மனைவி கட்டிக்கொடுத்த சோறு

0
vm435

— இரசிகமணி கனக. செந்திநாதன் —

காங்கேசன்துறையிலிருந்து மாலை ஆறு மணிக்குக் கொழும்பு நோக்கிச் செல்லும் புகையிரதம் புறப்படுகிறது. அதன் சத்தம் மாவிட்டபுரம்வரை கேட்கிறது. லீவுக்கு வந்து மனைவியோடு நெடுநேரம் பேசிக்கொண்டிருந்த கந்தசாமி அவசரம் அவசரமாக வருகிறார். புகையிரதம் மாவிட்டபுரத்தில் தங்கிப் புறப்படுகிறது. ‘காட்’ தன் ஊதுகுழலை ஊதிவிட்டார். நல்ல காலம்! கந்தசாமி ரிக்கற் எடுத்து ஒரு படி ஏறிவிட்டார்.

புகையிரதம் எட்டு மணியளவில் ஆனையிறவைத் தாண்டுகிறது. பல பிரச்சனைகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த பிரயாணிகளுக்குப் பசி வயிற்றைக் கிள்ளுகிறது. எல்லோரும் உணவுப் பார்சல்களை அவிழ்க்கிறார்கள். கந்தசாமியின் நண்பர்களும் அவிழ்க்கிறார்கள். சிலர் இடியப்பம், சிலர் இட்லி, சிலர் பாண் வாழைப்பழம். கந்தசாமியின் பார்சலில் சோறு. மனைவி அன்பாகக் கட்டிக்கொடுத்த சோறு. அதைக் கண்ட நண்பரொருவர் அவனுக்கென்ன! மனைவியிருக்கிறாள். சோறு கட்டிக் கொடுத்திருக்கிறாள். நமக்கு ஆர்? என்று பெருமூச்சு விடுகிறான். இன்னொருவன் புகையிரதப் பிரயாணத்துக்குச் சோறு ஒத்துக்கொள்ளாது இதோ இடியப்பம் இருக்கிறது வா சாப்பிடலாம் என்கிறான்.
கந்தசாமிக்குப் புகையிரதத்தில் ஏறிய ஞாபகம் வருகிறது. சோற்றுப் பார்சலைத் தான் மறந்துவிட மனைவி பாதிவழி வந்து கூப்பிட்டு அன்போடு கொடுத்த ஞாபகம் வருகிறது. அவர் சொல்கிறார். இது வெறும் சோற்றுப் பார்சல் அல்லத் தம்பி. இதற்குள் மனைவியின் அன்பு இருக்கிறது. அவளது தூய இருதயப் பண்பு இருக்கிறது. இதைச் சோறு என்று நீ நினைக்கலாம். ஆனால் நான் இதைத் தேவர்களது அமிழ்தத்திலுங் மேலாக மதிக்கிறேன்.

“ஊது குழற் சத்தம் கேட்டு அவதிப்பட்டு
ஓடி வருகையிலே – இது
பாதி வழிவந்து தாமரைக் கைதந்த
பச்சை அமிழ்தம் ஐயா.”

மனைவியென்று கூறாமல் தாமரைக்கை என்ற சொல்லால் குறிப்பாகக் காட்டியிருப்பதும் ‘பச்சை அமிழ்தம்’ என அழுத்தம் கொடுத்திருப்பதும் இப் பாடலை உயர்த்துகின்றது. ‘ஊதுகுழல் சத்தம்கேட்டு அவதிப்பட்டு ஓடி வருகையிலே’ என்ற ஒரு வரிக்குள்ளே கவிஞர் எத்தனையோ அரிய காட்சிகளை நம் மனக்கண் நிறுத்துவது அருமையாயிருக்கின்றது.

கந்தசாமி அதோடு விட்டாரா? இந்தச் சோற்றுக்குள்ளே நீ பல கறிவகைகளைத்தான் பார்க்கிறாய். ஆனால் அதற்குமேல் வேறு பல பண்டங்களும் இருக்கின்றன. அது உனக்குத் தெரியாது. இதில் மனைவியின் அங்கமெல்லாம் மிகப் பொங்கி வழிந்திடும் அன்பு இருக்கிறது. இதை என் மனைவி பார்சலாகக் கட்டும்போது சொன்னபடி நடவாமல் குழப்படி செய்கின்ற எனது மகன் இதற்குள் விரலைவிட்டுச் சுவைத்துப்பாருத்தான். அந்த இனிமை இதற்குள் இருக்கிறது. அதுமாத்திரமா? எனது இளைய குழந்தை-சின்னஞ்சிறு கைக்குழந்தை இதற்குள் அளைந்தது. அந்தத் தெய்வ அமுதமையா இது! என்று பேசுகிறார்.

தங்க வளைக்கைகள் தொட்டுச் சமைத்தது
சாலக் கமுதமையா — இதில்
அங்க மெலாம் மிகப் பொங்கி வழிந்திடும்
அன்புங் கலந்த தையா.
கொட்டிய உப்புக் கசப்ப தென்றாலும் உள்
கூடி யினிக்கு தையா — இது
விட்டுப் பிரிகையில் சொட்டுக்கண்ணீர் பட்ட
விண் ணின் அமுதமையா.
சொன்னபடி நடவாத துடிப்பயல்
தொட்டுச் சுவைத் ததையா — இது
சின்னஞ்சிறு கைக்குழந்தை அளைந்தது
தெய்வ அமுதமையா.

மனைவியின் அன்பைப் புதிய வடிவத்திலே – புதிய உத்தி முறையிலே பாடி நம்மை எல்லாம் மகிழ்வித்திருப்பவர் யார்தெரியுமா? ஆனந்தத் தேன் என்ற சிறந்த கவிதை நூலின் ஆசிரியரும் பலாலி அரசினர் ஆசிரியர் கழகத்தின் விரிவுரையாளரும் ஆகிய கவிஞர் க. சச்சிதானந்தன் அவர்களாவார். கதையை இரசித்த இரசிகமணியின் பார்வைக் கோணங்கள் எத்துணை அற்புதமானது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *