எங்கடை ஆச்சி 9
என்ன தகுதி இருக்கு?
இப்ப பாத்தம் எண்டால் எங்கடை ஆக்கள் அடிக்கடி அரசியல் பரப்பிலையும் சரி ஆன்மீகப் பரப்பிலையும் சரி இலக்கியப் பரப்பிலையும் சரி சமூகப் பரப்பிலையும் சரி பல இடங்களிலயும் பல சந்தர்ப்பங்களிலையும் தகுதி எண்டு ஒரு சொல்லைப் பாவிக்கினம். எங்கடை அரசியலைப்பற்றிக் கதைக்க இல்லாட்டில் பேச இல்லாட்டில் எங்களுக்கெண்டு அரசியல் செய்ய அவருக்கு என்ன தகுதி இருக்குது ? எங்கடை கோயில் திருப்பணி பற்றிப் பேச இல்லாட்டில் எங்கடை கோயில் திருப்பணி செய்ய வேணும் எண்டு இருக்கிற குழுவிலை இருக்கிறதுக்கு அவருக்கு என்ன தகுதி இருக்குது ? ஆன்மிகம் பற்றிப் பேசுறதுக்கு இல்லாட்டில் ஆன்மீக வேலையள் செய்யிறதுக்கு அவருக்கு என்ன தகுதி இருக்குது ?
எங்கடை ஊரைப் பற்றி இல்லாட்டில் ஊரில நடக்கிற விசயங்களைப் பற்றி இல்லாட்டில் எங்கடை ஊரின்ரை அபிவிருத்தி பற்றிக் கதைக்க அவருக்கு என்ன தகுதி இருக்க்குது ? எங்கடை நிறுவனத்திற்கு தலைவராவதற்கு இல்லாட்டில் எங்கடை நிறுவனத்துக்கு ஆலோசனை சொல்ல இல்லாட்டில் விமர்சிக்கிறதுக்கு அவருக்கு என்ன தகுதி இருக்குது ? எங்கடை இலக்கியம் பற்றி இல்லாட்டில் என்ரை இலக்கியம் பற்றிக் கதைக்கிறதுக்கு அவருக்கு என்ன தகுதி இருக்குது ?.
என்ரை பெட்டைக்கு மாப்பிளையா வாறதுக்கு அவனிட்டை என்ன தகுதி இருக்குது? என்னை எதிர்த்துப் பேச இல்லாட்டில் என்னட்டை ஞாயம் பேசுறதுக்கு அவனிட்டை என்ன தகுதி இருக்குது? அவன் எல்லாம் என்ன தகுதியை வைச்சுக்கொண்டு எங்கடை சமூகம் இல்லாட்டில் எங்கடை சமூகத்தின்ரை அபிவிருத்தி பற்றிக் கதைக் கிறான்? என்ன தகுதியை வைச்சுக்கொண்டு அவன் அந்த வேலையைத் தன்னட்டை தரச் சொல்லிக் கேப்பான் ?
இதெல்லாம் எங்கை எண்டாலும் எங்கடை ஆக்கள் ஒவ்வொருநாளும் கேக்கிற கேள்வியல் இல்லாட்டில் கேள்விப்படுகிற கேள்வியள். உண்ணான தகுதி எண்டால் என்ன? தகுதி பற்றிப் பேசுறதுக்கு இல்லாட்டில் எழுது திறதுக்கு எல்லாம் என்னட்டை தகுதி இருக்குதா எண்டது என்ரை மனசைக் குடையிற பெரிய கேள்வி.
தகுதி எண்டதுக்கு தகைமை,மதிப்பு,நல்லொழுக்கம்,நடத்தை,பெருமை,பொருத்தம், மேன்மை, பண்பு எண்டு பல அர்த்தங்கள் இருக்குது எண்டு எங்கடை அப்பு சொன்னது ஞாபகம் இருக்குது .ஒரு மனுசனாப் பிறந்தவன் தனி மனிசனா இல்லாட்டில் சமூகமாக வாழ எண்டாலும் இந்தத் தகுதி தேவை எண்டு எங்கடை ஆச்சி சொல்லுவா.
தன்ரை அனுபவத்தில இந்தத் தகுதி எண்டது ஒண்டில் தானா வரும் இல்லாட்டில் தேடிப் பெற வேணும் எண்டுவா ஆச்சி. தானாக வாற தகுதி எண்டது பரம்பரை பரம்பரையாக பரம்பரை அலகுகளுக்காலை பாரம்பரிய மாக வாறது. உதுக்கு உதாரணமாக எங்கடை மன்னர் பரம்பரையை சொல்லலாம் . அவையிட்டை அந்த தகுதி இருந்த படியாலதான் அவங்கள் பரம்பரை பரம்பரையா பல நூறு வருசங்களா நாடுகளை ஆண்டவங்கள் எண்டுவா. இப்பிடியான பரம்பரைத் தகுதி தனிய மன்னர்களிட்டை மட்டும் எண்டு இல்லாமல் புலவர்கள், கலைஞர்கள், இசைஞர்கள், பாணர்கள்,ஓவியர்கள்,சிற்பிகள் எல்லாரிட்டையும் இருந்தது எண்டதை பழைய இலக்கியங்கள் வரலாறுகளிலை இருந்து அறியிறம் எண்டிற அப்பு அதமாதிரி எங்கட ஊர்வழியையும் அப்பிடிக்கொத்த குடும்பங்களை பரம்பரை பரம்பரையாக நல்ல பண்புகளோடை இருக்கிறதைப் பாக்கலாம் எண்டுவார்.
தானாக வாற இப்படியான பரம்பரைத் தகுதி மாதிரி தேடி எடுக்கிற தகுதியும் இருக்குது. நல்ல முறையான கல்வி கேள்விகளிலை விண்ணர்களா இருக்கிறவையிட்டை கேட்டுப் படிக்கிறதால இல்லாட்டில் நல்ல பண்புகள் பழக்க வழக்கம் உள்ளவையோடை பழகிறதால இல்லாட்டில் எங்கடை பெரியாக்கள் ஆன்றோர்கள் முனிவர்கள் ஞானிகள் ஒரு மனுஷன் எப்படி வாழ வேணும் எண்டு சொன்ன விசயங்களை பின்பற்றி வாழுறதாலையும் இப்படியான தகுதிகளை எடுக்கலாம் எண்டுவா ஆச்சி.
இப்பிடித் தானாக வாற தகுதி எண்டான்னை இல்லாட்டில் தேடி எடுக்கிற தகுதி எண்டான்னை சாதி இன மத மொழி நிற பால் வயது நாடு எண்ட எல்லைகளை எல்லாம் கடந்தது. இப்படியான தகுதி உள்ளவையிட்டை ஆச்சி மேலே சொன்ன தகைமை, மதிப்பு, நல்லொழுக்கம் ,நடத்தை ,பெருமை,பொருத்தம், மேன்மை,பண்பு எண்ட எல்லாம் தாரளாமாய் இருக்கும். அப்படிக்கொத்த குணங்கள் உள்ளவைதான் சக மனுசனை மனுசனா பாக்கிற மனிசப் பண்பு உள்ளவையாயும் மனிச நேயம் உள்ளவையாயும் மனிதாபிமானம் உள்ளவையாயும் இருப்பினம் எண்டுவா ஆச்சி.
எங்களில சிலரிட்டை இப்பிடிக்கொத்த மனிசப் பண்பு சார்ந்த தகுதி எண்டது பணத்தால இல்லாட்டில் பட்டங்களாலை இல்லாட்டில் பதவிகளாலை கிடைக்குது எண்ட ஒரு அபிப்பிராயம் இருக்குது. ஆனால் எத்தனையோ பணக்கார்களிட்டை இல்லாட்டில் படிச்ச ஆக்களிட்டை இல்லாட்டில் பதவிகளிலை இருந்தவையிட்டை இருக்கிறவையிட்டை இப்படியான மனிசப் பண்பு இல்லாமை இருக்கிறதை அதாவது நாங்கள் எதிர்பார்க்கிற தகுதி இல்லாமை இருக்கிறதை நாங்கள் ஒவ்வொருநாளும் பாக்கிறம்.
எண்டபடியால மனிசப் பண்பு எனப்படும் மனித நேயம் இல்லாட்டில் மனிதாபிமானம் எண்ட தகுதி இல்லாத ஆக்களாலை தனி மனிசனாவோ இல்லாட்டில் சமூகமாகவோ தன்னும் சேர்ந்து வாழ ஏலாது.இப்பிடிக்கொத்த ஆக்களுக்கு தன்ரை சக மனிசனுக்கோ இல்லாட்டில் தன்ரை சமூகத்துக்கோ வழிகாட்டுறது எண்டது ஏலாத விஷயம் கண்டியளோ. எண்டபடியால அப்படிக்கொத்த ஆக்களுக்கு சமூக அபிவிருத்தி பற்றியோ அரசியல் பற்றியோ ஆன்மிகம் பற்றியோ இலக்கியம் பற்றியோ பேசுறது எண்டது ஏலாத ஒண்டா இருக்கும் எண்டது என்ரை அபிப்பிராயம் கண்டியளோ .சரி ..சரி இப்ப இதை எல்லாம் எழுதுதிறதுக்கு எனக்கு என்ன தகுதி இருக்குது எண்ட ஐமிச்சம் இப்ப உங்களில கன பேருக்கு வந்திருக்கும
![]()
