நீளிரா‘வைச் செதுக்கியவர்!
ஒளிப்பதிவாளர் பிரதீபன் செல்வரத்னம்!
தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக திரையிடப்பட்டுக் கொண்டிருக்கும் சோமீதரனின் ‘நீளிரா‘ திரைப்படத்தில் அனைவரும் பாராட்டிய சில விடயங்களில் முக்கியமானது ‘ஒளிப்பதிவு‘. அப்படியே 80களில் ஈழத்தை தத்ரூபமாக கண் முன் கொண்டு வந்த கமெராக்கண்களின் சொந்தக்காரன் பிரதீபன் இலங்கையைச் சேர்ந்தவர் என்பது கூடுதல் சிறப்பு. ஜாம்பவான் இயக்குநர் பாலுமகேந்திராவுக்குப் பின்னர் புனே திரைப்படக்கல்லூரியில் பயின்ற நம்மவர்.‘‘யாரோ இந்திய ஒளிப்பதிவாளர் தான் இந்தப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருப்பார் என நாங்கள் நினைத்திருந்தோம். அதுவும் இலங்கையர் எனும் போது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது‘‘ என ‘நீளிரா‘ படக்குழுவுடன் யாழ்ப்பாண சிறப்புத் திரையிடலைப் பார்த்த பலரும் பிரதீபனைப் பாராட்டியிருந்தார்கள். ஏற்கனவே ‘ஈழத்தின் வெந்து தணிந்தது காடு‘ திரைப்படத்தில் ஐபோனில் சாகசம் படைத்திருந்த ஒளிப்பதிவாளர் பிரதீபன், ‘நீளிரா‘வில் கமெராவுடன் கதகளி ஆடியிருக்கின்றார். ‘நீளிரா‘வைப் பாராட்டிய ஒவ்வொரு விமர்சகரும் ஒளிப்பதிவைப் பாராட்டத் தவறவில்லை என்பது பிரதீபனின் திறமைக்குச் சான்று!
அஜித்தின் புதிய முடிவு
அஜித்தின் 64ஆவது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவதில் எந்தவித மாற்றமும் இல்லையாம். ஆனால் சொந்தமாக படத்தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் அந்த படத்தை அஜித்குமார் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இணைந்து தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான முதற்கட்ட வேலைகள் தற்போது நடந்து வருகின்றன . இதன் படப்பிடிப்பு வரும் மே மாதம் தொடங்க உள்ளதாகவும், மலையாள முன்னணி நடிகர் மோகன்லால் மற்றும் ஸ்ரீலீலா முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இனிமேல் மாதத்தில் 15 நாட்கள் கார் ரேஸிலும், 15 நாட்கள் படப்பிடிப்பிலும் அஜித்குமார் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது.
ரஜினியின் 173 க்கு மீண்டும் சிக்கல்
கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்க இருந்த அவரின் 173ஆவது படத்தை இயக்க முதலில் சுந்தர்.சி ஒப்பந்தம் ஆனார். ஆனால், சில கருத்து வேறுபாடுகள், சில பிரச்சினைகள் காரணமாக அவர் விலகினார். ஆனால், அவரோ அடுத்த படங்களில் பிஸியாக இருந்ததால் ரஜினி படத்தை இயக்க முடியவில்லை என்றார். அடுத்து சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி ஒப்பந்தம் ஆனார். 2ஆவது படமே, ரஜினி படமா என்று பலர் ஆச்சரியப்பட்டனர். அவரும் அந்த படத்துக்கான வேலைகளில் பரபரப்பானார். சில மாதங்களில் அந்த படம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்போது அவரும் அந்த படத்தில் இருந்து விலகப்போகிறார். ஏற்கனவே ரஜினிக்கு கதை சொல்லி அசத்திய அஸ்வத் மாரிமுத்து இயக்கப்போகிறார். இதற்கு காரணம், சிபி சக்ரவர்த்தியின் முந்தையஒப்பந்தம் . அவர் ஒரு தெலுங்கு படம் இயக்க முற்பணம் வாங்கியிருக்கிறார். அந்த படத்தை விட்டுத்தான் ரஜினி படத்துக்கு வந்தார். அந்த நிறுவனம் செக் வைக்க, முற்பணம் மற்றும் அந்த படத்துக்கான செலவுகளை திருப்பி கேட்க, வேறு வழியின்றி ரஜினி படத்தை விட்டு, அந்த நிறுவனத்துக்கே படம் பண்ணப்போகிறார் என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது. இது குறித்த சிபி சக்ரவர்த்தியோ, கமல் நிறுவனமோ எதுவும் சொல்லவில்லை. ஆனால், விரைவில் இயக்குநர் மாற வாய்ப்புள்ளது
எப்படித் திருப்பிக் கொடுப்பது?
சினிமாவில் 21 ஆண்டுகளைக் கடந்திருக்கும் நிலையில், டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தமன்னா, ‘‘எனது அனைத்து படங்களும் ஒவ்வொன்றாக வெளியாக இருப்பதை நினைத்து உற்சாகமாக இருக்கிறேன். சினிமாவுக்கு வந்து 21 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், ஒவ்வொரு முறையும் மீண்டும் புதிதாகத் தொடங்குவது போலவே உணர்கிறேன்.இந்தி சினிமாவாகட்டும் தென்னிந்திய சினிமாவாகட்டும் எனக்கு ரசிகர்களிடமிருந்து நிறைய அன்பு கிடைத்திருக்கிறது. அதை எப்படி திருப்பி கொடுப்பது என்பதுதான் தினமும் யோசிப்பேன். நல்ல படங்கள் மூலமாக அதை திரும்ப வழங்கி வருகிறேன். என்றார்.
![]()
