விளக்குமாறும் தும்புத்தடியும்

0
vm275

யூட் பிரகாஷ்

யாழ்ப்பாணத்தில் உச்சி வெய்யில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. கொஞ்ச காலமாக வீசிக் கொண்டிருக்கும் சோளக் காற்று ஊர்ப்புழுதியை எல்லாம் வீட்டுக்குள் அள்ளிக் கொண்டு வந்து சேர்த்திருந்தது.

“எத்தன தரமடாப்பா கூட்டுறது.. கூட்டக் கூட்ட புழுதி வந்து சேர்ந்து கொண்டே இருக்கு” வீட்டின் மூலையில் சாத்தி வைத்திருந்த தும்புத்தடியார் காலங்காத்தாலேயே அலுத்துக் கொள்ளத் தொடங்கினார்.

“என்ன இருந்தாலும்.. எங்கட வீடெல்லோ.. நாங்க தானே துப்புரவா வச்சிருக்கோணும்.. அதுவும் நீர் தானே தும்புத்தடி.. கூட்டிப் பெருக்கித் துப்புரவாக வைத்திருக்கிறது தானே உமக்கு விதிக்கப்பட்ட விதி” தும்புத்தடி இருந்த மூலைக்கு பக்கத்து மூலையில் சாத்தி வைக்கப்பட்டிருந்த, வேலையி்ல்லாமல் விடுப்புப் பார்த்துக் கொண்டிருக்கும், உலக்கையார் சோம்பல் முறித்துக் கொண்டார்.

“ஓமடாப்பா நீ சொல்லுறதும் சரி தான்” தும்புத்தடியார் பழைய குருடி கதவை திறடி கதையாட்டம் தனக்கு விதிக்கப்பட்ட வீட்டைத் துப்புரவாக்கும் வேலையை தொடங்குவம் என்று ஆயத்தமாகவும், அடி வளவுக்க குய்யோ முய்யோ என்று பெரும் ஆரவாரம் கேட்கவும் சரியாக இருந்தது.

“என்னடாப்பா ஏதடாப்பா சத்தம்.. தேர்தல் தானே முடிஞ்சிட்டுது” என்று கொண்டே உலக்கையாரும் தும்புத்தடியாரும் யன்னல் சீலையை விலக்கி வெளியே பார்த்தால், பட்டுக் குஞ்சம் கட்டின விளக்குமாத்தார் “டேய் விடுங்கடா என்னை..டேய் விடுங்கடா என்னை” என்று கத்திக்கொண்டு அடிவளவுக்க ஓடித்திரியிறார்.

“என்னடாப்டா இது காலங்காத்தால விளக்குமாத்தார் கத்து கத்தென்று கத்துறார்.. உவர் விளக்குமாத்துக்கு என்னவாம் பிரச்சினை” உலக்கையார் தும்புத்தடியாரிடம் குசுகுசுத்தார்.

“ஆ… விளக்குமாத்தை வீட்டுக்க விடட்டாம்.. தான் வீட்டையும் வளவையும் ஊரையும் உலகத்தையும் எல்லாத்தையும் நிமித்திக் காட்டுவாராம்” தும்புத்தடியாரும் உலக்கையாருக்கு மெதுவாகவே பறைஞ்சார்.

“ஏன்டாப்பா உவன் விளக்குமாத்தார் தானே விடுங்கோ என்னை.. நான் வளவை வடிவா துப்புரவாக்கிறன் என்று எல்லோ வீட்டை விட்டு போனவன்.. இப்ப பார் வளவெல்லாம் இன்னும் குப்பையும் கஞ்சலுமா கிடக்கு” உலக்கையாரின் பார்வை அலங்கோலமாக இருந்த அடிவளவைச் சுற்றி வந்தது.

“ஐசே தும்புத்தடி.. வெளியே வாரும்.. ஏலுமென்றா வெளியே வாரும்..” விளக்குமாத்தார் கத்திக் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்க அவரோடு அலவாங்காரும் கோடாரியாரும் ஓடோடி வந்து விளக்குமாத்தாரோடு ஒட்டிக் கொண்டனர்.

“எடேய்.. போன மாதம் தானேடா வீட்டுக்க இருந்த மங்கிப் போன கோடாரியையும் அலவாங்கையும் தூக்கி அடிவளவுக்க வீசினவங்க.. பார் உவயல.. இப்ப குஞ்சம் கட்டின விளக்குமாத்தோட போய் விலாசமா நிற்கீனம்..“ உலக்கையார் கொடுப்புக்க சிரித்துக் கொண்டார்.

“ஓமோம்.. அங்க.. அங்க பாரும்.. புளியமரத்திற்கு பின்னால மம்பட்டியார் மறைஞ்சிருந்து விளக்குமாத்தாருக்கு விளக்கு பிடிக்கிறதை” தும்புத்தடியாரும் குசும்பினார்.

“ஓ..ஓ.. ஓ..இப்பான் கவனிச்சனான்” உலக்கையார் கலகலவென கெக்கட்டம் போட்டுச் சிரித்தார். “விளக்குமாத்தார் குஞ்சம் கட்டிக் கொண்டு கத்திப் போட்டுக் கிடக்கட்டும்.. இதைத்தானே காலங்காலமா செய்யுறார்” உலக்கையார் தும்புத்தடியாரை திரும்பிப் பார்த்தார்.

“அடிவளவையே ஆமாணதாக துப்புரவாக்கத் தெரியாத பட்டுக் குஞ்சான் விளங்குமாறு வீட்டுப் படி ஏறி வந்து வீட்டைப் பெருக்கப் போகுதாம்.. கேட்கிறவன் கேணயன் என்றால் எலியும் ஹெலியை ஓட்டும் என்றுவாங்களாம்” உலக்கையார் புறுபுறுத்தார்.

“எனக்கு தலைக்கு மேலே வேலை கிடக்கு.. நான் வீட்டைக் கூட்டிப் பெருக்கப் போறன்.. உவங்கட கூத்தைப் பார்த்துக் கொண்டிருந்தால் வீட்டு வேலை ஒன்றும் நடவாது” தும்புத்தடியார் யன்னல் சீலையை இழுத்து மூடி விட்டு விறுவிறுவென வீட்டைப் பெருக்கத் தொடங்கினார்.

“ஓமடாப்பா நீ உன்ட வேலையை பார்.. உதுகள் தாங்களும் படுக்காதுகள் தள்ளியும் படுக்காதுகள்..” உலக்கையார் தொடர்ந்தார். “வீட்டு படியில காலடி எடுத்து வச்சாங்களோ நானே ஒரு போடு போடுறன்..”உலக்கையார் விடுப்புப் பார்த்துக் கொண்டே நிலை எடுத்துக் கொண்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *