குப்பை வாளியும் எங்கள் வாய்யும்;?
-மாதவி, யேர்மனி
எமது உடலுக்குத் தேவையான சக்தியைப் பெறுவதற்கு, எமது வாய்தான் உணவை ஏற்கும் இடமாக உள்ளது.
வாகனங்களுக்குச் சக்தி கொடுப்பதற்காக எரிபொருள் நிரப்பும் வாய் ஒன்று உள்ளது. அந்த வாயைத் திறந்தவுடன் உள்ளே ‘டீசல்’ அல்லது ‘பெற்றோல்’ என்று எழுதியிருக்கும். சில வாகனங்களில் அதன் வாய் சிறியதாக இருக்கும்.
நீங்கள் டீசல் அடிக்க வேண்டிய இடத்தில் பெற்றோலைத் தவறுதலாக அடிக்க முற்பட்டால், அந்தப் பம்பின் (Pump) தலைப்பகுதி நுழைய மாட்டாது. அதன் மூலம் எரிபொருளை மாற்றி நிரப்பாமல் நீங்கள் பாதுகாக்கப்படுவீர்கள்.
இந்தத் தொழில்நுட்பத்தை (Technology) மனிதன் கண்டுபிடித்தான். தூய்மையாக அதற்குத் தேவையானதை மட்டும் ஏற்றுக்கொள்வதற்காக ஒரு வாகனத்தின் வாயை அவன் அப்படி வடிவமைத்தான். ஆனால், அதே மனிதன் தன்னிலும் மேலான தொழில்நுட்பம் படைத்த இயற்கையின் உதவியுடன் உருவான தனது வாயை எப்படி எதிர்மறையாகப் பயன்படுத்துகிறான் பாருங்கள்!
வாய் என்பது எமக்குத் தேவையான போதுமான உணவை உட்கொள்வதற்காக உருவாக்கப்பட்டது. அது தேவையற்றவற்றைப் போடும் ஒரு குப்பைத் தொட்டியல்ல.
‘மெக்டொனால்ட்ஸ்’ (McDonald’s) உணவகத்திற்கு வெளியே ஒரு குப்பை வாளி (Dustbin) இருந்ததைக் கண்டபோது, மனிதர்களாகிய நாம் பல சமயங்களில் இந்தச் சாதாரண குப்பைகளை விட மேலான பல குப்பைகளை எமது வாய்க்குள் போட்டு நிரப்புகிறோமே என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. அதன் விளைவாகவே இதனைப் பகிர்கின்றேன்.
பாத்திரம் கழுவும்போது ஏற்படும் சோம்பேறித்தனத்தையும், அதே சமயம் உணவை வீணாக்கக் கூடாது என்ற எமது “அதி புத்திசாலித்தனமான” எண்ணத்தையும் சற்றுப் பாருங்கள்.
ஒருவர் பாத்திரம் கழுவிக் கொண்டிருப்பார். திடீரெனச் சட்டியில் ஒரு துண்டு கோழியிறைச்சியோ, உருளைக்கிழங்கோ அல்லது வெங்காயமோ ஒட்டியிருப்பதைப் பார்ப்பார். அதை எடுத்துச் சரியாகக் குப்பைத் தொட்டியில் போட இரண்டு அடி எடுத்து வைக்க வேண்டும். அதற்குச் சோம்பேறிப்பட்டு, சுற்றும் முற்றும் பார்த்துவிட்டுச் சட்டென்று அதைத் தன் வாய்க்குள் போட்டுக்கொள்வார்.
பாத்திரம் கழுவும் சோப்புத் தண்ணீர் அல்லது அழுக்குத் தண்ணீர் அவ்வுணவில் பட்டிருக்க வாய்ப்புள்ளதால், இதைச் செய்வது ஆரோக்கியமானதல்ல. ஆனால், நம்மில் பலர் சமையலறையில் தனியாக இருக்கும்போது இப்படிச் செய்திருப்போம் என்பதை மறுப்பதற்கில்லை.
சிலர் ஆசை ஆசையாகத் தனது பசிக்குத் தேவையான உணவைக் கோப்பையில் எடுத்துக் கொள்வார்கள். பாதி உண்ட பின் பசி அடங்கிவிடும். மீதியைக் குப்பை வாளியில் போட்டால் உணவு வீணாகிவிடும் என்ற கவலை வரும். அத்துடன் அம்மா சொல்லி வளர்த்த வசனம் கண்முன்னே விரியும்: “உணவைக் கொட்டக்கூடாது; எதியோப்பியாவில் (Ethiopia) ஒரு நேர உணவுக்கு அவர்கள் படும் பாட்டைப் பார். குழந்தைகள் எல்லாம் ஊதிய வயிறோடும், ஒட்டிய உடலோடும் இருப்பார்கள்” என்பதுதான் அது.
இன்று நாம் வேடிக்கையாகச் சொல்லலாம், “அவர்களுக்கு உணவு இல்லை என்பதற்காக நாம் அவர்களுக்கு ஏதும் உதவவில்லை ஆனால் எடுத்த உணவை அவர்களை நினைத்துக் கொட்டாமல், எங்கள் வயிற்றில் நிரப்பி நாம் இன்று பெருத்த வயிறோடும் தொந்தியுமோடும் இருக்கிறோம்” என்று.
அளவாக எடுத்து உண்ண வேண்டும் என்பதற்காகவே அம்மா அப்படிச் சொன்னார். நாம்தான் அதனைத் தவறாகப் புரிந்து கொண்டு, குப்பையில் போடாமல் விட்ட குற்றத்திற்காக எமது வாய்க்குள் போட்டு நிரப்புகிறோம்.
கேக் (cake) செய்பவர்கள் சிலரைப்; பாருங்கள்; அதில் பூசப்படும் சீனிப் பாகோ அல்லது பட்டரோ கையில் பட்டால் அல்லது மேசையில் விழுந்தால் அதனை அவர்கள் குப்பை வாளியில் போட மாட்டார்கள்;. நேராக வாயில் போடுவார்கள்.
சில அம்மாக்கள், “நான் சமைத்தால் எனக்கு உண்ண மனம் இருப்பதில்லை; யாராவது சமைத்துப் போட்டால் நன்றாகப் பசிக்கும்” என்று சொல்வார்கள். இதற்குப் பின்னாலுள்ள இரகசியம் இதுதான்: அவர்கள் சமைக்கும் போது அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒட்டியிருந்தது எல்லாம் குப்பை வாளிக்குள் போகாமல் அவர்களின் வாய்க்குள் விழுந்திருக்கும். அதுமட்டுமல்ல, ஒவ்வொரு உணவையும் சமைத்த பின் அதனை அழகான பாத்திரங்களில் (dish) எடுத்து வைப்பார்கள். அப்படி வைக்கும்போது சட்டியில் ஒட்டிக்கிடப்பதைத் தேய்த்து எடுத்து (சட்டி வளிப்பது ஒரு கலை, அதன் சுவையும் தனித்துவமானது), வீணாக்கக் கூடாது என்ற நோக்கில் தம் வயிற்றுக்குள் போட்டுவிடுவார்கள். அதனால் அவர்களுக்குப் பின்னர் பசி எடுப்பதில்லை. இவ்வாறு எமது வாய் எமது சோம்பல்களால் குப்பைத் தொட்டியாக மாறுகிறது.இது கல்வியறிவில்லாதவர்கள் செய்யும் செயல் மட்டும் அல்ல. பெரும் அறிஞர்கள் எனச் சமூகத்தில் போற்றப்படுபவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.
ஒரு உணவகத்தில் எனக்கு முன்னால் அமர்ந்திருந்த ஒருவர் உணவுண்டு முடித்து நீர் அருந்தினார். சற்று நேரத்தில் குடத்தில் தண்ணீர் குலுக்குவது போன்ற ஒரு சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தால், அவர் வாயில் நீரை ஊற்றிக் கொப்பளித்துக் கொண்டிருந்தார். சரி, அவர் வாயைக் கொப்பளிக்கிறார், எழுந்து போய் வெளியில் துப்புவார் என்று பார்த்தால், குடத்தில் குலுங்கிய சத்தம் நின்றது.
அவர் கொப்பளித்த நீரை அப்படியே விழுங்கிவிட்டார்! அவரைப் பொறுத்தவரை வாய் என்பது ஒரு பாத்திரம். இறுதியில் சோறும் ரசமும் சேர்த்து உறிஞ்சிக் குடிப்பது போல அவர் அதைச் செய்தார். அதைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்குச் சற்று குமட்டலாகவே இருந்தது.
இப்படி “எமது வாய் தானே” எனப் பல சந்தர்ப்பங்களில் அதனை நாம் குப்பை வாளியாகப் பயன்படுத்துகின்றோம். இனிக் குப்பை வாளியைப் பார்க்கும் போதெல்லாம் உங்கள் வாயின் நினைவு வரட்டும்.
உணவை வீணடிக்காதீர்கள். அதற்கு அளவோடு எடுத்து உண்ணுங்கள். எடுத்துவிட்டோமே என்பதற்காகவோ அல்லது சுத்தம் செய்யும் வேலை அதிகம் என்பதற்காகவோ வாயைக் குப்பை வாளியாக்க வேண்டாம். உணவு சமைப்பது ஒரு கலை என்றால் அதனைப் பரிமாறுவதும் ஒரு கலை. ஓவ்வொருவருக்கும் எது தேவை எது நல்லது என அறிந்து பரிமாறுவது அந்தக்கலையின் மகத்துவம். எமது வாழ்வில் அழிந்து வரும் கலைகளில் பரிமாறும் கலையும் ஒன்று. குறிப்பாகத் திருமண வீடுகளில் இக்கலையை இன்று முற்றாகக் காண முடியவில்லை.
![]()
