புதியன விரும்பு!
புதியன விரும்பல் என்னும் திறந்த மனம் இருந்தாலே,
செல்ல வேண்டிய தூரம் அதிகம் என்று தெரியும்.
கலாசூரி திவ்யா சுஜேன்
“சென்றது இனி மீளாது; மூடரே,நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலை எனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்; சென்றதனைக்குறித்தல் வேண்டர்
இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்!”
இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று தினமும் காலையில் கண் விழித்ததும் உள்ளத்தில் உறுதி பூண்டால் அன்றைய நாள் முழுவதும் ஆனந்தம் நிறைந்திருப்பதை உணர்வது நிச்சயம்.
இந்த வாழ்வு இன்ப துன்பங்களால் நிறைந்தது. ஏற்றமும் இறக்கமும் அதன் தன்மை. உறவுவென்று உள்ளன்பு கொண்டோரும் ஒரு நொடியில் உடைத்துவிட்டு போகும் நிச்சயமற்ற தன்மைகள் நிறைந்த வாழ்வு, மனித மனங்களை மதிக்காத மாசு படிந்தோர் கூட்டத்தில் நாமும் பொம்மைகளாக வேண்டிய நிலையும் வரலாம். எது வரினும், சென்றது இனி மீளாது. அது தான் பேருண்மை. இந்த கணமும் அடுத்த கணமும் ஒன்றில்லை. ஆதலினால் இறந்த காலத் தில் நிகழ்ந்தவற்றை நிகழ்காலத்தில் நினைத்து வருந்தி எதிர்காலத்தை தொலைப்பது முட்டாள் தானம் என்று நோன்றாண்டுக்கு முன்பே பாரதி அடித்துரைத்தும் இன்று வரை நாம் அல்லல் படுவது அவசியம் தானா ?
தன் உள்ளும் புறமும் உள்ளவற்றை புதிதாய்ப் பார்க்கும் புதியன விரும்பியாக பாரதி வாழ்ந்திருக்கிறார். காணுகின்ற காட்சியெல்லாம் புதிது என்று இயற்க்கையின் வனப்பை தினமும் புதிதாகப் பருகினார்.
சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொல்புதிது, சோதி மிக்க நவகவிதை எந்நாளும் அழியாத மகா கவிதை படைத்தார். கவிதை உலகிற்கு புதுமை சேர்த்தார். புதிய ஆத்திச்சூடி, புதிய கோணங்கி, புதிய ரஷ்யா என தன் கவிதைத் தலைப்பிலேயே புதியன வேண்டினார். கவிதை உலகிற்கு புது வடிவில் பழைய பாடுபொருளையும், பழைய வடிவில் புதிய பாடுபொருளையும், புதிய வடிவில் புதிய பாடுபொருளையும் என்று பாகுபடுத்தும் அளவு புதியன வெள்ளமெனப் பொழியச் செய்தார்.
புதிய ஆத்திச்சூடியில் வேதம் புதுமை செய் என்று சொன்னவர், அதனை நிகழ்த்தியும் காட்டினார். அதே போல புதிய ஆத்திச்சூடியில் புதியன விரும்பு என்று குறிப்பிட்டு இருப்பார். புதியன விரும்பல் என்னும் திறந்த மனம் இருந்தாலே, செல்ல வேண்டிய தூரம் அதிகம் என்று தெரியும். பல விடயங்களைக் கற்று அறியவும் துணிவோம். சமகாலத்தில் கிடைக்கப்பெற்ற புதிய கண்டுபிடிப்புகளை நாமும் அறிய முயல்வோம். அதன் பயன் அறிவோம்.
புதிய ஆத்திச்சூடியில் உள்ள அடிகளை வாழ்வின் ஆதாரமாகக் கொண்டு வாழ்ந்தாலே இவ்வாழ்வு அர்த்தப்படும்.புது வினை செய்ய வேண்டும், புதிய மனிதர்கள் உருவாக வேண்டும், புதிய உலகம் படைக்க வேண்டும், புது கல்வி, புது அறிவு, புது நூல்கள், புது சிந்தனை என்று மனிதனின் அன்றாட வாழ்வின் செயல்கள் முதல் அரசியல் வரை அனைத்திலும் புதுமை வேண்டியவர்.
சாதிகள் சேருது சண்டைகள் தொலையுது
தரித்திரம் போகுது செல்வம் வருகுது
படிப்பு வளருது ; பாவம் தொலையுது
சாத்திரம் வளருது; சூத்திரம் தெரியுது
இயந்திரம் பெருகுது; தந்திரம் வளருது
பயம் தொலையுது ; பாவம் தொலையுது
நேத்திரம் திறக்குது ; நியாயம் தெரியுது
தர்மம் பெருகுது என்று புதிய கோணங்கி முழங்குகிறான்
அத்தனைக்கும் மேலாய் நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும் கொண்டு பழைய மரபின் மீது கண்டனக் கணை பாச்சும் சேற்றிலே புதிதாக முளைத்ததோர் செய்ய தாமரைத் தேமலர் போலோளியுடன் தோன்றிய புதுமைப் பெண்ணைப் படைக்கிறார்.தான் பிறந்த நாட்டோடு, ஒரு குறிகிய வட்டத்துக்குள் நிற்காமல், நாற்றிசை நாடுகள் யாவும் சென்று புதுமையைக் கொணர்ச் சொல்கிறார்.
உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்,
ஓது பற்பல நூல்வகை கற்கவும்,
இலகு சீருடை நாற்றிசை நாடுகள்
யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே
திலக வாணுத லார்நங்கள் பாரத
தேசமோங்க உழைத்திடல் வெண்டுமாம்;
புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும் இவுலகை மாற்றும் மந்திரமாக வேண்டும்.இவ்வுலகை மாற்றி புதுமையுறச் செய்ய வேண்டும், இங்கு கொட்டிக்கிடக்கும் குப்பைகள் அகற்றப் பட வேண்டும். இங்குள்ள மனிதர்கள் அமரர்களாக வேண்டும். அமர வாழ்க்கை எய்த வேண்டும். அனைத்து உயிர்களுக்குள்ளும் ஆனந்தம் நிலவ வேண்டும்.
போற்றி,போற்றி!ஜயஜய போற்றி!இப்
புதுமைப் பெண்ணொளி வாழிபல் லாண்டிங்கே!
மாற்றி வையம் புதுமை யுறச்செய்து
மனிதர் தம்மை அமர்க ளாக்கவே
ஆற்றல் கொண்ட பராசக்தி யன்னைநல்
அருளி நாலொரு கன்னிகை யாகியே
தேற்றி உண்மைகள் கூறிட வந்திட்டாள்
செல்வம் யாவினும் மேற்செல்வம் எய்தினோம்.
ஆகையினால்,புதிய சித்தரைப் புத்தாண்டில் புதியன விரும்பியாக நாமும் மாறுவோம். புத்தொளி வீசப் புத்துயிர் பெறுவோம்.
![]()
