுறது நல்லம் எண்டு எங்கட ஆச்சி நெடுகவும் சொல்லுறவ. அதில கன விசேசங்கள் இருக்கெண்டுவா. ஒரு மனுசனுக்கு வாதம், பித்தம், கபம் இந்த மூண்டும் ஒழுங்கா இருந்தா ஒரு கோதாரியும் ஒருத்தருக்கும் வராது எண்டுவா. பாக்கு பித்தத்தையும் சுண்ணாம்பு வாதத்தையும் வெத்திலை கபத்தையும் கட்டுப்படுத்தும் எண்டுவா. அதிலும் வெத்திலை முட்டு நெஞ்சுச்சளி சுவாசப்பை நோயளுக்கு கைகண்ட மருந்து எண்டுவா. அதாலதான் முந்தி எங்கட ஆக்கள் சாப்பிட்ட பிறகு ஒரு வாய் வெத்திலை போடுறதை வழக்கமா வைச்சிருந்தவை.

ஆனா எதுகும் அளவோட இருக்கவேணும் எண்டு அப்பு சொல்லுறவர். ஆடு மாடு இலை குழை தின்னுறமாதிரி அதேவேலையா இருந்து வெத்திலை பாக்குச் சுண்ணாம்பு திண்டாப் பேந்து கான்சர் வந்து கண்ணை மூடவேணும் எண்டுவார். உப்பிடி அளவுக்கு மிஞ்சி வெத்திலை திண்ட எத்தினையோபேர் வாழ வயது இருந்தும் கான்சர் வந்து செத்தவை.முந்தி நல்லநாள் பெருநாள் எண்டில்லை வீடுவழியை ஆர் வந்தாலும் வெத்திலை குடுக்கிற ஒரு பழக்கம் இருந்தது. அதுக்காகவே வீடுகளிலை விறாந்தையில இருக்கிற வாங்கில வெத்திலைப்பெட்டியோ இல்லாட்டில் வெத்திலைத்தட்டமோ இருக்கும்.ஆரும் போற இடத்தில வெத்திவைப்பெட்டியை இல்லாட்டில் தட்டத்தை நீட்டாட்டி ஆக்கள் கோவிக்கிற நிலைமையும் இருந்தது. அதுகும் வீட்டை வேலைக்கு வாற ஆக்களுக்கு கோப்பி தேத்தண்ணி சாப்பாட்டோட வெத்திலை போயிலையும் கட்டாயம் குடுக்க வேணும்.

எங்கட அப்பு ஆச்சி எப்பவும் சாப்பிட்ட உடனை வெத்திலை போடுவினம். அதிலும் இரவில படுக்கப்போக முந்தி கட்டாயம் வெத்திலை போடுவினம். அவையின்ரை அந்நியோன்னத்துக்கு உந்த வெத்திலை பாக்கும் ஒருகாரணமாய் இருக்க வேணும். அதிலும் ஆச்சி தலைவாசல் விறாந்தையில ஒரு காலை மடிச்சு வைச்சு மற்றக்காலை நீட்டி வைச்சு உரலுக்கை வெத்திலையையும் பாக்கையும் போட்டு டொக்கு டொக்கெண்டு இரும்பு உலக்கைத்துண்டால இடிக்கிறதிலை ஒரு ரிதம் இருக்கும்.அதுகும் அவ அந்த உரலை இடது கையால மெல்லமாச்சுத்திச் சுத்தி வலது கையால இடிக்கிறதைப் பாக்க ஆசையா இருக்கும். இப்பிடி இடிச்ச பிறகு ஆச்சி இடிச்ச பாக்கு வெத்திலையை உள்ளங்கையில கொட்டிப் பேந்து ரெண்டாப் பிரிச்சு ஒரு பங்கை அப்புவுக்குக் குடுத்துப்போட்டு மற்றப்பங்கை தான் வாயிலை போட்டுக் குதப்புவா.

அப்புவும் ஆச்சியும் வெத்திலையைக் குதப்பிப் போட்டுத் துப்பிறதிலையும் ஒரு டிசிப்பிளின் இருக்கும். அதுகும் அப்பு வாயிலை ரெண்டு விரலைவைச்சுத் துப்பினார் எண்டால் வெத்திலைத்துப்பல் மூண்டடி தள்ளிப்போய் வேலி மட்டக்காலுக்கை விழும். பேந்து போய்க் காலால புழுதியைத் துப்பலுக்கு மேல சிலாவிப்போட்டு வருவார்.உந்த எல்லாத்திலையும் பாதிபாதியா இருக்கிற பண்புதான் பங்கிடுகிற பண்புதான் அப்பு ஆச்சி ரெண்டு பேரையும் சுகம் துக்கம் ரெண்டையும் பங்கு போட்டுக் குடும்பம் நடத்திற பழக்கத்தைக் குடுத்து அந்நியோன்னியமா இருக்க வைச்சுது. ஆச்சி தனிய அப்புவுக்கு எண்டில்லை இடைக்கிடை எங்களுக்கும் தன்னட்டை கதைக்க வாற பெண்டுகளுக்கும் கூட உந்த வெத்திலையை இடிச்சுத் தந்திருக்கிறா. உதால அயலட்டையுக்கையும் ஒரு பந்தம் பாசம் நெருக்கம் இருந்தது.

இண்டைக்கு நாங்கள் ஆச்சி அப்புவின்ரை எத்தினையோ பழக்கவழக்கங்களை நாகரிகம் எண்ட பெயரிலை மறந்து போனம். அப்பிடி மறந்து போன விசயங்களில ஒண்டுதான் உந்த பாக்கு இல்லாட்டில் வெத்திலை உரலும் அதில இருந்து வாற அந்த டொக்கு…டொக்கு…சத்தமும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *