இழப்புகள் தரும் வெற்றிடங்கள்
- சேவியர் 17 செப்டம்பர், விமானத்திலிருந்து )
ஒவ்வொரு சவப்பெட்டியும் சுமப்பது வெறும் சடலங்களல்ல, அவை உரைக்கப்படாத கதைகளின் தூக்கம். இன்னும் முடியாத கனவுகளின் உறக்கம். இன்னும் பகிரப்படாத அறிவின் விடைபெறல் !
மரணம் தவிர்க்க முடியாதது. அவை விட்டுச் செல்லும் வெற்றிடங்களை யாரும் எளிதில் நிரப்பி விடவும் முடியாது. மரணம் அழைப்பிதழ் அனுப்பிவிட்டு சந்திப்பதில்லை. அது தனது நேரத்துக்காய்க் காத்திருக்கிறது. எல்லோருக்கும் பின்னால் மரணம் ஒரு உணரப்படாத நிழல் போல கண நேரமும் பின் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எப்போது அந்த நிழல் நிஜத்தை விழுக்கி ஏப்பம் விடும் என்பதை யாரும் கணிக்க முடியாது. மரணத்தின் கண்ணியிலிருந்து எந்த. மனிதரும் தப்பிவிடவும் முடியாது. அதுவே இறைவனின் ஏற்பாடு, அதுவே இயற்கையில் இலக்கணம்.
ஒவ்வொரு மனிதனும் அன்பு, அறிவு, திறமை போன்றவற்றை தனக்குள் நிரப்பி வைத்திருக்கும் ஒரு உலகம். ஒரு மனிதர் இறக்கும்போது அவருடன் சேர்ந்து அந்த உலகமே இறந்து விடுகிறது.
செய்தித் தாள்களில் மரணச் செய்திகளைப் பார்க்கும் போது அவை ஒரு செய்தியாக நம்மைக் கடந்து சென்று விடுகிறது. அல்லது பெரும் துயர் நிகழ்வுகளில் மரணம் ஒரு புள்ளி விவரமாய் நம்மைச் சந்தித்து விட்டு விடைபெறுகிறது. நில நடுக்கத்தால் ஆயிரம் பேர் இறந்தார்கள் எனும் போது அது ஒரு செய்தியாக மட்டுமே நம்மைத் தாக்குகிறது. சில நாட்களில் இன்னொரு செய்தி வந்து அதன் மீது அமர்ந்து அதை மறக்கச் செய்து விடுகிறது.
ஆனால் ஒவ்வொரு எண்ணிக்கையும் ஒரு முகம், ஒரு குடும்பம், ஒரு முடியாத துயரம். வீடு திரும்பாத ஒரு தந்தையின் கதை. கனவுகள் சிதைந்து போன ஒரு மகளின் கதை. ஒரு நண்பனின் உறைந்து போன சிரிப்பு. எந்த ஒரு செய்தியும் நம்மை கலங்கடிக்க வேண்டும். அந்த குடும்பத்தின் வலியோடு நம்மை இணைக்க வேண்டும். அவர்களுக்கு உதவ வேண்டும் எனும் உத்வேகத்தை நமக்கு நல்க வேண்டும். அவர்களோடு அமர்ந்து ஆறுதல் சொல்ல வேண்டும் எனும் தாகத்தை நமக்குள் நிரப்ப வேண்டும். ஏனெனில் அவர்கள் வெறும் தரவுகளல்ல, நம் உறவுகள்.
குடும்பங்களில் ஒரு மரணம் நிகழ்ந்தால், அதன் பின் அந்தக் குடும்பம் பழைய நிலைக்கு என்றைக்குமே திரும்புவதில்லை. அவர்களுடைய வாழ்க்கை தொடரும், ஆனால் அது இன்னொரு வடிவத்திலேயே இருக்கும். பல குடும்பங்களில் அது வெறும் துயரம் மட்டுமல்ல, வாழ்க்கையை அடுத்த நாளுக்குத் தள்ளிச் செல்வது எப்படி எனும் திகைப்பு. வருமானத்துக்கு என்ன செய்வது எனும் அதிர்ச்சி.
கூட்டுக் குடும்பக் காலத்தில் மரணத்தின் தாக்கத்தை எதிர்கொள்வதும், மேற்கொள்வதும் சற்று எளிதாய் இருந்தது. ஏனெனில் ஒரு இழை அறுபடும் போது தாங்கிப் பிடிக்க பல இழைகள் இருந்தன. ஆனால் இப்போது தனித்தனிக் குடும்பங்களில் கிளைகள் வெட்டப்பட்டால் அங்கே தாங்கிப் பிடிக்க வேறு கிளைகள் இருப்பதில்லை.
எப்போதையும் விட அதிகமாய் நம் அன்பும், அரவணைப்பும் ஒருவருக்குத் தேவைப்படுவது மரண காலங்களில் தான். வெறும் ஒரு நாள் சந்திப்புடனோ, ஒருவார தொடர்புடனோ நம் உறவின் கரிசனை முடிந்து விடக் கூடாது. அவை அவர்கள் மீண்டு வரும் வரை தொடரவேண்டும். அதுவே மனிதத்தின் தன்மை. அதுவே மனுக்குலத்தின் மேன்மை. அதனால் தான் கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள், ‘கல்யாண வீட்டுக்கு போகாட்டாலும், இழவு வீட்டுக்குப் போ’ என்று ! நாம் கொண்டாட்டங்களில் சிரிப்பதல்ல, தவிப்புகளில் கலந்து கொண்டு அழுவதே மனிதத்தின் மகத்துவம்.
இழப்புகள் வெறும் தனிநபர் இழப்புகளாகவோ, குடும்ப இழப்புகளாகவோ மட்டும் நின்று விடுவதும் இல்லை. ஒவ்வொரு மரணமும் ஒரு திறமையின் புதையலை புதைகுழிக்கு அனுப்பும் கணம். ஒரு சமூகம் வளர்ச்சியடையத் தேவைப்படும் பல ஆற்றல்கள் அடக்கமாகும் கணம். ஒரு ஆசிரியர் இறக்கும்போது கற்றுத் தராத பாடங்கள் அவருக்குப் பின்னால் கரைந்து விடுகின்றன. ஒரு மருத்துவர் இறக்கும் போது அவரை நம்பியிருக்கும் பல நோயாளிகள் தவிக்கின்றனர். ஒரு கலைஞர் இறக்கும்போது கலையின் கிரீடங்களில் அவர் வைக்க வேண்டிய பல முத்துகள் மறைந்து விடுகின்றன.
ஒவ்வொரு மனிதரும் தன்னுடைய ஆற்றலை, திறமைகளை தன்னுடைய மறைவுக்குப் பின் மக்களுக்குப் பயன்படும் வண்ணம் பகிர வேண்டும். அவை ஏதோ ஒரு வகையில் அடுத்தடுத்த தலைமுறையினருக்குப் பயன்படும் வகையில் மாற்றப்பட வேண்டும். நாளைய தலைமுறைக்காய் இன்று விதை நடுதல் போல அது நடைபெற வேண்டும். இழப்புகளை முழுமையாய் நிவர்த்தி செய்ய முடியாது, ஆனால் இத்தகைய முயற்சிகளினால் அதன் தாக்கத்தைச் சற்றே தணிக்க முடியும்.
ஒவ்வொரு தனி மனிதரும் தனது வாழ்க்கை தனக்கானது மட்டுமல்ல, தன் குடும்பத்துக்கானது, தன் நண்பர்களுக்கானது, அலுவலகத்துக்கானது, சமூகத்துக்கானது எனும் சிந்தனையுடன் வாழவேண்டும். உடலை நலமுடன் பேணுவதும், உடலின் நலனுக்கு குறைவு வரும்போது அதை சரி செய்வதும். உடற்பயிற்சிகள் செய்வதும் என சரியான முறையில் நேரத்தைச் செலவிட வேண்டும்.
விபத்துகளும் கணிசமான உயிர்களைக் குடித்து ஏப்பம் விடுகிறது. நாம் கேள்விப்படும் விபத்துகள் எப்போதுமே விபத்துகளாய் இருப்பதில்லை. அவை அலட்சியங்களின் விடையாகவும் அமர்ந்து விடுகின்றன. குடித்துவிட்டுத் வாகனம் ஓட்டுபவர் செய்யும் விபத்து, விபத்தல்ல ! அது அலட்சியத்தின் பிள்ளை. பாதுகாப்பை உதறிவிட்டு பைக் ஓட்டும்போது நிகழும் உயிரிழப்பு விபத்தல்ல, அஜாக்கிரதையின் பயன். இத்தகைய பொறுப்பற்ற செயல்கள் பல பொறுப்பான, நிதானமான, நல்ல மனிதர்களையும் சாகடித்து விடுகிறது.
பாதுகாப்பையும், சமூக பொறுப்புணர்வையும் நாம் ஒரு வாகனம் ஓட்டும்போது கூட கைக்கொள்ள வேண்டும். நான் வாகனம் ஓட்டுவது என்னை மட்டுமே சார்ந்ததல்ல, என் குடும்பம் மற்றும் என் சமூகம் சார்ந்தது எனும் சிந்தனை வேண்டும்.
பல தற்கொலைகள் பொருளாதார பலவீனத்தால் நிகழ்கின்றன. பொருளாதாரத்தை நிர்வகிக்கத் தெரியாததால் கூட பல மரணங்கள் நிகழ்கின்றன. பல தற்கொலைகள் உப்பு சப்பில்லாத காரணத்துக்காய் நிகழ்கின்றன. ஒரு தற்கொலை நிகழும்போது அதற்கான பொறுப்பை அவர் சார்ந்த சமூகமே ஏற்கவேண்டும். அவருக்கு உதவாத, அவரை நல்வழிப்படுத்தாத, அவருக்கு ஊக்கம் ஊட்டாத ஒவ்வொருவருமே குற்றவாளிகள் தான். தற்கொலை செய்ய வேண்டும் என முடிவெடுப்பவரின் மன உளைச்சல் சொல்ல முடியாத துயரத்தின் படுகுழி. பேரன்பின் கனிவுடனும், கருணையுடனும் அவர்கள் குடும்பத்தை நாம் அணுக வேண்டும்.
மரணம் என்பது எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் எனும் சிந்தனையுடன் ஒவ்வொரு கணத்தையும் அணுக வேண்டும். கனவுகளைத் தள்ளி வைக்காமல், பொறுப்புகளைக் கிடப்பில் போடாமல், மனிதத்தை ஒத்தி வைக்காமல், இலட்சியத்தை மறந்து விடாமல் பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும். மணத்தைத் தனக்குள் ஒளித்து வைப்பதில்லை மலர் ! தோட்டத்துக்கே வாசனை வழங்குகிறது. தன் கனியைத் தானே தின்று திளைப்பதில்லை மரம், பிறருக்குப் பந்தி வைத்து மகிழ்கிறது. நம் வாழ்க்கை அப்படித் தான் இருக்க வேண்டும்.
ஒரு மனிதர் இறக்கும்போது அவருடன் சேர்ந்து ஒரு அறிவின் நூலகம் மறைகிறது, ஒரு அனுபவ ஆலை மூடப்படுகிறது. ஒரு ஞானத்தின் வனம் சாம்பலாய் மாறிவிடுகிறது. ‘அவரு இருந்தப்போ ஒண்ணும் தெரியல. இப்போ என்ன பண்றதுன்னே தெரியல’ என கூறும் எத்தனையோ மனிதர்களை நாம் சந்தித்திருப்போம் ! அவையெல்லாம் நிரப்பப்படாத வெற்றிடங்களின் கதறல்களே.
மரணம் என்பது வெறும் இதயத் துடிப்பின் முடிவுரையல்ல. சமூகத்திற்கு அவர்கள் இசைத்துக் கொண்டிருந்த ஒரு பாடலின் முடிவுரை. அதனால் தான் அவர்கள் விலகும்போது மௌனத்தின் பேரொலி நம்மை உலுக்குகிறது. ஒரு மரணம் ஒரு மாபெரும் கண்டுபிடிப்பைப் புதைக்கலாம், ஒரு மரணம் ஒரு மாபெரும் இலக்கியத்தை இறக்கவிடலாம், ஒரு மரணம் ஒரு மாபெரும் சமூக மாற்றத்தை அழித்துவிடலாம்.
ஆபிரகாம் லிங்கன் படுகொலை செய்யப்பட்டதால் அமெரிக்கா முழுவதும் இனப் பதட்டம் சில நூற்றாண்டுகள் தொடர்ந்தது. அவர் மரணிக்காமல் இருந்திருந்தால் ஒரு வேளை இனவெறியின் தாண்டவம் முன்னமே தணிந்திருக்கும்.
மகாத்மா காந்தியடிகள் படுகொலை செய்யப்படாமல் இருந்திருந்தால், இந்தியாவின் கட்டமைப்பு இன்னும் வலுவாக இருந்திருக்கும். ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்படாமல் இருந்திருந்தால் டிஜிடல் தொழில்நுட்ப வளர்ச்சி பல பத்தாண்டுகளுக்கு முன்பே நிகழ்ந்திருக்கும். இப்படி பல தலைவர்களின் மறைவு தேசங்களில் பல தலைமுறைகளைப் பின்னுக்கு இழுக்கின்றன.
ஒரு மனிதர் எப்படி இருந்தார் ! என்பதை மட்டும் மரணம் பேசுவதில்லை. அவர் எப்படியெல்லாம் இருந்திருப்பார் என்பதையும் சேர்த்தே பேசுகிறது. அவர் இருந்திருந்தால் எப்படியெல்லாம் இருந்திருக்கும் எனும் ஏக்கத்தையும் சேர்த்தே பேசுகிறது. ஏனெனில் பேரொளி மனிதர்கள் மறையும் போது சமூகம் இருட்டின் பாதையில் நீண்ட காலம் நடக்க வேண்டியிருக்கிறது. அவர்களின் மறைவு நல்ல வரலாற்றின் சில பக்கங்களைக் கிழித்து எறிகிறது.
மரணம் தரும் வலிகள் கொடுமையானவை, அந்த வலிகளுடன் இருப்பவர்களை அன்புடன் அரவணைப்போம்.
மரணம் தரும் இழப்புகள் கடுமையானவை, அந்த இழப்புகளிலிருந்து மீள்வதற்கு கனிவுடன் கை கொடுப்போம்.
மரணம் தரும் வெற்றிடம் கொடுமையானது, அதை மனிதத்தால் இட்டு நிரப்ப முன்வருவோம்.
ஏனெனில் மரணம் எல்லோரையும் சந்திக்கும். மரணத்தில் உடனிருக்கும் மனிதர்களையே உறவுகள் சிந்திக்கும்.
![]()
