குளிர்விட்டுப் போச்சு!
– மாதவி, யேர்மனி (Germany)
24.12.2025
நேற்று நத்தார் பண்டிகைக்கு முதல் நாள். வீட்டில் கேக் (Cake) கொஞ்சம் செய்வோம் என்று மனுஷி சொன்னா. செய்ததெல்லாம் பேரப்பிள்ளைகள் முடிச்சுப் போட்டினம் என்று புழுகத்திலே, “இன்னும் செய்வோம்” என்றா.
செய்யத் தொடங்கினால் முட்டை இரண்டு பத்தாது. என்னை விட்டு துரத்தினா. “கடை பூட்டப் போகுது, நான்கு மணிக்கு! ஓடுங்கோ, ஓடுங்கோ!” எண்டு.
காரில் (car) போனாலும் பார்க்கிங்கில் (Parking) விட்டு கடைக்கு கொஞ்சம் நடக்கத்தான் வேண்டும். சரியான குளிர்; காத்து வேறு அடிக்க, கை கால் எல்லாம் விறைத்தபடி. வயது போகப் போக குளிர் கூடும் என்பார்கள்.அது உண்மைதான்.
எங்கட அம்மா 93 வயது வரை வாழ்ந்தா. அவ சொல்லுவா, “விருப்பமானதை செய்தால் எதுவுமே தெரியாது” என்று. எனக்கோ கேக் அடிப்பது மனுஷி என்றாலும், அதில் பாதி வேலை நான் செய்வதாலும், அவ நொட்டை வேறு சொல்வதால் அந்த வேலை அறவே பிடிக்காது. இப்ப குளிர் எப்படி எனக்கு விறைப்பு தரும் என்பது உங்களுக்கு புரிஞ்சிருக்கும்.
கடை பூட்டுமுன் முட்டை வாங்கிவிட்டு கார் நோக்கி வந்தேன். வரும் வழியில் தெருவில், நடைபாதையை மக்கள் மட்டும் பாவிக்க,வாகனங்கள் போகமுடியாமல் அதற்கு ஏதுவாக பல இரும்புத் தூண்கள் நடப்பட்டிருந்தன.
அந்த இரும்புத் தூண் ஒரு முறை என் மகன் பாதையில் பார்க்காமல் சென்றபோது தலையில் அடித்த சம்பவமும் மனத்திரையில் வந்து போனது.
அந்த தூண் அருகில், ஒரு வயதான மூதாட்டி வீல் செயர் (Wheelchair) இருந்து, அந்தத் தூணை ஒரு பொம்மை போல சுவெட்டர் (Sweater) பின்னி அலங்கரித்தவாறு இருந்தா. அருகில் சென்று பார்த்தேன். வீட்டில் தாயார் செய்து கொண்டு வந்த அந்தச் சுவெட்டரை ஒரு நத்தார் பாப்பா போல, அந்தத் தூணில் பொருத்தியபடி இருந்தா.
“பயங்கரக் குளிர்! இதற்குள் உங்களுக்கு இப்படி அலங்கரிக்க நடுங்கவில்லையா?” என்றேன்.
“நடுங்கும்… இனி எங்களுக்கு நடுங்காது என்றா?” என்றா.
எனக்கு பொம்மையாகத் தெரிந்தது, மூதாட்டிக்கு உயிருள்ள நத்தார் பாப்பாவாக,அதனோடு ஒன்றிப் போயிருந்தா. எனக்கும் கொஞ்சம் இரசனை இதில் இருப்பதால், வீட்டுக்குப் போவதை மறந்து, மூதாட்டியை இரசித்தவண்ணம் நின்றேன். எனக்கும் இப்போ குளிர் விட்டுப் போச்சு.
அம்மா சொன்னது ஞாபகம் வந்தது. விருப்பமானதை செய்யும்போது வெளியே உள்ள அனைத்தையும் எமது புலன் புறந்தள்ளும். எவ்வளவு உண்மை!
கடைசியாக மூதாட்டி சொன்னதையும் சொல்கிறேன்.
“இந்த அலங்காரம் தூணுக்கு மட்டும் அல்ல என் பேரக்குழந்தைகளுக்கும்தான்.அவர்கள் நடைபாதையில் எதையும் பார்க்காமல் ஓடுவார்கள். இப்படி அலங்கரித்து விட்டால், கட்டாயம் பார்ப்பார்கள்; தூணோடு மோதாமலும் நடப்பார்கள். மோதினாலும் அந்தத் தூண்கள் குழந்தைகளை மென்மையாக மட்டுமே முட்டும் முத்தமிடும் ”
“ஒரு படம் எடுக்கவா?” என்றேன்.
தன்னையும் சீர்படுத்திக்கொண்டு, தான் அலங்கரித்த பொம்மையையும் சீராக்கியபடி, இருவருமாக படம் எடுக்கப் போஸ் (Pழளந) கொடுத்தார்கள்.
![]()
