பிள்ளையைப் பெற்றுவிட்டால் போதுமா?அன்னை தந்தை

0
vm320

‘‘தாயிற் சிறந்த கோவிலுமில்லை.
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை…..
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை‘‘

உலகத்திலே ஓர் உயிர் அவதரிக்க முடிவெடுத்துவிட்டால், அந்த உயிர் எந்தப் பெற்றோருக்குப் பிறக்க வேண்டும் என்று பிரபஞ்சமே தீர்மானிக்கின்றது. இந்த உயிரின் எதிர்காலப் பயணத்துக்கு எந்தப் பெற்றோர் தகுதியானவர்கள் என்று தெரிவுசெய்தே ஒவ்வொரு உயிரையும் தேர்ந்தெடுத்த பெற்றோருக்கு பிரபஞ்சம் அனுப்பி வைக்கின்றது.

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.

  • திருக்குறள் – 517
    இந்தச் செயலை, இன்ன காரணத்தால், இவன் செய்து முடிப்பான் என்று ஆராய்ந்து, அந்தச் செயலை அவனிடமே செய்யுமாறு விட்டு விடுதல் வேண்டும் என்பதற்கேற்ப பொருத்தமான பெற்றோருக்கே அக்குழந்தை பிறக்கின்றது. அந்த உயிர் இந்தப் பூமிக்குப் பிறப்பெடுத்த நோக்கத்தைச் சிறப்பான முறையில் செயற்படுத்தப் பெற்றோரின் வழிநடத்தலும் வளர்ப்புமுறையும் சூழலும் எவ்வாறு அமைகின்றதோ, அதற்கேற்பவே அந்தப் பிறவியின் பயனை பிறப்பெடுத்த ஒவ்வொரு உயிரும் அடைய முடியும். எனவே பெற்றொரின் பங்கு பிள்ளைக்கு அவசியமானது.

ஆண்களுடைய மில்லியன்கணக்கான விந்தணுக்களிலிருந்து ஒன்றே ஒன்று பெண்ணின் கருமுட்டைக்குள் சேரும்போது பெண்ணின் கருமுட்டையானது துத்தநாக இரும்புகளை மில்லியன் கணக்காக வெளியேற்றும். அப்போது மின்னல் போன்ற ஒரு தீப்பொறி போன்ற வெளிச்சம் உருவாகும் என்பதை சித்திரை மாதம் 26 ஆம் திகதி 2016 ஆம் ஆண்டு நோர்த் வெஸ்ரன் பல்கலைக்கழகம் ஆய்வின் மூலம் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றார்கள். இந்த வெளிச்சமே ஒவ்வொரு உயிருடையதுமான வாழ்க்கையின் பிரகாசம். ஒரு மனிதன் பிரகாசமாக வாழ வேண்டியவன் என்பதை தந்தை தாயின் விந்தணுக்களும் கருமுட்டையும் உணர்த்துகின்றன. ஆண்பெண்ணுடைய 46 குரோமோசோம்களில் உயிர் தோன்றிவிடுகின்றது. கருப்பாதையில் செல்கள் ஒவ்வொரு செல்களாகத் தோன்றி ஒன்றொடு ஒன்று சேர்ந்து ஒரு பந்து போல உருவெடுத்து உருண்டு பிரண்டு வந்து கருப்பையை அடைகின்றது. அங்கே ஒரு இருப்பை ஏற்படுத்தி, அங்கிருந்தே வளருகின்றது.

அவ்வாறே ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் ஒரு இடத்தை மாணிக்கவாசகர் திருவாசகத்தில் பாடியதுபோல சிக்கெனப் பிடித்தல் வேண்டும். இத்துடன் தாயின் கவனஈர்ப்பு பிள்ளையில் படிய வேண்டியது அவசியம். கருப்பை ஆய்வுகூடத்தில்

உருண்டு சுரண்டு இருகரங் கூப்பிக் கண்மூடி
கருப்பை மண்டலத்தில் தவமிருந்து – என்
பத்துமாதக் கற்பித்தலைக் கற்றாய்
என்நோய் என்குணம் என்பிரதியாக
எழுவாயென்று மனத்தால் கையெழுத்திட்டாய்

         - பனிக்குடம் - 

எனப் பெற்றோரின் மரபணுக்களில் தாயின் கருப்பையினுள்ளேயே பிள்ளை கற்கத் தொடங்குகின்றது என்பதை பிரகலாதன் கதை சான்று பகிர்கின்றது. அதேபோல் “தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை’’ என்பதைப் பிள்ளைகள் உணர்ந்து கொள்ள வேண்டும். பிள்ளையைச் சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடமை. ஈன்று புறந்தருதல் அன்னைக்குக் கடமை என்று பொன்முடியார் புறநானூற்றில் பாடியது போலத் தாய் தன்னுடைய குழந்தையை பெற்றெடுத்துப் பேணி பாதுகாப்பாள். திருமூலர்

‘‘உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்‘‘ என்பார்.

சுவர் இருந்தாலே சித்திரம் வரைய முடியும் என்கிறது பழமொழி;. குழந்தைக்குச் சற்று முகம் வாடினால் ஒரு தாய் துடித்துப் போவாள். கொழுகொழு என்று இருக்கும் பிள்ளையையும் ‘‘என்னப்பா வாடிப் போய்விட்டாய்‘‘ என்று ஊட்டி வளர்க்கின்ற பண்பு தாய்க்கேயுரியது. தேகாரோக்கியமுள்ள பிள்ளையே மூளைச் செல்களை முறையாக இயங்கச் செய்து அறிவாளியாகவும் முடியும். அவ்வாறு உடல் வளர்த்து உயிர் வளர்ப்பவள் தாய்.

சிறுவயதிலிருந்து அறிவுரை கூறி வளர்த்த நரேந்திரனே விவேகானந்தரானார். துடிப்போடு குழப்படி செய்த பிள்ளை மயில்வாகனை சுவாமி விபுலானந்தராக்கியதும் அன்னையே. பெற்ற பிள்ளையில் பாசம் வைக்கும் தந்தை பற்றி சங்கப் பாடல் ஒன்றில் கபிலர் அழகாகச் சொல்கின்றது.

‘’எந்தை நிலன் உறப்பெறான், சீரடி சிவப்ப
எவன் இல! குறுமகள்! இயங்குதி என்னும்’’

  • அகநானூறு 12:2 –

என்னுடைய சிறிய மகளே உன்னுடைய சிறிய அடி சிவக்க ஏன் அங்குமிங்கும் திரிகிறாய் என்று கேட்கும் போது தன்னுடைய மகள் நடப்பதால் பாதங்கள் சிவந்து போகின்றன என்று எண்ணும் தந்தைகளையே பிள்ளைகள் பெற்றிருக்கின்றார்கள். ஆயிரம் கோடிகளை அள்ளிக் கொடுத்தாலும் கிடைக்காத வாகனமே தந்தையின் தோள்கள், தோளில் தூக்கி வைத்து உயரத்தைக் காட்டும் போது எமக்குத் தெரிவதில்லை எம்மை வளர வைத்துப் பார்க்கின்றார் என்னும் சமிக்ஞையை.

ஒரு தந்தைக்குள்ளே தாயன்பு இருக்கின்றது என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைவதே இளகிய மனமுள்ள தாயுமானவரான பெரியாழ்வார் பாடல்கள். ‘’பிள்ளையைப் பெற்றுவிட்டால் போதுமா? பேணி வளர்க்க வேண்டும் தெரியுமா’’ என்பதை உணர்ந்து தம்முடைய கடமைகளை நிறைவுறச் செய்து, பிறப்பின் நோக்கம் உணர்த்தி, பிள்ளைகளை வளர்த்துவிட வேண்டியது பெற்றோர்களின் கடமை. வளர்ந்து பெரியவர்களாகும் பிள்ளைகளோ சூழலின் தாக்கத்தை அறிந்து கல்வி கேள்விகளில் சிறந்து தம்மைச் சீரமைக்க வில்லையானால் பிறப்பின் நோக்கம் பிழைத்தவர்களாவார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *