‘நான் பார்த்ததிலேயே அவள் ஒருத்தியைத்தான்நல்ல அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்’

0
vm296

‘” சரோஜாதேவியின் சாதனை பயணம்!

பரதக்கலை, வாய்ப்பாட்டு, மேடை நாடகம் என்பன போன்ற கூடுதல் முகவரிகள் ஏதுமில்லை. நடிப்பில் வழிகாட்டுவதற்குப் போதிய பின்புலமும் இல்லை. ஆனாலும் தென்னகத் திரையுலகின் உச்சாணிக் கொம்பைத் தொட்டவர் சரோஜாதேவி.அதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள், கலையின் மீதான பக்தியும், சலியாத உழைப்பும். எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி என்ற தமிழ்ச்சினிமாவின் மூவேந்தர்களும் கொண்டாடி மகிழ்ந்த ஒரே அபூர்வத்தாரகை. ‘கன்னடத்துப் பைங்கிளி, அபிநய சரஸ்வதி என்று தமிழ்த் திரையுலகத்தால் கொண்டாடப்பட்ட நடிகை சரோஜாதேவி. நடித்த முதல் படம் ‘தங்கமலை ரகசியம்’ 1957 ஜூன் 29 அன்றுதான் வெளியானது. அக்காலத்தில் சூப்பர் ஸ்டார் ஆக இருந்த எம்.ஜி.ஆருடன் சரோஜாதேவி இணைந்து கதாநாயகியாக 26 படங்களில் நடித்திருக்கிறார்.

அவருடன் மட்டுமின்றி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன், காதல் மன்னன் ஜெமினி கணேசன் ஆகியோருடனும் பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.”திரையுலகில் என்னுடைய துரித வளர்ச்சிக்குக் காரணம் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரம்” என்று சொல்லியுள்ளார் சரோஜாதேவி. அத்தகைய பெருமை பெற்ற எம்ஜிஆரின் படங்கள் அதிகமாக விலை பேசப்பட்டதற்கும் சரோஜாதேவி முக்கியக் காரணமாக இருந்தார். மன்னாதி மன்னன் படச்சுவரொட்டிகளில் சரோஜாதேவியின் படம்; இல்லாததால் விநியோகஸ்தர்கள், படப்பெட்டியைத் தூக்க மறுத்துப் பின் வாங்கினார்கள் என்ற ஒரு செய்தியும் உண்டு. 4 மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை சரோஜாதேவி, அவருடைய 87 வது வயதில் 14.07.2025 பெங்களூருவில் காலமானார். அவரை தமிழ்த்திரையுலகில் அறிமுகம் செய்தது யார் என்பதில் பெரும் போட்டியே இருக்கிறது.ஆனால் சிவாஜி நடித்த ‘தங்கமலை ரகசியம்’ படத்தில் நாயகியான ஜமுனாவிடம் தங்கமலை ரகசியத்தைச் சொல்லும் அந்தக் காட்சிதான் சரோஜாதேவியின் அறிமுகக் காட்சியாகும். ஆனால் சரோஜாதேவியை தமிழகமே ‘யாரிந்த தேவதை’ என்று கேட்க வைத்தது நாடோடி மன்னன் படம்தான். எம்ஜிஆர் இயக்கி தயாரித்த அவரின் சொந்தப்படமான நாடோடி மன்னனில் எம்ஜிஆருக்கு நாயகியாக நடிக்க முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர் பானுமதி. ஆனால் படப்பிடிப்பில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நாயகியாக நடிப்பதிலிருந்து பானுமதி விலகிக்கொள்ள, எம்ஜிஆருக்கு நாயகியாகும் வாய்ப்பு சரோஜாதேவிக்கு வந்தது. எம்ஜிஆர் தயாரித்து இயக்கி நடித்த அந்தப் படத்தில் சரோஜாதேவியின் அழகும், கொஞ்சும் குரலும் தமிழ் ரசிகர்களை கவர்ந்து இழுத்தது. அந்தப் படம்தான் அக்காலத்தில் ஒரு கோடி வசூலைத் தொட்டது. அதிலிருந்து வசூல் ராணியாகவே அவர் வலம் வந்ததார்.

‘அன்பே வா’. பிரபல இயக்குநர் ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் முழுக்க முழுக்க சிம்லாவில் படமாக்கப்பட்டது. இந்த படத்திற்காக வாலியால் எழுதப்பட்ட ‘நான் பார்த்ததிலேயே அவள் ஒருத்தியைத்தான் நல்ல அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்’ என்ற பாடல், சரோஜா தேவிக்காகவே எழுதப்பட்ட வரிகளாக இருக்கும்.இதே படத்தில்தான் ‘ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’ பாடலும், அதில் எம்ஜிஆர் மற்றும் சரோஜாதேவியின் ஆடை, அணிகலன், அலங்காரம் அத்தனையும் அசல் ராஜா–ராணி போலிருக்கும்.

சிவாஜி புரடக்சன்ஸ் தயாரிப்பில் வெளியான முதல் படம் புதிய பறவை.சிவாஜியை ஒரு எதிர்மறை நாயகனாகக் காண்பிக்கும் வித்தியாசமான கதைக்களம் உள்ள அந்த ‘காதல் த்ரில்லர்’ படத்தை இந்திப்பட இயக்குநர் தாதா மிராசி இயக்கிருந்தார். படத்தின் இரு கதாநாயகிகளில் ஒன்றாக வந்த சரோஜாதேவி. பிரபல சிங்கப்பூர் தொழிலதிபர் கோபாலை காதலிக்கும் லதா என்ற கதாபாத்திரம். கோபாலின் முதல் மனைவி இறந்ததன் மர்மத்தை அறியும்போது சரோஜா தேவி உடைந்து உருக்குலைந்து ‘கோபால் கோபால்’ என்று கதறும் காட்சி அக்கால ரசிகர்களை காட்சிக்குள்ளேயே உறைய வைத்தது.அந்தப் படத்தில் அவர் உச்சரிக்கும் ‘கோபால் கோபால்’ என்பதை வைத்தே, நடிகர் விவேக் ஒரு திரைப்படத்தில் பெண் வேடத்துடன் சில காட்சிகளை வடிவமைத்திருப்பார். அந்த காட்சியும் எல்லோரையும் ரசிக்கவைத்தது. அதன்பின் அந்த ‘கோபால்’ வசனமே பலருக்கும் பல நேரங்களில் ‘மீம் கண்டென்ட்’ ஆனது.
பாலும் பழமும்!பீம்சிங் இயக்கத்தில் உருவான இந்தப் படத்திலும், சௌகார்ஜானகியும், சரோஜாதேவியும் இரண்டு கதாநாயகிகளாக நடித்தனர். சரோஜாதேவி, சாந்தி மற்றும் நீலா என்ற இரண்டு கதாபாத்திரங்களில் இரட்டை வேடத்தில் நடித்தார். அந்த இரண்டு பாத்திரங்களுக்கும் இடையிலும் தனது நடிப்பால் ஒரு பெரும் வித்தியாசத்தைக் காண்பித்திருப்பார்.இந்தப் படத்துக்கான விமர்சனத்தில் ஆனந்த விகடன், ”நடிப்பிலே சிவாஜிக்கு ஈடு கொடுக்கிறார் சரோஜாதேவி.’ என்று பாராட்டியது. தாய் சொல்லைத் தட்டாதே!எம்ஜிஆர்–சரோஜாதேவி இணையின் வெற்றிப் படங்களில் இதுவும் ஒன்று. 1961 தீபாவளிக்கு வெளியான இந்தப் படத்தை தேவர் பிலிம்ஸ் தயாரித்திருந்தது. மிகக்குறுகிய காலத்தில் எடுக்கப்பட்டு, மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் இது.கல்யாணப்பரிசு வெள்ளிவிழாவுக்கு எந்த ஊருக்குமே வர இயலாது என்று கைவிரித்த சரோஜாதேவி,இந்தப் படத்தின் 100 வது நாள் வெற்றிக்காக கோவை, மதுரை,திருச்சி,சேலம், தஞ்சாவூர், நெல்லை என பல ஊர்களுக்கும் எம்ஜிஆருடன் சென்றுள்ளார்.

ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான கல்யாண பரிசு, அந்தக் காலத்தில் ‘சூப்பர் டூப்பர் ஹிட்’ அடித்த படம். அதில் காதல் மன்னன் ஜெமினி கணேசனுக்கு நாயகியாக வசந்தி என்ற பாத்திரத்தில் நடித்திருக்க வேண்டியவர் நடிகையர் திலகம் சாவித்திரி. ஆனால் அப்போது அவர் கர்ப்பமானதால் அந்தப் பாத்திரம், சரோஜாதேவியின் கைக்குவந்தது. தமிழே அறியாத சரோஜாதேவி ஒரு ரூபா என்பதை தமிழில் ‘வரு ரூபா’ என்றே திரும்பத் திரும்பச் சொல்லி, ஒரு நாளையும் ஏகப்பட்ட ஃபிலிமையும் தின்று ஏப்பம் விட்டதாக கோபு நகைச்சுவையாகச் சொல்வார்.அந்தப்படம் 25 வாரங்கள் ஓடி வெள்ளிவிழா கண்டது. ஜெமினியின் முதல் வெள்ளிவிழா படம் என்ற முறையில், அதிலிருந்து சாவித்திரிக்கு அடுத்ததாக ஜெமினியின் ஆஸ்தான நாயகியாக சரோ இடம் பிடித்தது கல்யாண பரிசில் இருந்துதான். கடந்த 1997 ஆம் ஆண்டில், சிவாஜி கணேசனுடன் விஜய் இணைந்து நடித்த ‘ஒன்ஸ்மோர்’ படத்தில், இந்த படத்திலிருந்து எடுக்கப்பட்ட சில காட்சிகள், பயன்படுத்தப்பட்டன. ஆதவன்!சரோஜா தேவி தமிழில் கடைசியாக நடித்த படம் இதுதான். சூர்யா–நயன்தாரா இணையாக நடித்த இந்த படம், 2009 ஆம் ஆண்டில் வெளியானது.சரோஜாதேவி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துப் பேசிய நடிகர் சிவகுமார், ”வழக்கமாக திரைத்துறையை விட்டு விலகிய பல நடிகைகள் வயதான காலத்தில் மிகவும் கஷ்டப்படுவார்கள். ஆனால் 87 வயதிலும் செல்வமும் செல்வாக்கும் மிக்க நல்லதொரு வாழ்க்கையை அவர் வாழ்ந்து மறைந்திருக்கிறார்.” என்கிறார் சிவகுமார். எம்ஜிஆர் மறைந்து 30 ஆண்டுகளாகிவிட்டாலும் இன்றும் அவருடைய படங்கள் பேசப்படுவது போல, சரோஜா தேவியின் படங்களும் நிலைத்து நிற்கும்.” என்கிறார்.நன்றி!சேவியர் செல்வகுமார்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *