எங்கட ஆச்சி 3
அந்த மூண்டு விசயம் கட்டாயம் தெரிய வேணும்.
காரைக்கவி கந்தையா பத்மானந்தன்
எங்கட ஆச்சி முந்தி ஆம்பிளைப் பிள்ளையோ பொம்பிளைப் பிள்ளையோ மூண்டு விசயம் கட்டாயம் தெரிய வேணும் எண்டு நெடுகவும் சொல்லுவா. அந்த மூண்டு விசயமும் என்னண்டால் சமைக்கிறது சயிக்கிள் ஓடுறது மற்றது நீந்திறது. இந்த மூண்டு விசயமும் ஒரு ஆளுக்குத் தெரிஞ்சா எவரும் எங்கையும் எந்தச் சந்தர்ப்பத்திலும் மற்றவையில தங்கி இருக்காமல் சீவிக்கலாம் எண்டுவா. அது மட்டும் இல்லை ஒருத்தன் உந்த மூண்டையும் செய்வான் எண்டால் அவன்ரை உடம்பும் மனசும் நல்லா இருக்கும். அவனும் அவனைச் சுத்தி இருக்கிறவையும் சந்தோசமாக இருப்பினம் எண்டுவா.
எங்கட ஊரில நாங்கள் கிணத்து தண்ணியைத்தான் நம்பி இருக்கிறனாங்கள். அதிலும் மாரி காலத்தில கிணறு தளந்தட்டிக்கொண்டு நிக்கும். தண்ணி அள்ளேக்கை தப்பித்தவறி ஆரும் கிணத்துக்கை விழுந்தால் அவருக்கு நீந்தத் தெரிஞ்சாத் தப்பலாம். இல்லாட்டில் நீந்தத் தெரிஞ்சவர் ஆரும் அந்த வீட்டில இருந்தாக் குதிச்சு விழுந்த ஆளைக் காப்பாத்தலாம். இப்பிடி ஒருத்தருக்கும் நீந்தத் தெரியாட்டில் உதவி கேட்டு கத்திக் குழற வேணும். ஆரும் வரேல்லை எண்டால் அந்தச் சீவன் அநியாயமாப் போய்ச் சேத்திடும்.சில இடங்களில நீந்தத் தெரியாட்டிலும் காப்பாத்த வேணும் எண்டு குதிச்சு அநியாயமாய்ப் போய்ச் சேர்ந்த சீவன்கள் எத்தினையோ. நீந்தத் தெரியாம ஆத்தில குளத்தில கடலில அநியாயமாப் போச்சேர்ந்த எத்தனையோ சம்பவங்களை நாங்கள் அடிக்கடி கேள்விப்படுறம். உதாலதான் எங்கட ஆச்சி நீச்சல் கட்டாயம் தெரிய வேணும் எண்டிறவ.
மற்றது சயிக்கிள் ஒட்டம் முக்கியம் எண்டிறவ. முந்தி எங்கட ஊரில இப்ப மாதிரி அடிக்கடி பஸ் ஓடுறேல்லை. கோயில் குளத்துக்கு ஆசுப்பத்திரிக்கு கடைகண்ணிக்கு போறதுக்கு நாங்கள் சயிக்கிள்தான் பாவிச்சனாங்கள். சயிக்கிள் இருந்தா ஓடத் தெரிஞ்சா பஸ்ஸ{க்கு அதுக்கு இதுக்கெண்டு காத்துக்கொண்டு காசையும் நேரத்தையும் கரியாக்கத் தேவையில்லை எண்டு ஆச்சி சொல்லுவா.முந்தி சண்டை நடக்கேக்கை இடம்பெயர்ந்து சீவிக்கேக்கை கனபேருக்கு சயிக்கிள்தான் அவையின்ரை சீவியத்துக்கு உயிர் வாழுறதுக்கு கை குடுத்தது. முந்தி நாங்கள் யாழ்ப்பாணக் கம்பசில படிக்கேக்கை அப்ப இந்தியன் ஆமி வேலிவளியை நிண்ட காலம் நாங்கள் ஒவ்வொரு நாளும் சயிக்கிளிலைதான் போய்வாறனாங்கள். எங்கட ஊருக்கும் தின்னவேலிக்கும் போய்வர கிட்டத்தட்ட நாப்பது கிலோமீற்றர் வரும் . வன்னியில் இருந்த காலத்தில் சயிக்கிளில் போய்வராத ஊரே கிடையாது. ஆச்சி அப்ப பேசி ஏசி எனக்கு சயிக்கிள் ஓடப்பழக்கினதால நான் தப்பிப் பிழைச்சனான் எண்டுதான் சொல்லுவன். இப்ப நான் எங்கயும் போகச் சயிக்கிளை எடுத்தா வீட்டம்மா உங்களுக்கு என்ன விசரே ஆரும் என்ன நினைப்பினம் எண்டுவா. அவவிலையும் பிழையில்லை சயிக்கிளிலை வேலைக்குப் போனால் அங்கை இஞ்சை போனால் கவுரக்குறைச்சல் எண்டு நினைக்கிற கனபேர் இருக்கினம்.
ஆச்சி சொல்லுற மற்ற விசயம் சமையல். அதைப்பற்றி கதைக்கத்தான் வெளிக்கிட்டனான். சமை எண்டால் பக்குவப்படல் எண்டு அகராதி சொல்லுது. அதாலதான் நாங்கள் சாமத்தியப்பட்ட பிள்ளையளை பக்குவப்பட்டிட்டினம் எண்டிறனாங்கள். அப்ப சமையல் எண்டாலும் பக்குவப்படுத்தல் எண்டு அர்த்தம் எடுக்கலாம். என்னத்தை பக்குவப்படுத்திறது எண்டால் சாப்பாட்டின்ரை சுவை மணம் நிறம் சத்துக்களைப் பக்குவப்படுத்திறது எண்டு பொருள்.
உது கனபேருக்கு விளங்கிறேல்லை எப்பிடி எண்டான்ன அவிச்சுக் கொட்டினாச் சரி எண்டு நினைப்பினம். உதாலதான் உங்கை எத்தனையோ வீடுகளிலை சண்டை சச்சரவு வந்து அடிபட்டு ஏன் கனக்கப்போவான் நேற்று ஒரு இடத்தில கொலையிலை கூட முடிஞ்சிருக்கு எண்டு ஒரு செய்தி பாத்தனான்.சமையல் மனிசன்ரை கூர்ப்பில முக்கியமான ஒரு விசயம் எண்டு ஆராய்ச்சி செய்தவை சொல்லுகினம். அப்ப ஒழுங்காச் சமைக்கத் தெரியாதவையை கூர்ப்படை யாதவை எண்டாலாமோ எண்டு நீங்கள் முணுமுணுக்கிறது எனக்கு கேக்குது. உண்மையா ஒழுங்கா சமைக்கத் தெரியேல்லை எண்டால் கூர்ப்படையேல்லை எண்டுதான் சொல்ல வேணும். நெருப்பைக் கண்டு பிடிக்கேக்கையே மனுசன் சமைக்கப்பழகிப்போட்டான் எண்டு அப்பு சொல்லுறவர். இப்ப என்னண்டால் நெருப்பில்லாமலே அவிக்காம பொரிக்காம சமைக்கிற முறையள் கனக்க வந்திட்டுது.
உங்கை இப்பவும் கனபேர் ஐயோ என்ரை பிள்ளைக்கு சுடுதண்ணி கூட வைக்கத்தெரியாது எண்டு பெருமையாச் சொல்லுவினம். உப்பிடிப் பெருமை பேசுறவைக்கு நல்லா சுடுதண்ணியை கொதிக்க கொதிக்க மூஞ்சையில ஊத்தவேணும் எண்டுவா ஆச்சி, பெரிய அவுறுகம் விடுவினம். உப்பிடி வீண் விசும்பு விட்டு வளத்ததுகள்தான் போற போற இடங்களில குடும்பம் நடத்தத் தெரியாம குழம்பித் தெருவில நிக்குதுகள் எண்டுவா.சிலர் நினைப்பினம் ரெக்எவேயில எடுத்துச் சாப்பிடலாம் இல்லாட்டில் ஹோட்டலிலை போய்ச்சாப்பிடலாம் என்னத்துக்குச் சமைச்சுக் கஸ்ரப்பட வேணும் என்னத்துக்கு சட்டி பெட்டி கழுவ வேணும் எண்டு நினைப்பினம். உப்பிடி நினைச்சு கடைவழியை அவன் தாறதை எடுத்துத் திண்டவை அதை ஒரு நாகரீகம் எண்டு நினைச்சவை பிறகு கண்ட கிண்ட வருத்தமும் வந்து பிறகு ஒண்டுமே தின்னேலாமல் உத்தரிக்கிறதை நாங்கள் எத்தனையோ இடங்களில பாக்கிறம்.
ஆச்சி சொன்ன மாதிரி சமைக்கத் தெரிஞ்சா எங்களுக்கு விரும்பினதை விரும்பின நேரத்தில சமைச்சுச் சாப்பிடலாம். அதால செலவும் சிக்கனமாகும் உடம்பும் கண்ட கிண்ட வருத்தம் ஒண்டும் வராமல் இருக்கும். உங்கை சமைக்கத் தெரியாத ஆக்கள் லொக்டவுண் நேரத்தில எவ்வளவு கஸரப்படுகினம்.வெளிநாடு வழியை போன எங்கட பெடியள் கனபேர் சமைக்கத் தெரிஞ்சதால தப்பிப்பிழைச்சவங்கள். பிறகு வடிவு மட்டும் பாத்து சமைக்கத் தெரியாத பொம்பிளையளைக் கூப்பிட்டு இப்பவும் சமைச்சுக் குடுத்து குடும்பம் நடத்திறாங்கள் எண்டு என்ரை கூட்டாளி ஒருத்தன் பகிடியாச் சொல்லுறவன்.
உது மாதிரி கண்டபடி எக்கச்சக்கமாச் சீதனம் குடுத்து கட்டின கன பொம்பிளையள் என்ன என்ரை அப்பன் ஆத்தை இவ்வளவு சீதன பாதனத்தை தந்தது உங்களுக்குச் சமைச்சுப் போடவே எண்டு சண்டை போடுவினம். அப்பிடியான இடங்களில சமைக்கத் தெரிஞ்ச ஆம்பிளையள் ஒரு மாதிரி சமைச்சுக் கிமைச்சு குடும்ப வண்டில மூச்சு முட்ட இழுத்து ஓடுறாங்கள்.எங்கட ஒரு வெள்ளைக்காறக் கொம்பனியில வேலை செய்யிற என்ரை சிநேகிதி ஒருத்தி ஆம்பிளையளும் பொம்பிளையளும் சமமெல்லே. அப்ப சேர்ந்தெல்லோ சமைக்க வேணும். அதென்ன அடுப்பூதிறது பொம்பிளையளின்ரை வேலை எண்ட மாதிரி கன ஆம்பிளையள் நினைக்கினம் எண்டுவா. அவ சொல்லுறது உண்மை தான் அதனாலதான் ஆச்சி சொல்லுறவ ஆம்பிளையோ பொம்பிளையோ சமைக்கத் தெரிய வேணும் எண்டு. உண்மையில ஆணும் பெண்ணும் சேர்ந்து சமைச்சா அலுப்பிருக்காது எண்டிறன்.
ஆனாலும் ஒரு விசயத்தை ஒத்துக்கொள்ள வேணும். அநேகமா எங்க எந்த இடத்திலையும் எந்தக் ஹோட்டலில பாத்தாலும் சமையல்காறர் ஆம்பிளையளாத்தான் இருப்பினம். அவை சமைச்சுக் குடுக்கிறதை பெண்டுகள் சாப்பிட்டுப் போட்டு ஆஹா ஓஹே எண்டு போட்டு தங்கட வீட்டு ஆம்பிளையளைப் பாத்து நீங்களும் இருக்கிறியளே எண்டு கருத்துச் சொல்லுவினம். அதாலதான் நல்ல சமையலை நளபாகம் எண்டு ஆக்கள் சொல்லுவினம்….
நளனின்ரை சமையலிலை தமயந்தி மட்டும் இல்லை நாடே கட்டுப்பட்டுக் கிடந்தது எண்டு ஆச்சி சொல்லுறவ. முந்தி நான் படிப்பிக்கிற காலத்தில பள்ளிக்கூட நிகழ்வுகளுக்கு சமைக்கேக்கை ரீச்சர்மார் கறி கூட்ட என்னைத்தான் கூப்பிடுறவை. கொஞ்சம் பொறுங்கோ… நேரம் எல்லே போகுது இன்னும் உலை வைக்காம உங்கை என்னத்தை எழுதிக்கிளிக்கிறியள் எண்டு வீட்டம்மா கத்துறா . சமைச்சு முடிய பிறகு மிச்சத்தை எழுதிறன். சோறு முக்கியம் கண்டியளோ.
![]()
