பயணம்

0
vm414


-கவிதா லட்சுமி நோர்வே

மிக நீண்டதொரு கவிதையாக. முற்றுப்புள்ளியில்லா வார்த்தை போல,அநாதியான,பெரும் போதையாகும்… இப்படியாக, கவித்துவமானதொரு சொல்லைச் சொல் என்றால், பயணம் என்பேன்.

தினசரி வழக்கங்களில் இருந்து, தப்பித்தற்காலம் என்பது எனக்குப் பயணங்கள்தான். இக் காலங்கள் மாத்திரமே எமது நேரங்களை எமக்காக மட்டுமாய் விட்டுத்தருகிறது. நான் எனக்கான பயணங்களை மேற்கொள்வது என்பது அத்தனை இலகுவானதல்ல.

முக்கியமாக என்காலத்துப் பெண்கள் தமக்கான பயணங்கள் என்ற ஒரு பதம் இருப்பதையே அறிந்திருப்பதில்லை. இக்காலத்து பெண்களும்தான், சில ஆண்களும்தான். தமக்கான பயணத்தை அநுபவிக்காதவர்கள் தனிப்பெருஞ் செல்வங்களில் ஒன்றை இழந்துவிட்டவர்கள் என்று எழுத்தில் சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.

அதற்காக, பாடசாலைப் பயணங்களையோ, குடும்பத்தோடு, நண்பர்களோடு, மேலும் இன்ன பல பயணங்களையோ குறைத்து மதிப்பிடுவதற்கில்லை.

இருப்புக்காக ஓடி, உழைத்து, சமைத்து, உண்டு, குழந்தை வளர்த்து, உடமைகள் சேர்த்து, சிறுகதை பேசி, உறங்கி, செல்லாக் கனவுகள் கண்டு விழிக்கையில்.. மீண்டும் ஓடி, உழைத்து… இப்படி இப்படி இப்படியே.. செல்லும் காலங்களைக் கொஞ்சம் நிறுத்தி உலகை வேறு கோணங்களில் என்னைப் பார்க்க வைப்பது எனக்கான எனது பயணங்கள்தான்.

உலகம் எத்தனை விரிந்தது என்பதை காட்டும் பயணங்கள், இவ்வுலகில் மனிதர்கள் எத்தனை சிறியவர்கள் என்பதையும் உணர்த்தும். பெரிதுயர்ந்த மலையில் ஒரு மண்துகள் போல. அல்லது அதன் அணுக்கள் போல.
இந்த மண் துகள்களுக்குத்தான் எத்தனை பூதாகரமான தினசரிகள், பிரச்சனைகள், இழப்புகள், மோதல்கள், பிரிவுகள் அதனதன் விளைவுகள். அன்றாட வாழ்க்கையில் எதுவும் அருகில் இருந்து காணும் போதுதான் கண்மறைக்கும் அளவு அத்தனை பெரியதாய்த் தோன்றும். தூரம் எதையும் தூசினைப் போலாக்கிவிடும்.
ஓவ்வொரு வருடமும் (சில வருடங்களாக) எனக்கான பயணத்திற்கான நாட்களை நான் தீர்மானித்துவிடுவதுண்டு. இந்தப் பயணங்கள் எனக்கானது. நான் விரும்புவதை செய்வது. என்னை எவரும், எதுவும் இடறல் செய்யாத காலங்களைப் பெறுவது. இப்படியான பயணங்களை மேற்கொள்ளும் தருணங்களின் போதெல்லாம், என்னை நோக்கி வீசப்படும் கேள்விகள் பல.

“ஏன் போகிறாய்?”
“தனியாகப் போகிறாயா?”
“தமிழ் ஆட்கள் இல்லாமல் போகிறாயா?”
“நண்பர்கள் வரவில்லையா?”
“பிள்ளையை விட்டுச் செல்கிறாயா?”
இப்படியாக, அம்மா தொடங்கி, நட்பு வட்டாரங்கள் வரை பலபல கேள்விகளைச் சந்திப்பது எதுவும் புதிதல்ல. இதன் பின்னால் இருப்பதெல்லாம், பெண்ணாக இருக்கும் நீ எங்கே தனியாகப் போகிறாய் என்பது மட்டுமல்ல, குடும்பதைப் பார்ப்தைவிட ஒரு பெண்ணுக்கு வேறு பரவசம் இருக்கிறதா என்பதுதான். தமக்கான பயணங்கள் கூட ஆண்களுக்குச் சாதகமானதுதான்.
இருந்தும், இவைகளை, எதையும் பொருட்படுத்துவதற்கில்லை என்பதே இன்றுவரை எனது பயணங்களைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது.

இத்தாலி (2025): வெனிஸ் கால்வாய்களின் இடையே நடந்தபோதும், டஸ்கானியின் இயற்கைச் சுடுநீரில் கிடந்த போதும், பெரும் கோட்டைகளைத் தாங்கி நிற்கும் பொற்குன்றுகளைப் பார்த்தபோதும், நாபோலியின் உயிர் நிறைந்த தெருக்களில் அலைந்தபோதும், பொம்பேயின் எரிந்து போன பெருநகரத்தைக் கண்டபோதும்,ரோமா புரியின் எழுச்சியைக் கண்டு மலைத்து நின்ற போதும்தான் – 2025ற்கான எனது காலத்தை நான் கையில் வைத்திருந்தேன்.

உலகம் எவ்வளவு விரிந்தது என்பதையும், ஒவ்வொரு நகரமும், ஒவ்வொரு பாதையும் எப்படிக் கண்ணாடியாக மாறுகிறது என்பதையும் பயணங்கள் பேசுகிறது.
பயணம் என்பது,வழக்கமான நாட்களில் இருந்து தப்பிப்பதும்தான், தன்னையே தான் சந்தித்துக் கொள்வதற்கானதொரு சந்தர்ப்பமும்தான்.

சில பயணங்கள் சிந்தனைகளை மாற்றும்.
சில பயணங்கள் எம்மையே மாற்றும்.
மீண்டும் புறப்படவேண்டும்!

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *