14 வயது சிறுவன் பிரஜித் நவனீதனின் வாய்ப்பாட்டு அரங்கேற்றம்இசை ரசிகர்களை மெய்மறக்கச் செய்த சிறப்புநிகழ்வு
Stoke-on-Trent இங்கிலாந்து 03.01.2026
14 வயது சிறுவன் செல்வன் ழூழூபிரஜித் நவனீதன்ழூழூ அவர்களின் வாய்ப்பாட்டு அரங்கேற்றம், கடந்த சனிக்கிழமை (03.01.2026) இங்கிலாந்தின் Stoke-on-Trent நகரில் அமைந்துள்ள Mitchell Arts Centre-இல் மிகுந்த சிறப்புடனும் கலைநயத்துடனும் நடைபெற்றது.விழா, சண்முகப்பிரதாபன் குருக்களின் பூஜை ஆராதனையுடன் பக்திபூர்வமாக ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து அவை வணக்கம் நடைபெற்று, நிகழ்ச்சிகள் ஒழுங்குமுறையுடனும் கலையுணர்வோடும் முன்னேறின.
இவ்விழாவின் பிரதம விருந்தினராக சோமசுந்தர தேசிகர் அவர்களும், சிறப்பு விருந்தினராக சுஜாதா சதீஷ் அவர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.“சங்கீத ரத்னா” விருது பெற்ற குரு திருமதி கஜேந்தினி சுபாஷ் அவர்களை குருவாகக் கொண்டுள்ள பிரஜித், உண்மையிலேயே கொடுத்து வைத்த மாணவன் எனக் கூறலாம். சிறந்த குருவும், சிறந்த மாணவரும் இணையும் போது உருவாகும் கலைச் சிறப்பு, இவ்வரங்கேற்றத்தில் தெளிவாக வெளிப்பட்டது.
“மாதா, பிதா, குரு, தெய்வம்” என்ற சொல்லுக்கேற்ப, மாதா–பிதாவான திரு. திருமதி நவனீதன் ரஜீவி அவர்கள், தங்கள் மகனை தமிழும் கலையும் இணைந்து வளர்த்தமைக்காக பாராட்டுக்குரியவர்களாகத் திகழ்கிறார்கள். அந்தச் சிறந்த வளர்ப்பின் விளைவாகவே, சங்கீதம் பிரஜித்தின் நாவில் இயல்பாகப் பொங்கி வெளிப்படுகிறது என இசை ரசிகர்கள் கருத்துத் தெரிவித்தனர்.ஒரு சிறந்த கலைஞனின் பயணத்தில் தெய்வீக சக்தி எப்போதும் அருகிலேயே இருப்பதாகக் கூறப்படுவது போல, பிரஜித்தின் இசை நிகழ்ச்சியும் அந்த உணர்வை மேடையில் உணர்த்தியது.
புலம்பெயர் தமிழர்கள் மத்தியில், பிள்ளைகள் கலைகளையும் கல்வியையும் சமநிலையாக முன்னெடுத்துச் செல்லும் மனப்போக்கு இன்று வலுப்பெற்று வருவதை இத்தகைய அரங்கேற்றங்கள் உறுதிப்படுத்துகின்றன. எமது தாயகத்தில் ஒருகாலத்தில் கலைகளில் ஈடுபட்டால் கல்வி பாதிக்கப்படும் என்ற எண்ணம் நிலவியிருந்த நிலையில், தற்போதைய மாற்றம் குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது.
இதற்காக அனைத்து பெற்றோர்களின் பங்களிப்பையும் பாராட்ட வேண்டிய தருணமாக இவ்விழா அமைந்தது. நிகழ்ச்சியின் நடுவே கலைஞர்கள், ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் இனங்கண்டு கௌரவிக்கப்பட்டமை, விழாவின் மற்றொரு முக்கிய சிறப்பாகக் காணப்பட்டது. இந்நிகழ்ச்சியை மெய்வெளி முகாமையாளர் மற்றும் அறிவிப்பாளரான திருமதி பிரேமலதா சாம் அவர்கள், செம்மையான தமிழில், அளவோடும் நேர்த்தியோடும் தொகுத்து வழங்கி, விழாவிற்கு மேலும் மெருகூட்டினார்.மொத்தத்தில், இவ்வாய்ப்பாட்டு அரங்கேற்றம் இசை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த ஒரு கலை நிகழ்வாக அமைந்தது. செய்தி. நவநிதி
![]()
