32 வருடங்களுக்கு முன் யேர்மனியில் வெற்றிமணி பத்திரிகையில் வெளிவந்தஒரு தாயகப் பயணக்க கட்டுரை. ஒரு காலத்தின் கண்ணாடியாக.
மார்க், பிராங், பவுண்ஸ், டாலர்.. மருதனாமடச் சந்தையிலே சங்கமம்!
உலகிலேயே வாகன இலக்கங்கள் தமிழோடு பவனிவரும் ஒரே நாடு…
– மணிப்புறா
எத்தனையோ ஏக்கங்களுடனும் மனப்பீதியுடனும் இலங்கை இராணுவத்தின் சோதனைகளுக்குச் சென்று, பற்றி நீக்கப்பட்ட விளையாட்டுப் பொருட்களுடன் வெளியேறினேன். கையில் இருந்த பொம்மை பாடவில்லை என்று என் மகள் அடம் பிடித்தாள். “பொம்மைக்கே இக்கதி என்றால், இராணுவ முகாம்களுக்குள் பல வருடங்களாகச் சிறையிலிருக்கும் தமிழர்களின் நிலை எப்படியிருக்கும்?” என எம் மனம் ஒரு கணம் சிந்திக்கத் தவறவில்லை.
தமிழ்ப்பகுதியில் தமிழரின் நிர்வாகத்தின்கீழ் இருக்கும் தாண்டிக்குளம் எல்லையை அடைந்தோம். அங்கே வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்குப் பிரத்தியேகமான பிரிவு அமைக்கப்பட்டிருந்தது. சற்று மனம் தளர்ந்தாலும், “தாய்நாட்டிற்குத் தானே செல்கிறோம்” என்ற தைரியத்தில் உள்ளே சென்றோம். இன்முகம் காட்டி அவர்கள் எம்மை வரவேற்று, இனிய தமிழில் உரையாடினார்கள். எமக்கு யாழ் செல்வதற்கான அனுமதி அட்டையையும் (Pass) தந்தார்கள். அவர்களின் இனிய உபசரிப்பில், நான் போட்டிருந்த அவர்கள் பற்றிய தப்புக் கணக்கு வெட்கத்துடன் விடைபெற்றுக் கொண்டது.
பல போக்குவரத்து கஷ்டங்களுக்கு மத்தியில், கிளாலிக் கடல் மூலம் யாழ்குடாநாட்டிற்குள் பிரவேசித்தேன். கடல் பயணத்தின்போது கடற்புலிகள் பாதுகாப்பு வழங்கியதோடு, பயண ஆரம்பத்தில் படகோட்டி, படகின் நிலை, படகில் அமர்ந்துள்ளவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றைத் தீவிரமாகக் கண்காணித்துப் படகைச் செல்ல அனுமதித்தனர்.
படகு விபத்துக்கள் நேராது பாதுகாக்க அவர்கள் எடுக்கும் முயற்சி மகாத்தானதே. பிரயாணம் ஒவ்வொன்றிற்கும் ரூபாய் 20 முதல் 250 ரூபாய் வரை அறவிடப்பட்டது. யாழ்ப்பாணம் சென்றதும் பாலைவனத்திற்குள் மலர்களைக் கண்டு திகைத்தேன். அவர்களின் முகத்தில் எந்தப் பரபரப்பும் தெரியவில்லை. அன்றாடம் தங்கள் அலுவல்களைச் செய்தவண்ணம் இருந்தனர். குண்டுவீச்சு விமானங்களுக்கு, மழைக்கும் இடிக்கும் ஒதுங்குவது போன்ற மனநிலையே அவர்களிடம் தென்பட்டது.
வீதிகளில் போக்குவரத்து வாகனங்கள் தமிழ் எழுத்துக்களுடன் கூடிய இலக்கத் தகடுகளுடன் காணப்பட்டன. தனியார் வாகனங்களுக்கும் தமிழீழ அரசு வாகனங்களுக்கும் தனித்தனி எழுத்துக்கள் கொடுக்கப்பட்டிருப்பதை அவதானிக்க முடிந்தது.
கிளிநொச்சியிலிருந்து யாழ் செல்லும் வரை சேரன், சோழன், பாண்டியன் எனத் தமிழ் மன்னர்களின் பெயர்களில் அரசின்கட்டுப்பாட்டின்கீழ் பல கடைகள் காணப்பட்டன. உணவுப் பொருட்கள் மற்றும் சுயஉற்பத்தியில் உருவாக்கப்பட்ட தரமான குளிர்பானமும், இனிப்பு வகைகளும் தாராளமாகக் கிடைக்கக்கூடியதாக இருந்தது.
வல்லிபுரக் கோயிலில் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. கோவிலின் கோபுரம் புதிதாக அமைக்கப்பட்டிருந்தது. மக்கள் வெள்ளம் கரைபுரண்டோடியது. தாய் மண்ணில் நின்ற மூன்று வாரங்களும் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் பேறு பெற்றோம்.
இதுவரை காலமும் வெளிநாட்டில் உழைத்த பணத்தைக் கொழும்பில் செலவு செய்த தமிழர்கள், இன்று திருநெல்வேலி சந்தையிலும், கொடிகாமச் சந்தையிலும், மருதனாமடச் சந்தையிலும் செலவு செய்து மகிழ்வதைக் காணக்கூடியதாக இருந்தது. வெளிநாட்டில் கடுங்குளிருக்கு மத்தியில் உழைத்த கஷ்டத்தை மறக்க வைத்த சொந்த மண்ணை மறக்க முடியாது திரும்பினோம்.
யாழ்குடாநாட்டை விட்டு வெளியேறுவதற்கான கடவுச்சீட்டினை (Pass) பெறுவதற்குப் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருந்த நிலையத்தில் அனுமதிக்கு விண்ணப்பித்தோம். அங்கு குடும்ப அட்டையோ அல்லது பவுண் கட்டும் படியோ எதுவும் கேட்கப்படவில்லை. ஆனால், குடும்ப அட்டை உள்ள ஒருவர் ஒரு மாதப் பிணைக்கு நிற்கும்படி கோரப்பட்டது. அதன் பின்னர் எனக்கு அனுமதியும் வழங்கப்பட்டது.
குடாநாட்டை விட்டு நாம் வெளியேறி எந்தத்தவறான செயல்களிலும் நாம் ஈடுபடாதவிடத்து, நமக்கு பிணை நின்றவரது பிணை தானாகவே இரத்து ஆகிவிடும். இவை சில சமயங்களில் மக்களுக்குக் கஷ்டமாகத் தோன்றினாலும், தமிழீழப் பகுதியைக் கட்டுப்பாட்டிற்குள் சுதந்திர நாடாக வைத்திருப்பதற்கு இக்கடினங்களை நாம் பொறுத்துத்தான் கொள்ள வேண்டும். நன்றி: வெற்றிமணி ஆவணி 1994
![]()
