யேர்மனியில் சர்வதேச பெண்கள் தின விழா:சாதனைப் பெண்களின் சரித்திரம் பகிரப்பட்ட உன்னத நிகழ்வு

0
vm417

யேர்மனி ஃடோர்ட்முண்ட்:08.03.2026.
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு, யேர்மனியின் டோர்ட்முண்ட் நகரில் அமைந்துள்ள “தமிழர் அரங்கத்தில்” சர்வதேச பெண்கள் தினம் மிகச் சிறப்பாக 08.03.2026 அன்று நடைபெற்றது. டோர்ட்முண்ட் பெண்கள் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட இவ்விழா, பெண்கள் மத்தியில் விழிப்புணர்வையும் எழுச்சியையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. நிகழ்வில் பெண்களின் சமூகப் பார்வை, மற்றும் விழிப்புணர்வு தொடர்பான பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.குறிப்பாக, உலகளவில் மாற்றத்தை ஏற்படுத்திய சாதனைப் பெண்களின் முன்மாதிரிகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. அந்த வகையில், சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்ற பெண்மணிகள் குறித்து பின்வரும் தலைப்புகளில் விளக்கக்காட்சிகள் இடம்பெற்றன:

  • மிதுலா: ஜோடி வில்லியம்ஸ் பற்றிய பகிர்வு,
  • யோகா: அன்னை தெரசா அவர்களின் அர்ப்பணிப்பு
  • மல்லிகா: தவக்குள் கர்மான் குறித்த உரை
  • பிரியா: எமலி கிரீன் பால்ச் பற்றிய தகவல்கள்
  • தயா: வாங்காரி மதாய் அவர்களின் சூழலியல் போர்
  • குமுதா: ஆங்சான் சூச்சி பற்றிய பார்வை
  • ராஜி: நாதியா முராத் அவர்களின் துணிச்சல்

இதனையடுத்து,இளம் பெண்களினால் மேடையேற்றப்பட்ட விசேட நிகழ்ச்சி ஒன்றில், “காதல்” என்பதன் பன்முகத்தன்மை மற்றும் அது பெண்கள் மீது ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து ஆழமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இவ்விழாவின் மற்றுமொரு சிறப்பம்சமாக, ‘வெற்றிமணி’ பத்திரிகை ஆண்டுதோறும் சாதனைப் பெண் ஒருவரை கௌரவித்து வருகிறது, இந்த ஆண்டு நோர்வேயில் வசிக்கும் பிரபல ஒளிப்படக் கலைஞர் திருமதி கீதா இரவி அவர்கள் வெற்றிமணியின் கௌரவ ஆசிரியராகத் தெரிவு செய்யப்பட்டு வெற்றிமணி பத்திரிகை கௌரவித்தது. அவரது ஒளிப்படங்கள் திரையிடப்பட்டதுடன், விருது பெற்ற அவரது படைப்புகள் குறித்து வெற்றிமணி ஆசிரியர் விபரித்தார். “எம் சமூகத்தில் இத்தகைய சாதனையாளர்கள் வாழ்வது எமக்குக் பெருமிதம் அளிக்கிறது” என அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

கடந்த 2019ஆம் ஆண்டு வரை வெற்றிமணி நடத்தி வந்த சர்வதேச பெண்கள் தினம் நிகழ்வை, இன்று டோர்ட்முண்ட் பெண்கள் அமைப்பு இத்தகையதொரு நிகழ்வை பொறுப்பேற்று தொடர்ந்து நடாத்திட வாழ்த்தி மகிழும் வெற்றிமணி ஆசிரியர் அவர்களுக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் கலைநிதி சபேசன் அவர்கள் பெண் அமைப்பு சார்பாக தெரிவித்தார்.வெறுமனே பெண்களுக்கான தினமாக மட்டுமன்றி, பெருமளவிலான ஆண்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டமை ஆரோக்கியமான சமூக மாற்றத்தின் அடையாளமாகக் கருதப்பட்டது. ஆண்களை மையப்படுத்தி தர்க்கம் புரியாமல், பரஸ்பர புரிந்துணர்வுடன் பெண்களின் நிலைகளை உரையாடியது இவ்விழாவின் தனிச்சிறப்பாகும்.

மேலும் விழாவில் இரு குறும் படங்கள் திரையிடப்பட்டன. ஒன்று வி.சபேசன் அவர்களின் கதை, வசனம், எடிட்டிங், இசை. இயக்கத்தில் “வானம்” என்ற குறும்படம் இடம் பெற்றது. சிறிய கரு. ஆனால் ஆழமாக மனதில் பதியும் வண்ணம் எடுக்கப்பட்டு இருந்தது. அடுத்து சிவவினோபன் அவர்களின் இயக்கத்தில் யேர்மனியில் முதல் முறையாக யுஐ தொழில் நுட்பத்தில் முழுமையாக உருவாக்கிய, நடிகர்கள் நடித்து வெளியான குறும்படம் “பெண்மையன்” தொழில்நுட்பத்தின் புதிய ஆரம்பம். எதிர்காலத்தில் மேலும் சிறக்கும் என நம்பிக்கை தரும் குறும்படம்.
வந்திருந்த அனைவருக்கும் மதிய உணவு மற்றும் சிற்றுண்டிகள் அன்புடன் பரிமாறப்பட்டன. பார்வையாளர்கள் அனைவரும் நிகழ்வோடு ஒன்றிப்போகும் வகையில் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்த டோர்ட்முண்ட் பெண்கள் அமைப்பின் பணி பாராட்டுக்களைப் பெற்றுக்கொண்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *