திருமணங்கள் தள்ளிப் போவதன் விளைவுகள்.
முனைவர் பால. சிவகடாட்சம் (கனடா)
„தள்ளிப்போகும் திருமணங்களும் தடுமாறும் பெற்றோரும்‘ சென்றமாத தொடர்ச்சி…
உயர்கல்விக்கும் தொழில் மேம்பாட்டுக்கும் தரப்படும் முக்கியத்துவம்
திருமண வயதுக்கு வந்துவிட்ட பல இளைஞர்கள் தங்கள் கல்வி மற்றும் தொழிலுக்கே முன்னுரிமை கொடுக்கிறார்கள், பெரும்பாலும் உயர் பட்டங்கள் அல்லது தொழில் முறை இலக்குகளை முன்வைத்து இயங்குகின்றார்கள். கல்விக்கான காலக்கெடுவை நீடித்தல், வேலைவாய்ப்பில் நிலையானதொரு இடத்தைப் பிடித்துக் கொள்ளுதல், செய்யும் தொழிலில் மேலும் மேலும் முன்னேறும் வழிகளை ஆராய்தல், போன்ற விடயங்களில் நேரத்தை முதலீடு செய்வதால் திருமணம் தள்ளிப்போகும் நிலை ஏற்படுகின்றது.
தன்னம்பிக்கையை வலுப்படுத்தும் முயற்சிகள்
இளைஞர் யுவதிகளுள் பலரும் திருமணபந்தத்தில் தம்மை இணைத்துக் கொள்ளுவதற்கு முன் தமது தனிப்பட்ட ஆர்வங்களைப் பூர்த்தி செய்யவும் உல்லாசப் பயணங்களை மேற்கொள்ளவும் திருமணத்துக்கு முற்பட்ட சுதந்திர காலத்தை முழுமையாக அனுபவிக்கவும் விரும்புகிறார்கள். இவற்றின் மூலம் வாழ்க்கை அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளவும் அதன்மூலம் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் குடும்ப வாழ்க்கைக்கு அவசியமான, வலுவான தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளமுடியும் எனவும் அவர்கள் நம்புகின்றார்கள்
நிதி நிலைத்தன்மை
பெற்றோரின் நிழலில் இருந்து விலகித் தனிக்குடித்தனம் போகவிரும்பும் இளைஞர் யுவதிகள் அடுத்து தாம் எதிர்கொள்ளவேண்டிய பொருளாதார நெருக்கடிகள் குறித்து அச்சம் அடைகின்றார்கள். இவர்களுட் பலரும் திருமணத்திற்கு முன், மாணவர் கடனை அடைப்பது, வீடு வாங்குவது அல்லது நிலையான வேலையைப் பெறுவது போன்ற நிதி நிலைத்தன்மையை அடைய வேண்டும் என்று நினைப்பதில் ஆச்சரியம் இல்லை.
திருமண விதிமுறைகளில் கலாச்சார மாற்றம்
அதிக விவாகரத்து விகிதங்களைக் கொண்ட சூழலில் வளர்ந்து வரும் இளைஞர்கள் யுவதிகள் தமது வாழ்க்கைத் துணையைத் தெரிவுசெய்யும்போது அச்சத்துடனும் மனக்குழப்பங்களுடனும் திருமணத்தை அணுகுகின்றார்கள். திருமணத்திற்கு விரைந்து செல்வதில் அதிக எச்சரிக்கையுடன் இருக்கின்றார்கள். இவர்களுட் சிலர் நண்பர்கள் உறவினர் என்று பலரிடமும் ஆலோசனை பெற விரும்பும்போது திருமணத்துக்கு அவர்கள் தயாராக இல்லை என்பதை ஊகிக்க முடிகின்றது.
மேற்கத்திய சமூகங்களில் திருமணம் குறித்த அணுகுமுறை கணிசமாக மாறிவிட்டது. இளம் வயதில் திருமணம் செய்து கொள்வதற்கு சமூக அழுத்தம் குறைவாக உள்ளது. மேலும் மக்கள் திருமணத்தை ஒரு தேவையை விட பல வாழ்க்கைத் தேர்வுகளில் ஒன்றாகப் பார்க்கிறார்கள். திருமணம் செய்யாமல் ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வாழ்க்கை முறையாகிவிட்டது.
பாரம்பரியமாக, திருமணம் என்பது ஒரு குடும்பத்தைத் தொடங்குவது, பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வது என்பவற்றுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டு வந்துள்ளது. இன்று உடனுறைவு மற்றும் ஒரே பாலின திருமணங்கள் என்பவற்றை அங்கீகரிப்பதும், சட்ட பூர்வமாக்குவதும், திருமணம் என்பதன் பாரம்பரிய உறவுமுறை பற்றிய விளக்கத்தைப் பலவீனப்படுத்திவிட்டன. உறுதிப்படுத்தப்பட்ட நீண்ட கால கூட்டுவாழ்வாக திருமணத்தை மக்கள் பார்க்கும் விதம் மாறி வருகின்றது.
இன்று, யுவதிகள் பலரும் திருமணத்துடன் கூடவே குழந்தைகள் பெற்றுக் கொள்வதையும் தாமதப்படுத்துகிறார்கள் அல்லது அதுபற்றி மறுபரிசீலனை செய்கிறார்கள். குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளாமல் இருப்பது திருமணத்திற்கு வெளியே குடும்பங்களைத் தொடங்க வசதியாக இருக்கும் என்று நம்புகின்றார்கள். இந்தக் காரணிகள் ஒரு வித்தியாசமான சமூக சூழலை உருவாக்குகின்றன. இதுவே பலர் திருமணத்தைப் பெரும்பாலும் வாழ்க்கையின் பிற்பகுதிவரை தாமதப்படுத்துவதற்கும், அல்லது திருமணமே வேண்டாம் என்று முடிவெடுத்துக் கொள்வதற்கும் வழிவகுக்கின்றது.
பெண்கள் மற்றும் தம்பதிகள் குழந்தைகளைப் பெறுவதைத் தாமதப்படுத்தும் சமூக-பொருளாதார காரணிகள் மற்றும் பல உள்ளன. மலிவு விலையில் வீடுகள் இல்லாமை, பெண்களுக்கான நெகிழ்வான மற்றும் பகுதிநேர வேலை வாய்ப்புகள் இல்லாமை, மலிவாகக் கிடைக்கக்கூடிய குழந்தை பராமரிப்பு வசதிகள் இல்லாமை என்பனவும் தற்போதைய குறைந்த பிறப்பு விகிதங்களுக்கு பங்களித்துள்ளன. பெண்கள் குடும்பத்தைத் தொடங்குவதைத் தாமதப்படுத்தும்போது கருப்பை முதுமை அடைவதாலும் அது தொடர்புடைய காரணங்களாலும் அவர்களின் கருவுறுதல் அளவுகளில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்படுகின்றது.
திருமணங்கள் தள்ளிப் போவதன் விளைவுகள்
திருமணங்களைத் தாமதப்படுத்துவது என்பது நீண்டகால நோக்கில் ஒரு சமூகத்துக்கு அல்லது ஒரு நாட்டுக்குப் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய விடயம் என்பதை நாம் அலட்சியப்படுத்திவிட முடியாது. குறிப்பாக ஒரு தேசத்தின் மக்கள் தொகை படிப்படியாகக் குறைந்து வருவது அத்தேசத்துக்கு எதிர்காலத்தில் பெரும் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு விடயமாகும். முதியோர்களின் எண்ணிகையைவிட இளையோரின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கும் சாத்தியம் உண்டு. உள்நாட்டில் பெரும் தொகையினராக உள்ள முதியோர்களின் பராமரிப்புச் செலவை மிகக் குறைந்த எண்ணிக்கையிலான இளையோர் சுமக்கவேண்டிய நிர்ப்பந்தம் உருவாகும். வெளிநாட்டு அச்சுறுத்தல்களில் இருந்து நாட்டைக் காப்பதற்குப் போதுமான படைபலம் இருக்காது. உடல் உழைப்பை ஆதாரமாகக் கொண்ட தொழில்கள் முடங்கிவிடும். பல விடயங்களுக்கு ரோபோட் எனப்படும் தனியங்கிகளையே நம்பி இருக்கவேண்டிய நிலை ஏற்படும். இத்தகைய பேராபத்துக்களில் இருந்து நாட்டைப் பாதுகாப்பதற்கும் மக்கட்தொகையை சீரான முறையில் பேணுவதற்கும் குடும்பவாழ்வைத் தொடங்க விரும்பும் இளஞர் யுவதிகளுக்கு இருக்கக் கூடிய தடைகளையும் அச்சங்களையும் ஓரளவேனும் குறைக்க உதவுவது பொறுப்புள்ள அரசாங்கங்களின் கடமையாகின்றது. (நன்றி.தமிழர்தகவல்)
![]()
